ஜூன் 17, 2013

காதல் கடிதம்

காதலுடன் என்னவளுக்கு,
 முதல் வரியில் நானே ஏற்படுத்திய சொந்தம் உனக்கு அதிர்ச்சி தந்திருக்கலாம்.உன்னை பார்த்தபோது நான் அதிர்ந்ததை விட நீ அதிர்ந்திருக்கவே முடியாது.முதல் பார்வையிலேயே காதல் என்று சொல்ல முடியாது.ஏதோ ஒன்று ஈர்த்திருந்தது.அன்று என்னை ஒருமுறைப் பார்த்தாயோ? நான் உன்னைப் பார்த்த சில வினாடிகளில் ஒரு வினாடி.என்னையும் நீ கவிஞனாக்கிய ஒரு நொடி


வெளியில் சுற்றாதே என்றால் கேட்கிறாயா?
இப்போது பார் அகராதியில் அழகு என்பதுக்கு உன் பெயரை
அர்த்தமாய் அச்சிட்டிருக்கிறார்கள்!

உம்.அப்படித்தான் தோன்றியது.அழகு தேவதை இல்லை நீ .தேவதைகளின் அழகே நீதான். உன்னைப் பார்த்தபின் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? படிக்கலாம் என்று புத்தகம் எடுக்கிறேன், எழுத்துகள் ஒரு கோர்வையாய் அமைந்து உன் உருவம் வரைகிறது.மனமோ உன் நினைவுகளில் அலைகிறது.என்ன மாதிரியான ஒரு உணர்வு இது?

உன் நினைவுகளுடனான தனிமை எனக்குப் பிடித்தது.உன் பெயர் தெரிந்துகொள்ள மட்டும் நண்பர்களோடு இருந்தேன்.
நீ புத்தகப்பையை ஒரு தோளில் போட்டு என் வகுப்பைத் தாண்டி உன் வகுப்பறை செல்லும் நேரமே எனக்கு பிடித்த நேரமாயிற்று.சில சமயங்களில் உன் நடுவிரல் பட்டும் மோதிரவிரல் பட்டும் படாமலும் தலைமுடி விலக்குவாயே அந்த நிகழ்வுக்காய் காத்திருந்து இருக்கிறேன்.

நீ தலை சீவும் வேளைகளில் 
தலைமுடியோடு 
காதல் கொண்டது சீப்பு!

நீ போகும்பொதெல்லாம் என் பெயர் சொல்லிக் கத்துவதும்,உன் வகுப்பு பையன்களோடு வேண்டுமென்றே சண்டையிடுவதும் என காலம் கடந்தாலும் ஒருநாள் கோபமாய் என் பக்கம் வந்தது இப்போதும் நினைவிருக்கிறது."என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? இதெல்லாம் நல்லா இல்ல" என்றாய்.அன்றுதான் உன் குரலை முதல்முறையாகக் கேட்டேன்.புருவங்கள் மேலேறி என்ன ஒரு கோபம்?

        கூகுள் மொழிபெயர்ப்பை
        தோற்கடித்தது செல்லம்
         உன் சிணுங்கல்!


எனக்குரிய விசேஷமே எவ்வளவு லொள்ளு பண்ணினாலும் ஒன்றும் தெரியாதவன்போல முகத்தை வைத்துக்கொள்வதுதான்.சில பையன்களுக்கே உரிய குறும்புத்தனம் அது.அன்றும் அப்படித்தான்.தப்பென்றால் மன்னித்துவிடு.
நீ பேருந்து நிறுத்ததில் நிற்கும்போது உனக்கு அருகே நிற்காமல் எதிரே நிற்பேன் நான்.வேறெங்கோ பார்ப்பதுபோல் பாசாங்கு செய்து என்னைப் பார்ப்பாயே.அதற்காகவே பல மணி நேரம் முன்பிருந்து காத்திருந்து இருக்கிறேன் நான்.

ஒருநாள் என்ன நினைத்தாயோ நீதான் என் அண்ணா என்று ராக்கிக்கயிறை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய்.என் படுபாவி நண்பர்கள் செய்த ஏற்பாடுதான் அது என்று பின்னர் தெரிந்தது.அன்றைக்குத்தான் தெருத்தெருவாய் ஓடிப்பிடித்து விளையாடினோம்.நினைவிருக்கா?இவன் கட்ட விட மாட்டான் என்று தெரிந்தே துரத்தினாயா?

உன் நினைவுகள் என்னோடு நிறைய இருப்பினும் உன் மேலுள்ள என் காதல் எழுத்தால் விவரிக்க இயலாதது.நீ கதறி அழுத அந்த கடைசி நாளும் நினைவிலேயே இருக்கிறது.உன் கண்ணீரைத் துடைக்க ஆசைதான் அன்று.கொஞ்சம் கல் நெஞ்சக்காரன் நான்.அதனால்தான் மூன்று வருடங்கள் கழித்து ஒரு கடிதம்."எவ்வளவு நாள் என்ன நினைச்சுட்டு இருக்க போறான்?" என் நண்பனிடம் ஒருநாள் கேட்டாய்.மரணம் தாண்டியும் உன் நினைவுகள் இருக்கும். உன்னோடு வாழப்போகிறேனா இல்லை உன் நினைவுகளோடா? என்பது உன் பதிலிலே இருக்கிறது.சில வரிகள் உனக்கு கோபமூட்டினாலும் ஒரு சிறு புன்னகைக்கான ஆரம்பம் உன் இதழோரம் வெளிப்படுகிறதே அதுவே நம் காதலின் ஆரம்பமாய் இருக்கட்டும்.நிராகரிப்பாய் இருந்தால் உடனே முடிவை சொல்லாதே இன்னும் கொஞ்சநாள் வாழட்டுமே என் காதல்.