ஜூன் 02, 2017

ஏன் எனக்கு ஜெயமோகனைப் பிடிக்கும்?

ஜக்கி வாசுதேவ் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையைப் படித்தபிறகு 'ஜெயமோகனை நிராகரித்தல்' என்றொரு பதிவு எழுதினேன். இன்றைக்கு அதைத் திரும்பவும் படித்துப் பார்க்கிறபொழுது சில வார்த்தைகள் மிகக் கடுமையாக இருப்பதுபோல்தான் தோன்றுகிறது.  இருந்தாலும் அந்தக் கட்டுரைக்கான என்னுடைய எதிர்வினையிலிருந்து நான் பின்வாங்கவில்லை. என் தரப்பு அதுவேதான். சிலவற்றை மறந்தும், மன்னித்தும், மன்னிக்கப்பட்டும்தான் இலக்கிய உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனக்கு இலக்கிய உலகில் பிடித்த விஷயமும் அதுதான். ஜெயமோகன் சாருவை, மனுஷை விமர்சிப்பார். சாரு ஜெயமோகனை விமர்சிப்பார்.  அதற்காக அவர்களுடன் உறவை யாரும் துண்டித்துக்கொள்வதில்லை. புகைப்படத்தில் பெயர் போடாததற்காக கடுமையாக விமர்சித்த பிரபு காளிதாஸையே பின்னொரு தருணத்தில் புகழ்ந்தார் ஜெயமோகன். 

உண்மையில் ஜெயமோகன் எனக்கு என் தந்தையைப் போன்றவர். என் அப்பா எனக்கு சோறு போட்டு வளர்த்தினார் என்றால் என் சிந்தனையை வளர்த்தியது ஜெயமோகன்தான். சில வேளைகளில் தந்தையின் செயல்பாடுகளில் மகனுக்கு பெரும் கோபம் வரும். அவன் தன் தரப்பை சொல்லவும் செய்யுவான். ஆனால் அதற்காக தந்தையை முழுமையாக புறக்கணித்துவிட்டுப் போய்விடமாட்டான். ஜக்கி வாசுதேவ் கட்டுரையில் ஜெயமோகன் தரப்பை அறிந்ததுமே நான் அதிர்ந்தேன். நமக்கு பிடித்த ஒருவர் எப்பொழுதும் நமக்கு உவப்பானதையே செய்யவேண்டும் என்று நினைப்போம்.  ஆனால் முற்றிலும் எதிர்பாராத ஒன்றை அவர் செய்துவிடும்போது நாம் நிலைகுலைந்துவிடுகிறோம். மிகக் கடுமையான உணர்வெழுச்சியில் நம் தரப்பை முன்வைக்கிறோம். மிகக் கடுமையான மன வேதனையில் வெளிப்படும் சொற்கள் அவை.

எழுத்தில் ஒரு சுயம், வீட்டில் ஒரு சுயம், வெளியில் ஒரு சுயம் எனத் தனக்கு பல சுயங்கள் இருப்பதாக ஜெயமோகன் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார். கிறிஸ்துவ, இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரான அவர் கருத்தியலையும் அவருடைய ஒரு சுயமாகவே கருதுகிறேன். அதை அவரது அரசியல் சுயமென்று கொள்ளலாம். அந்த சுயத்தை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். அது எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அதைத் தவிர்த்து மனித வாழ்வு குறித்த அவரின் எழுத்தின் சுயத்தை நிச்சயமாக என்னால் புறக்கணிக்கமுடியவில்லை.

ஜெயமோகன் என்ற பெயரை முதன்முதலில் சாரு நிவேதிதா விமர்சகர் வட்டத்தில்தான் பார்த்தேன். யார் இவர் என்று தேட ஆரம்பித்தேன். ஜெயமோகனின் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். அதில் பாதி எனக்கு புரியவே இல்லை. இவர் தமிழின் மிக மிக முக்கியமான ஆளுமை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தேன். நான் அப்பொழுது கவிதைகள் என்ற பெயரில் சிலவற்றை எழுதிக்கொண்டிருந்தேன். புதிதாக எழுதுகிற எவனுக்கும் நான்கு, ஐந்து வரிகள் எழுதிவிட்டாலே தானொரு பெரிய கவிஞன், எழுத்தாளன் என்ற நினைப்பு வந்துவிடும். அந்த அகங்காரம் எனக்கும் இருந்தது. யாருமே எழுதாதவைகளை நான் எழுதிவிட்டதாக பூரிப்படைந்தேன். அந்த அகங்காரத்தோடு ஜெயமோகனுக்கு அவற்றை அனுப்பிவைத்தேன். நானே நம்பாத வகையில் ஜெயமோகனிடமிருந்து அதற்கு பதில் வந்தது. நவீன கவிதைகள் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத எனக்கு அன்று அவர் பதில் எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் தமிழ்கவிதையில் தினையளவுகூட இடம் இல்லாத எனக்கு அவர் பின்வருமாறு எழுதினார்.

