அக்டோபர் 30, 2013

முகங்கள்


                                                            
பார்க்கும் இடங்களெல்லாம் முகங்களால் நிரம்பியிருந்தது. அழுத, சிரித்த , கோரமான, அழகென்று சொல்லப்படுகின்ற முகங்கள்.அவன் பேண்டில் கைவிட்டு சிறு கண்ணாடியை எடுத்து தன் முகம் பார்த்தான்.சற்று வெளிறி இருந்தது.சிறு வயதில் ஏற்பட்ட தழும்பு நெற்றி அருகே. மறைக்க முயற்சித்தான்.

தலைமுடியைக் கோதிக்கொண்டு இன்று அடித்த AXE ஏதாவது முகத்தை தன் பக்கம் திருப்புமா என்று பார்க்கலானான்.ஒரு கிழவி அவனைப் பார்த்து சிரித்தாள்.AXEக்கு நன்றி சொல்லி சரக்,சரக் என்று சப்பாத்து தேய நடந்தான்.வேகமாக வந்த பேருந்து ஒன்றுக்கு கை நீட்டி ஏறிக்கொண்டான்.இடம் தேடினான்.

கறுப்பான,சிகப்பான,களைத்த,பொலிவு இழந்த முகங்கள்.ஓர இருக்கையில் கீழே விழாமல் இருக்க கம்பியைப் பிடித்திருந்த துர்பாக்கிய முகங்கள்.தீடீரென்று ஒருவர் எழ ,உட்கார முயன்று மற்றொருவருடன் போட்டியிட்டு தோற்றான்.

சிலபேர் ஓட்டுநரின் பிறப்பை சந்தேகிக்கும் வார்த்தைகளை உச்சத்தில் கத்திக்கொண்டிருந்தார்கள்.சிலபேர் யாருமே சிரிக்காத விஷயங்களுக்கு சிரிக்க முற்பட்டு கொண்டிருந்தார்கள்.சிலபேர் சாலையை வெறித்துக் கொண்டிருந்தார்கள்.ஆங்காங்கே தென்படும் கோவில்களை பார்க்கும்போதெல்லாம் கைகளை அங்கேயும் இங்கேயும் மாற்றி மாற்றி ஆட்டி சிலபேர் ஏதோ செய்துகொண்டிருந்தார்கள்.

குழந்தைகள் அழுது கொண்டிருந்தன.சில்லறை மறந்தவர்கள் நடத்துனரால் அர்ச்சனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.தமிழில் அர்ச்சகராகும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாக சிலபேர் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அவன் இரு கம்பிகளுக்கு இடையே நடனமாடிக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த பெண்ணின் முறைப்பை தொடர்ந்து அவனது நடன அசைவுகள் மாறின.கிழவர்கள் இளைஞர்களையும், இளைஞர்கள் கிழவர்களையும் திட்டிக்கொண்டிருந்தார்கள்.

சாலையில் துப்பிய வெற்றிலைச்சாறு காற்றில் பறந்து முன் இருக்கையில் இருப்பவன் முகத்தில் பட்டதாய் ஒருவன் மற்றொருவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தான்.”இவனுங்களுக்கு  இதே பொழப்பா போச்சு” என்றொருத்தன் தின்றுக்கொண்டிருந்த மிட்டாய் காகிதங்களை சாலையில் வீசினான்.

“டிக்கெட் டிக்கெட்” நடத்துனர் அவனை முறைத்தார்.” “கவெர்ன்மென்ட் காலேஜ்” சரியாக சில்லறை கொடுத்தான்.டிக்கெட்டை வெறித்தான்.ஓட்டுனர் கண்ணாடியில் என்றும் தென்படும் ஏதோ முகம் விடுபடுவது அறிந்து தேடிக்கொண்டிருந்தார்.பேருந்தின் ஓட்டம் குறைந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது.தேவதைகளை அவன் கண்டதில்லை என்பதால் அவளே தேவதை எனக்கொண்டான்.தொப்பையை மறைக்க வயிற்றை பின்புறம் இழுத்து தசையை இறுக்கினான்.”பஸ் 5 நிமிஷம் நிற்கும்” பேண்டைப் பிடித்துக்கொண்டு நடத்துனர் ஓடினார்.

தேவதை அவன் அருகில் வந்ததும் கைகுட்டையை வைத்து மூக்கைப் பிடித்துக்கொண்டாள்.AXEஐ வெறுத்தான்.”வெள்ளரிக்கா, வெள்ளரிக்கா “ வறண்ட நாவுடன் சுருங்கிய தோலுடைய கிழவி கதறினாள்.கதறல் அவனை உறுத்தாவிட்டாலும் ஊறிய எச்சிலால் உந்தப்பட்டு ”வெள்ளரிக்கா எவ்ளோ?” என்றான்.”4 வெள்ளரி 10ரூபா தம்பி” “சரி குடுங்க ,மிளகாப்பொடி தூவுங்க “ எச்சிலை விழுங்கிக்கொண்டே சொன்னான்.வெள்ளரிக்காய் தின்னத் தொடங்கினான்.அவள் முகம் சுளிப்பதை கண்டான்.பெண்களை வெறுத்தான்.

ஒரு சிறுமி ஊமை என்று எழுதப்பட்ட சீட்டுடன் படி ஏறினாள்.ஒரு கையில் வெள்ளரிக்காயோடு மறுகையில் சீட்டைப் பிடித்தான்.அவன் அறிவின் மூலைகளில் சிறுமி ஊமைதானா என உண்மை கண்டறியும் சோதனை நடத்தினான்.ஒன்றும் இல்லையென சைகை காட்டினான்.தீடிரென்று சிறுமி வயிற்றில் அடித்து பசியை முகத்தில் காட்டினாள்.முகத்தில் சாயமிட்டு கடவுள் வேடத்தில் சிலபேர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.சிறுமி வெள்ளரிக்காய் தின்று கொண்டிருந்தாள்.”செய்திகள் ,சூடான செய்திகள் 2 ரூபாய்க்கு “ பேப்பர் வாங்காமல் தலைப்பு செய்தியை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இந்தியாவில் குறைவு- பிரதமர் அறிக்கை. சிரித்துக்கொண்டிருந்தான்.
                                             
பெருங்குரலெடுத்து சிரித்தான். அந்த சிரிப்பு கொஞ்சமாய் இற்று இற்று ஒவ்வொருவர் முகத்திலும் அப்பியது. பேருந்தே சிரித்தது. மாநிலம் சிரித்தது. நாடு சிரித்தது. உலகம் சிரித்தது. கயமையின் துரோகத்தின் பற்கள் பழிப்பு காட்டிச் சிரித்தது. கடைசியில் உண்மைச் சிரிப்பில் தோற்றுப்போய் அழுமூஞ்சியாய் சிரித்தது.பைத்தியக்கார விடுதியின் பூட்டுகள் திறக்கப்பட்டன. உலகமே பைத்தியமானது. நாடில்லை, வீடில்லை,அரசில்லை, பணமில்லை, காதலில்லை, காமமில்லை எல்லா இடங்களிலும் எல்லா முகங்களிலும் சிரிப்பு.ஆனந்த சிரிப்பு, பரமானந்த சிரிப்பு. பெரும் மலையொன்றின் உச்சியிலிருந்து சிரித்துக்கொண்டே குதித்து ஒவ்வொருவராய் உயிர் விட்டார்கள். பறவைகள் சிரித்தது. விலங்குகள் சிரித்தது. உலகெங்கும் ஆனந்தம். அந்த ஆனந்தத்தில் அத்தனையும் கரைந்து சூன்யமாகியது.