அரசியல் அறிவியல்

சீமானின் இனவாத அரசியல் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. சீமானின் பேச்சுகள் பெரும் இன உணர்வேற்றக்கூடியவை.  இளைஞர்களை மிக எளிதாக புத்தி மழுங்கச் செய்யும் உத்திகள் அதில் ஏராளம் உண்டு. ஆனால் சீமானைப் பிடிக்காது என்று சொல்வதற்கு சீமானை யாரென்று தெரிந்தால்தானே முடியும். உண்மையாகச் சொல்கிறேன் என் தோழிகளில் பல பேருக்கு சீமான் யாரென்றே தெரியாது. அந்தப் பெயரைக்கூட அவர்கள் கேட்டதில்லை. இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் தேசியம் பேசும் ஒருவரை வெறுமனே கூடவா தெரிந்து வைத்துக்கொள்ள மாட்டார்கள்? பாதிப் பெண்களுக்கு ஜெயலலிதாவும், கருணாநிதியும் எந்தக் கட்சியென்றே தெரியாது. இதைவிடக் கொடுமை என்னவென்றால் முதல்வர் யார், பிரதமர் யார் என்றே தெரியாது. தமிழ்நாட்டு சி.எம் மோடிதானே என்று கேட்பார்கள். மிகைப்படுத்தி சொல்லவில்லை. சந்தேகம் இருந்தால் உங்கள் வீட்டிற்கு அருகில் கல்லூரிக்கு செல்லும், வேலைக்கு செல்லும் பெண்களை சாதாரண அரசியல் கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள். இவர்கள்தான் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை. சூழலில் நடப்பது எதையுமே அறிந்துகொள்ளாமல் வெறுமனே பெண் விடுதலை, பெண்ணியம் என்று பேசினால் எல்லாம் வந்துவிடுமா? அறிவுசார் தளத்தில் நிரூபித்துக்காட்ட வேண்டும். எழுத்தாளர் ஜெயமோகன் நீ அறிவார்ந்த பெண்ணை தேடிக்கொண்டிருந்தால் வாழ்நாளில் மொத்தமாக நான்கு பெண்களை சந்திக்கலாம் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அது எவ்வளவு பெரிய உண்மை  என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். பதினெட்டு வயதில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஓட்டுரிமை கொடுக்கப்பட்டிருப்பது தவறென்றே சொல்வேன். அது அரசியல்வாதிகள் புத்தியில்லாதவர்களை வைத்து தப்பித்துக்கொள்ளும் ஒரு முறை. உண்மையில் இவ்வளவு பேரை முட்டாளாக்கும் கல்விமுறையை வைத்திருப்பது அரசியல்வாதிகளுக்கு ரொம்பவே நல்லதாய்ப் போயிற்று. இனி பல தலைமுறைகளுக்கு அவர்கள் காட்டில் மழைதான். எத்தனை காந்திகள் பிறந்தாலும் இங்கு ஒன்றும் நடக்காது.