ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்


வணக்கம் ஜெ,

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது ஏதாவது ஒரு பிரபல நடிகரின் திரைப்படம் வெளியாகிவிட்டால் நிச்சயம் ஒரு வாரத்திற்கு உள்ளாவது பார்த்துவிட வேண்டும். இல்லையேல் சமூகத்திற்கு எதிராய் மிகப்பெரிய குற்றமிழைத்தவன்போல் நம்மைப் பார்ப்பார்கள். இன்னும் நீ தல/தளபதி/தலைவர் படத்தைப் பாக்கலயா? நீ வாழ்றதே வேஸ்ட் என்பார்கள். மிகைபடுத்திச் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு நிறைய முறை நேர்ந்தது இது.

இந்த அவமானங்களுக்கு அஞ்சியே பிடிக்கிறதோ  இல்லையோ படத்தைப் பார்த்துவிடுவோம். அதன் பிறகு அடுத்த பிரபல நடிகரின் படம் வருகிறவரை இந்தப் படத்தைப் பற்றிய விவாதம் ஓடிக்கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் இயக்குனர் அளவிற்கு பேசிக்கொண்டிருப்பார்கள். சினிமாவைத் தவிர்த்த வேறு விவாதங்கள் எல்லாம் பெரும்பாலும் இருக்காது. எப்போதாவது சிறு குழுக்களுக்குள் அரசியல் விவாதம் இருக்கும். இலக்கியம் எல்லாம் கிடையாது. ஏனென்றால் யாருக்கும் தெரியாது.

உண்மையில் இந்த விவாதங்களில் தனித்து விடப்படலை எவனும் விரும்பமாட்டான். அதற்காகவாவது புதிய படத்தை அப்பொழுதே பார்த்துவிடத்துடிப்பான். முதல்நாள் முதல்காட்சியை கல்லூரியைக் கட் செய்துவிட்டு பார்க்கிறவனைத்தான் திரையில் பார்த்த நாயகனின் பிரதியாக கல்லூரிக் குழுக்கள் ஏற்றுக்கொள்ளும். அப்படி நாயகனாக விரும்புகிற ஒவ்வொருவனும் முதல்நாள் முதல்காட்சியைப் பார்க்கத் துடிப்பான். அது ஒரு கவுரவப் பிரச்சனை.

சமூகவலைதளங்களில் இன்னொரு கூட்டம் உண்டு. ஒரு நடிகரை இகழ்ந்தும் இன்னொருவரைப் புகழ்ந்தும் பதிவு செய்வார்கள். அதற்குப் பிறகு கல்லூரி விவாதத்தின் நீட்சியாக அங்கே வந்து இளைஞர்கள் மாறி மாறி வசை பொழிவார்கள். சாதாரண வசைகள் அல்ல. தனக்குப் பிடிக்காத நடிகரைப் பற்றி, அவர் குடும்பத்தைப் பற்றி, அவர் ரசிகனின் தாயைப் பற்றிய வசைகளை, அவன் பிறப்பைப் பற்றிய வசைகளைச் சொல்வார்கள்.

என் நெருங்கிய நண்பனொருவன் ஒருமுறை அவனுக்குப் பிடித்த நடிகரைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் பேசியதற்காக என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டான். வலிக்குது என்று பலமுறை கத்திய பிறகுதான் விட்டான். அவனிடம் ஊறியிருந்த அந்த வன்மம் நான் எதிர்பாராதது. பல ஆண்டு நட்பைக்கூட உதாசீனப்படுத்திவிடக்கூடிய மனநோயை ,சினிமா தமிழ்ச்சூழலில் கொண்டுவந்திருப்பதை என்னால் அன்றைக்கு நம்பவே முடியவில்லை.

தமிழகத்தில் சினிமா இப்படிப்பட்ட நிலையை தமிழர் வாழ்வியலில் அடைய முக்கியக்காரணம் குழு மனப்பான்மையை இளைஞர்கள் முன்னெடுப்பது என்று தோன்றுகிறது. சமூக நன்மைக்காய் ஒருபோதும் இக்குழு திரள்வதில்லை என்பது நமக்குத் தெரிந்ததே. பெரும்பாலான சமூகப் பிரச்சனைகளில் குழு மனப்பான்மைதான் நம்மை வழி தவறச் செய்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. மைய நீரோட்டத்தில் கலக்காத ஒருவனாக, தனித்தியங்கும் ஒருவனைச் சூழல் தொடர்ந்து புறக்கணிக்கிறபொழுது அவனும் குழு மனப்பான்மைக்குள் இணைந்துவிட வேண்டிய தேவை வந்துவிடுகிறது.

ஒரு பெண் நம்மை கடந்துபோகிறாள் என்று கொள்வோம். நாமும் தனியாக இருந்தால் அவளைப் பார்த்து வெறுமனே புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டுக் கடந்துவிடுவோம். குழுவாக இருந்தால் நினைத்துப் பாருங்கள். அந்தப் பெண்ணை வெட்கப்படச்செய்து, கூனிக்குறுகச் செய்துவிடுவோம். கலப்புத் திருமணம் பெற்றோர் சம்மதமின்றி செய்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு அதை ஏற்றுக்கொள்ளப் பெற்றோர் முன்வந்தாலும் அதைத் தடுப்பது எது? அவர்களைத் தொடர்ந்து வெறியேற்றுவது யார்? சாதிக் குழு என்னும் குழு மனப்பான்மை. சினிமா பைத்தியங்களாய்த் திரிவதும் குழுவாகத்தான்.  இந்தக் குழுவிலிருந்து பிரிந்து தனித்தியங்கும் ஒருவன் மாற்றுச் சிந்தனையை முன்னெடுப்பான். ஆனால் மைய நீரோட்டம், தனித்தியங்குபவனைத் தடுத்துக்கொண்டே இருக்கும். என் வீட்டிற்கு அருகில் எனக்கு நண்பர்கள் இல்லை. குழு மனப்பான்மைக்குள் சிக்கிய கல்லூரி நண்பர்களுடன் தேவையான அளவிற்கே பேசுகிறேன். அதனால் என்னைச் சுற்றிக் குழுக்கள் இல்லை. மகிழ்ச்சியாக, எனக்குப் பிடித்தாற்போல் வாழ முடிகிறது. தனித்தியங்கும் சூழல் ஒவ்வொருவருக்கும் வாய்க்கிறபொழுது, இலக்கிய வாசிப்பு விசாலமாகிறபொழுது இந்த சினிமாசார் சூழல் மாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. இந்த தலைமுறையைவிட படுமோசமாக அடுத்த தலைமுறை உருவாகிக்கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதும் நம்பிக்கை இருக்கிறதா?

அன்புத் தம்பி,
அகில் குமார்

http://www.jeyamohan.in/89127#.V5FI1-t97IU