ஆகஸ்ட் 28, 2015

ஓணம் -கதைகளும் கலைகளும்

ஓணம் கேரளத்தின் அறுவடைத் திருவிழா. 'காணம் விற்றாவது ஓணம் உண்ண வேண்டும்' என்பது முதுமொழி.உங்களிடமிருக்கிற நிலத்தை விற்றாவது ஓணம் கொண்டாட வேண்டுமாம்! இது ஒரு பெருமையை எடுத்துக்காட்டும் வகையிலே தோன்றினாலும் காணம் விற்று ஓணம் உண்டவர் உண்டென்கிறார்கள்.

இது விவசாயி அறுவடையைக் கொண்டாடும் விழா என்றாலும் வழிவழி வரலாறு வைதிகம் சார்ந்தது. மகாபலி எனும் மன்னன் பெரும் கொடையாளனாய் இருந்தவராம்.யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவர். மேலோகத்தையும்,பூலோகத்தையும் தன் சொத்தாய்க் கொண்டவர். மகாபலி ஆண்ட காலத்திலே, மனிதர்கள் எல்லாரும் வேறுபாடின்றி வாழ்ந்தார்கள் என்றொரு பாடல் கேரளத்தில் இருக்கிறது. வேறுபாடின்றி மனிதன் வாழ்வது கடவுளருக்கும், கடவுளரின் பெயர் சொல்லி வயிறு வளர்ப்பவருக்கும் பிடிக்காது என்பதால் விஷ்ணு வாமன அவதாரம் எடுக்கிறார். தன்னைவிட கொடையாளன் எவனும் இல்லை எனும் மகாபலியின் அகங்காரத்தை அழிக்க இரவலனாய் செல்கிறார் விஷ்ணு.

மகாபலியிடம் தனக்கு மூன்று அடி இடம் வேண்டுமென்கிறார் வாமனன். மகாபலி ஒப்புக் கொள்ள, மாபெரும் உருவம் எடுத்து ஒற்றை அடியில் மேலோகம் முழுவதிலும் கால் பதிக்கிறார் விஷ்ணு. இரண்டாம் அடியில் பூலோகம் முழுவதையும் தனக்கானது ஆக்குகிறார் வாமனன். மூன்றாம் அடி வைக்க இடமின்றிப்போக தனது தற்பெருமையை உணர்ந்து தன் தலைமேலே கால் வைக்க இறைவனைக் கேட்க , வாமனன் தலைமேலே கால் வைத்து  மகாபலியை பாதாளத்தில் புதைத்து, தானே அனைத்துக்கும் அதிபதி என நிரூபிக்கிறான்.

மகாபலி பாதாளம் செல்வதற்குமுன் வருடந்தோறும் தன் மக்களை வந்து பார்க்க வேண்டுமென வாமனனிடம் அனுமதி பெறுகிறான். அப்படியாக வருடந்தோறும் மகாபலி மக்களை பார்க்க வரும் நாளே ஓணம். ஆவணி மாதத்தின் திருவோணநாள்.

இந்த கதையை கவனிக்கிற பொழுது வைதிகம்தான் உலகிற்கே அதிபதி என்ற பொருளைப் பரப்புகிற அதே வேளையில் , உலகத்தையே ஏன் மேல் உலகத்தையே ஆண்டவன் மகாபலி என்கிற கேரளியன்தான் என்று பொருள் தொனிக்கும் இனவாதத்தை தொட்டு செல்கிறது. பாதாளம் சென்ற பிறகு அங்கேயும் மகாபலிதான் ஆண்டாராம். அங்கே யாரை ஆண்டாரென்று தெரியவில்லை.

இது தவிர வேறு சில கதைகளும் உண்டு. விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து கொன்ற ஹிரண்யனின் பேரன்தான் மகாபலி. ஹிரண்யனுக்கு இரு மனைவிகள். திதி,அதிதி. திதியின் புதல்வர்கள் அசுரர்கள். அதிதியின் புதல்வர்கள் தேவர்கள். மகாபலி அசுர மன்னன். மகாபலியின் புகழ் பொறுக்காத அதிதி , விஷ்ணுவிடம் வேண்டி அசுர மகாபலியை அழித்ததே ஓணம் என்கிறார்கள்.
விஷ்ணுவின் அவதாரமான பரசுராமன் தன் கையிலிருந்த கோடரியை எடுத்து எறிந்தபொழுது அது சென்று விழுந்த இடமே கேரளம், அந்த நாளே ஒணம் என்கிறார்கள். கேரளத்தை உருவாக்கியவரே பரசுராமன்தானாம்.

ஓணம் வித,விதமான உணவுகளோடு, உடைகளோடு, கலை அம்சமுடைய விளையாட்டுகளோடு கொண்டாடப்படுகிறது.
ஓணம் அத்தம் முதல் திருவோணம் ஈறாக பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களும் பூக்களைக் கொண்டு கோலம் இடப்படுகிறது. முதல்நாள் ஒரு பூ, இரண்டாம் நாள் இரண்டு பூ என்று ஓணமன்று பத்து பூக்களைக் கொண்டு கோலம் போடுகிறார்கள். ஆண்கள் பூ பறித்துதர பெண்கள் கோலம் இடுவார்கள்.

விளையாட்டு சார்ந்த கலைகளாக ஓணம் நாளில் திருவாதிர களி அல்லது கைகொட்டி களி, புலிக்களி அல்லது கடுவ களி, கும்மாட்டிக்களி, தும்பி துள்ளல் போன்றவை உள்ளன.

புலிக்களி என்பது புலி போல வேடமிட்டு , புலி போல ஆடி மக்களை மகிழ்விப்பதாகும். திருவாதிர களி என்பது ஒரு விளக்கை சுற்றி பெண்கள் ஓணம் சார்ந்த பாடல்கள் பாடி, பாடலுக்கேற்ப ஆடுவதாகும். சில வேளைகளில் ஆண்களும் ஆடுவார்கள். கும்மாட்டிக்களியில் கடவுளர் வேடமிட்டு உடல் முழுக்க புல்லை ஆடையாய் அணிந்து கொண்டு வீதி வீதியாய் செல்வார்கள்.

தும்பி துள்ளல் என்பது பெண்கள் விளையாடுவது. முக்கிய பங்கேற்பாளராக ஒரு பெண் மையத்தில் அமர அவரைச் சுற்றி மற்ற பெண்கள் வட்டமாய் அமர்வார்கள். முக்கிய பங்கேற்பாளர் தும்பைப் பூக்கொத்தை கையில் வைத்து ஓணம் சார்ந்த பாட்டு பாடிய படியே ஒரு துள்ளல் நிலைக்கு செல்வார். மற்றவர்கள் கைதட்டி ஊக்கமூட்ட ஏறக்குறைய மயக்க நிலையில் தும்பி துள்ளல் முடியும். முக்கிய பங்கேற்பாளர்தான் தும்பி.தும்பி என்றால் தட்டான். ஒரு தட்டான் போல சுழன்று,பறந்து ஆடுவதே தும்பி துள்ளல்.

ஆக கட்டுக்கதை வரலாறுகளை புறந்தள்ளி இன,மத வேறுபாடின்றி மக்கள் கூடுதலை மகிழ்வோடு கொண்டாடுவோமாக அது ஓணமானாலும், பொங்கலானாலும்.