" அன்புள்ள அகில்,
தமிழில் நூறாண்டு வரலாறு உள்ள ஒரு புதுக்கவிதை இயக்கம் உள்ளது. அது உருவாக்கிய சிறந்த கவிதைகளை வாசியுங்கள். அந்த மரபின் தொடர்ச்சியாக அடுத்த படியாக நின்று எழுத முயலுங்கள். இக்கவிதைகள் மிக தொடக்ககால கவிதைகள். வெறும் எண்ணங்கள் இவை. தமிழினி வெளியிட்டிருக்கும் கொங்குதேர் வாழ்க்கை பகுதி 2 நாநூறுக்கும் மேற்பட்ட நவீனக் கவிதைகள் அடங்கியது"

விமர்சனங்கள் எவருக்குமே கடுமையான கோபத்தை ஏற்படுத்தக்கூடியவை. புதிதாக எழுதுகிறவன் பாராட்டுகள் குவிய வேண்டுமென்று நினைப்பான். புகழ்ச்சிக்காக ஏங்குவான். அவன் அகங்காரம் நிறைந்த சுயம் விமர்சனத்தை ஏற்கவே ஏற்காது. "வெறும் எண்ணங்களா இவை?" என்று எனக்கு கடுமையான கோபம் வந்தது. ஜெயமோகனுக்கு ஒன்றுமே தெரியாது, என்மீது பொறாமைப்படுகிறார் என்று நினைத்துக்கொண்டேன். பின்பு சில உண்மையான கவிதைகளைப் படித்தபின்புதான் நான் எழுதியது என்னவென்றே எனக்குப் புரிந்தது. ஜெயமோகன் மீதிருந்த கோபம் அகன்று மறுபடியும் அவர் தளத்தையும், கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். அவருக்கு கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன். கடைசியாக "இதை என் தனிப்பட்ட அழைப்பாக எடுத்துக்கொண்டு நீ விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு வரவேண்டும் " என்று எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என் மின்னஞ்சலை பல தளங்களில் நான் கொடுத்திருந்ததால் குவிந்துகிடக்கும் மின்னஞ்சல்களில் அவரது மின்னஞ்சலை கவனிக்காமல் விட்டுவிட்டேன். மிகத்தாமதமாகத்தான் பார்த்தேன். வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனாலும் தீவிரம் இல்லாதவர்கள் என்னோடு பழகக்கூடாது என்று சொல்பவர் அவர் என்பதால் அதற்குமேல் எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதற்குப் பிறகுதான் இந்த ஜக்கி வாசுதேவ் கட்டுரை வந்தது. அதற்கு எதிர்வினை எழுதியபின்பு ஜெயமோகனை வாசிப்பதே இல்லை. ஆனால் சலித்துப்போய்விட்ட காதல் திடீரென ஒருநாளில் மீண்டும் புதிதாக அரும்புவதுபோல் ஜெயமோகனை மீண்டும் இப்பொழுது வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

எனது சிந்தனைகள் என் வாழ்க்கையில் இதுவரை அடைந்த அனுபவங்களிலிருந்து நான்  உருவாக்கி எடுத்தவை. ஆனால் அதை மேம்பட்ட ஒன்றாக மாற்றியது ஜெயமோகனின் எழுத்துகளே. இருபது, இருபத்திஐந்து வயதில் ஒருவனுக்கு அவனுக்கான சுயம் உருவாகியிருக்கும். அவனுக்கான ஆளுமையை ஒருவன் அமைத்துக்கொண்டிருப்பான் . அப்பா, அம்மா யார் சொல்வதையும் கேட்கமாட்டான். நானும் எனக்கான ஆளுமையை அமைத்துக்கொண்டேன். ஆனால் என்னால் முடிவுசெய்ய முடியாத தருணங்களில் எனக்கு ஒருவருடைய உதவி தேவைப்பட்டது. நம் சூழலில் இப்படிப்பட்ட இளைஞர்களுக்கு உதவி செய்ய யாருமேயில்லை. கண்டிப்பதற்கு ஆயிரம்பேர் இருக்கிறார்கள், கற்பிப்பதற்கு யார் இருக்கிறார்கள்? காதலில் தோல்வி அடைந்து மனமுடைந்த நாளில் ஜெயமோகன் தளத்துக்கு சென்று காதல் என்று தேடியபோது

" காதல் என்பது நடக்காமலே போய்விடுகிற எத்தனையோ பேர் இருக்கும்போது கிடைக்க வேண்டிய வயதில் அது எவ்வகையிலாவது கிடைக்கிறது என்பதே சிறப்பானதுதான். அது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதுவே வாழ்க்கையல்ல.

