பூங்காற்றுடன் பேசும் சின்னப்பையன்

2013ல் இவற்றை எழுதுகிறபொழுது இலக்கிய வாசிப்பெல்லாம் பெரிய அளவில் இல்லை. தபுசங்கரின் கவிதைகளை ரசித்துக்கொண்டிருந்த காலம். வைரமுத்து போல நாமும் வந்துவிடவேண்டும் என வெறிகொண்டிருந்த காலம் அல்லது பேராசை கொண்டிருந்த காலம். இன்று இதைப்போல் எழுத முடிவதில்லை. அன்று காதல் ஒரு பெரிய ஆச்சரியமாய், அற்புத உணர்வாய் என் கண்முன் விரிந்து என்னைத் திக்குமுக்காடச்செய்து கொண்டிருந்தது. இன்று காதலின் புனித பிம்பத்தையே உடைக்கும் வகையில் எழுத வேண்டும் என்கிற வெறி எனக்குண்டு. அன்று பூங்காற்றோடு பேசிக்கொண்டிருந்த சின்னப்பையன் நான். இன்றைக்கும் நான் சின்னப்பையன்தான் ,ஆனால் புயலோடு விளையாடிக்கொண்டிருக்கிறேன்.
**************************************

சொற்கள் தன்னை அலங்காரம் செய்யட்டும்

பற்கள் அதன்மேல் காதல் கொள்ளட்டும்

வட்ட நிலவு வேடிக்கை பார்க்கட்டும்
நட்டம் என்ன வந்துவிடும் உனக்கு?

உதடுகள் இரண்டும் காதல் கொள்ளட்டும்

உணர்வுகள் என்னை நீங்கிச் செல்லட்டும்

மோக நினைவுகள் மூச்சிறைக்க வைக்கட்டும்

தேவதை பேசி உலகம் கேட்கட்டும்
தேன்தேடி வண்டுகள் எங்கும் பறக்கட்டும்

வெட்கம் வந்துன்னை வாங்கிப் போகட்டும்
தயக்கம் உன் நாவில் தற்கொலை செய்யட்டும்

குயில்கள் உன் குரல்கேட்டு மௌனம் கொள்ளட்டும்
மயில்கள் நடனத்தை மறந்து போகட்டும்

சின்னப்பையன் கொஞ்சம் பிழைத்துப்போகட்டும்
அதற்கேனும் சீக்கிரம் சொல்லிவிடு
உன் பெயர் என்ன?

*************************
என்னைப் பார்த்தால் மட்டும்
தன்னை மறந்து துடிக்கிறதே உன் இமைகள்

என்னைப் பார்த்தால் மட்டும்
தோழியின் கைபிடிக்கிறதே உன் ஐவிரல்கள்

என்னைப் பார்த்தால் மட்டும்
வித்தியாசப்படுகிறதே உன் புன்னகை

என்னைப் பார்த்தால் மட்டும்
வியர்க்கிறதே உன் நெற்றி

என்னைப் பார்த்தால் மட்டும்
ஊமையாகிறதே உன் குரல்

என்னைப் பார்த்தால் மட்டும்
மெதுவாய் ஒலிக்கிறதே உன் கொலுசு

என்னைப் பார்த்தால் மட்டும்
ஆடி ஆடி அலுக்கிறதே உன் கம்மல்

உண்மையை சொல்லிவிடு
உனக்கும் என்மேல் காதலா?
**********************************
தன் இரத்தத்தைப் பாலாய்த் தந்தாளே அவளைக் காதலித்திருக்கிறாயா ஒருமுறையேனும்?

தன் வியர்வை சிந்தி உனக்கு சோறு தந்தானே அவனைக் காதலித்திருக்கிறாயா ஒருமுறையேனும்?

தமிழின் எழுத்தை உனக்குப் பயிற்றுவித்தாளே அவளைக் காதலித்து இருக்கிறாயா ஒருமுறையேனும்?

பூனைகளை,நாய்களை, குழந்தைகளை, மரணப்படுக்கையில் கிடந்தோரை காதலித்து இருக்கிறாயா ஒருமுறையேனும்?

அருவிகளை, இசையை, மழையை, மவுனத்தை, காதலை காதலித்து இருக்கிறாயா ஒருமுறையேனும்?

உன்னை முதன்முதலில் கைகளில் ஏந்திய செவிலித்தாயை காதலித்து இருக்கிறாயா ஒருமுறையேனும்?

சிரிப்பை, சிந்தனையை, கலையை, கவிதையை, கண்ணீரை , கவலையை காதலித்து இருக்கிறாயா ஒருமுறையேனும்?

இனியும் சொல்லாதே காதலில் தோற்றேன் என்று.
***********************************
காதலைத் தவிர்த்தும் சிலவற்றை முயன்றிருக்கிறேன். அவைகளில் என் கருத்து இன்னமும் மாறாமல்தான் இருக்கிறது.
ரசிகனாய் இரு என்ற இந்த கவிதை(?) எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன் சிறிதுகாலம் முன்னெடுத்த இன்மை இணைய இதழில் வெளிவந்தது.

தலைவா என்று கத்து

தடுப்பவனைக் கெட்டவார்த்தையில் திட்டு

தலைவனைப்போல் புகைவிடு

தலைவனைப்போல் நடையிடு

தலைவனைப்போல் காதலி

தலைவனையே காதலி

உன்னை நீ இழ

தலைவனைப் பரப்பு

தலைவனைப்போல் நடி

தலைவனைப் பிரதியெடு

ரசிகர்மன்றம் வை

தலைவனைச் சந்தி

கையெழுத்து கேள்

வீட்டில் படம் எடுத்து மாட்டு

தலைவனுக்காய் சண்டையிடு

சிறையில் கிட

தலைவனை வாழ வை

நீ செத்துப்போ.

************************************

அழுகை வருகிறதா?
கதறி அழு

சிரிப்பு வருகிறதா?
உரக்கச் சிரி

கோபம் வருகிறதா?
காகிதம் கிழி

வெட்கம் வருகிறதா?
கைபுதை கண்களில்

துக்கம் வருகிறதா?
அருகிலிருப்பவனை அணை

காதல் வருகிறதா?
கொஞ்சம் பொறுத்திடு

மறுபடி காதல் வருகிறதா?
விரைந்து உரைத்திடு

கர்வம் வருகிறதா?
பதவி துற

ஆணவம் வருகிறதா?
மனிதனோடு பழகு.

உன்னை வெளிப்படுத்து

உலகம் இகழ்ந்தால்?
சந்தேகம் வருகிறதா?
ஓரம் வை.

குழப்பம் வருகிறதா?
முதலில் இருந்து படி.

சாவு வருகிறதா?
சந்தோஷப்படு.
******************************************