ஆகஸ்ட் 26, 2015

மறைகிறது பால்யம்

1.வெள்ளை மறைந்து சிவப்பாய்
குரூரம் காட்டும் கண்கள்
கருவிழி அருகே பற்பசை திட்டாய்;
வரவேற்கப்பட்ட கண் நோய்
தானே உடைத்த கைகள்
விடுமுறைக்கு உதவி
வீடு நோக்கி பல மாதம் கழித்து;
உதட்டின் ஓரம்
நானே பழகிய வலிச்சிரிப்பு

2.நான்கும் ஆறுமாய் விளிம்புக்கோடு தாண்டி
பறக்கிறது பந்து
மட்டையின் சுழலில்
மனதிலே மத்தாப்பு
காது கிழிய அழைக்கிறது அலாரம்
மற்றொரு நாள் விடிகிறது
நாளை தேர்வு
மயான அமைதி
மனண நேரம்

3,நுனிநாக்கு ஆங்கிலம்
போலிப் புன்னகை
ஐந்திலக்க சம்பளம்
அரைவேக்காடு உணவு
ஆடம்பர உடை
திரும்பத் திரும்பத்
தொடர்கிறது நடந்தவையே
எதையோ இழந்தேனா நான்?

4.மாறிய வார்த்தைகளில்
மாறுகிறது மதிப்பெண்
ஏன்?எதற்கு? கேள்விகள் தடுக்கப்பட்டு
உடைக்கப்படும் சர்வாதிகாரம்
மௌனத்தின் கூடாரத்தில்
ஏது சத்தம்
அழுகை மறந்து
சிரிப்பு தண்டிக்கப்பட்டு
மறைகிறது பால்யம்

5.முகம் மறக்கும் தருணங்களில்
புன்னகை காட்டும் புகைப்படத்தில்
அம்மாவும் அப்பாவும்;
அடுக்குமாடி குடியிருப்பு
சோட்டா பீம்தான் உடனிருப்பு
சோறூட்டும் ஆயாவைப்
பிடிக்கும் எனக்கு.

6.பத்து கண்கள் கவனிக்க
அழுகையின் ஊடே
மனதில் பதிக்கப்பட்ட
பாடலொன்றின் பிரதி;
நடன அசைவுகள்
நடிகையை ஒத்து
எவனோ ஒருவனின்
கைகொட்டி சிரிப்பு
யாரோ பெரியப்பாவாம்;
ஓய்வில் கொறிக்க நொறுக்குத்தீனி
நாளையும் வரலாம் ஐந்துபேர்
இன்றும் உண்டு
அழுகை ஒத்திகை

7. முன்னேற்ற அறிக்கையில்
நடத்தையும் நண்பனும் குறைகூறப்பட்டு
இடப்படுகிறது கையொப்பம்
புத்தக ஓரத்தில்
குறிக்க மறந்த ஒரு மதிப்பெண்
பல் இளித்தது
நம்பிக்கையின்மையை வரைந்தது
ஆசிரியை முகம்
மாநிலத்தில் முதலிடம்
பெறுவேனா நான்?

8.குளிர்ந்த நீர்
மரத்துப்போன உடல்
'ஆ' வென்ற அலறல்
தவறவிட்ட சுருதியையும் டெம்போவையும்
தேடி அலைகிறது மனது
நாளைக்காவது எழுந்து நின்று கைதட்டுவாரா
சூப்பர் சிங்கர் தாத்தா