காதல் என்பது ஒரு பகடைக்காய் ஆட்டம். அதில் ஆறு ஏன் விழுகிறது, பனிரெண்டு ஏன் விழுகிறது என்று தர்க்கம் செய்ய முடியாது. அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்" என்று சொன்னவர் ஜெயமோகன். நம் சூழலில் ஒரு இளைஞனுக்கு ஒருவரும் இப்படி சொல்வதில்லை. நான் தேடியதெல்லாம் ஜெயமோகனிடம்தான் கிடைத்தது. நான் எனது 'நான்' என்ற அகங்காரத்தை இழப்பது ஜெயமோகனிடம் மட்டும்தான்.
"இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நீ சிறு துளி " என்று ஜெயமோகன் சொல்கிறபொழுது என் இருத்தலின் முக்கியத்துவம் அற்ற தன்மை என்னைத் திடுக்கிடச் செய்கிறது. இவருக்கு மாற்றாக ஒருவரை தமிழ் சூழலில் என்னால் கண்டறியவே முடியவில்லை. ஜெயமோகன் தரப்பு சிலவேளைகளில் தவறாகவே இருந்தாலும் அதற்கு எதிராக சரியானத் தரப்பை வைக்கக்கூட இங்கே ஆளில்லை. வெறும் வார்த்தை சீண்டல்களை யாரும் நிகழ்த்தலாம். ஆனால் மிகச்சரியான வாதம் வெளிப்பட்டு நான் பார்த்தது இல்லை. கடுமையான உழைப்பின் மூலம் கைவருவது இது. எழுத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துவிட்ட ஒருவராலே இதை செய்யமுடியும். இன்றைக்கு நான் எழுதுவதைப் படித்து ஒரு நான்கு பெண்கள் என்னோடு பேச ஆரம்பிக்கும்போதே என் மனம் எழுதுவதிலிருந்து, வாசிப்பதிலிருந்து வேறு திசைகளுக்கு அலைபாய ஆரம்பித்துவிடுகிறது. இதையெல்லாம் ஜெ இளம் வயதில் எப்படி எதிர்கொண்டார் என்பதெல்லாம் நிச்சயமாக நாம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டியவை.

இன்றைக்கு வாசிக்க வருகிற எந்த இளைஞனுக்கும் சாரு நிவேதிதாவை வாசிக்க ஆர்வமிருக்கிறது. இளமையின் கிளுகிளுப்பை, இளமையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவதை அவர் ஒரு கற்பனை உலகத்தில் உருவாக்குகிறார். சுவாரஸ்யமாக அதைச் சொல்கிறார். அது தரும் இன்பத்தை மறுப்பதற்கில்லை. அடைய முடியாத உடல்களை ஒரு சுய இன்பத்தில் அடைந்துவிடுதல் போன்ற இன்பம் அது. ஆனால் கிளுகிளுப்புகளும், கொண்டாட்டங்களும் முடிந்தபின்பும் மீதமிருக்கும் வாழ்வை ஜெயமோகனே எழுதுகிறார். ஒரு மனிதனின் எந்தவொரு வாழ்வியல் நிலையைப் பற்றியும் ஜெயமோகனிடம் பதில் இருக்கிறது. ஜெயமோகனின்  வாழ்வியல் சார்ந்த கட்டுரைகளை எந்த இளைஞனும் கண்டிப்பாக தவறவிடக்கூடாதென்றே நினைக்கிறேன். திக்கி திணறி நிற்கிற எந்த இளைஞனுக்கும் அவை வழிகாட்டக்கூடியவை. ஒரு தெளிவை கொடுக்கக்கூடியவை. ஆனாலும் ஜெயமோகனே சொல்கிறபடி " என்னை வாசிக்க வேண்டியவன் கண்டிப்பாக அவனே தேடி வருவான்" என்பதற்கேற்ப தேடல் இருக்கிறவன் அவரைக் கண்டறிவான்.