செப்டம்பர் 06, 2015

காதல் - சிந்தனை

காதல் தோல்விக்குப் பிறகு கோரப்படும் அறிவுரைகள் நேர்மறைத்தன்மையை எதிர்பார்ப்பவை. அவள/அவன எப்படிடா மறப்பது என்ற கேள்வியே அவளை மறக்காமல் இருப்பது எப்படி என்பதை நாம் சொல்ல வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதுதான். மறக்க வேண்டும் என்பதே அவளை நினைப்பதற்காக உருவாக்கிக்கொள்ளும் மனநிலை. உண்மையில் மறப்பது என்பது சாத்தியமில்லை. ஒருவரைப் பற்றிய நினைவை அதனால் ஏற்படுகின்ற உணர்வை முன்பு இருந்ததைவிட குறைப்பது என்பதையே காதலில் மறதியாகக் கொள்ள வேண்டும். இந்த மறதியை காலம்தான் உருவாக்கும். காலம் மனதின் காயங்களைக் குறைக்கும். காதல் தோல்வியின் நினைவை ,அது காலத்தால் அழிக்கப்படும்வரை அதன் நினைவுகள் எழுந்துவிட்டு போகட்டுமே, அதை ஏன் அடக்கிக் கொள்ள வேண்டும், அதை ஏன் புறக்கணிக்க வேண்டும்? அந்த நினைவுகள் ஒரு மகிழ்ச்சியாய் அதன் முடிவிலே ஒரு அழுகையாய் வெளிப்பட்டுவிட்டு போகட்டுமே.

காமத்தின் புனிதப்படுத்தப்பட்ட வடிவே காதல் என்று முழுமையாய் சொல்லிவிட முடியாது.காமத்தை, காதலின் ஒரு பகுதி எனலாம். காமத்தை மட்டுமே காதலாகக் கொண்டால் அது ஒரு பெரும் சலிப்பு ஆகி விடும். என் தேடலை, என் சிந்தனைகளை என்னோடு சேர்ந்து விவாதிக்கிற, அவளுடைய சிந்தனைகளை என்னோடு பகிர்ந்து கொள்கிற ஒரு பெண்ணைத்தான் என்னால் காதலிக்க முடியும். காதலித்தேன்.காதலிப்பேன். அறிவார்ந்த தேடலாய் வாழ்க்கையைப் பகிர தெரிந்த ஒருத்தியை. இப்படி ஒரு பெண்ணைக் கண்டறிதல் என்பதே கடினம். ஆக அப்படிப்பட்ட பெண்ணின் வாழ்வையும், வாழ்வியல் முறைகளையும் ரசிப்பதே பெரும் காதல்தான். அது எந்தவித உடல் சார்பும் இன்றி நிகழலாம், உடலாலும் நிகழலாம். எதுவாகினும் அது காதலாகும். இங்கே தோல்வி என்பது அவளின் வாழ்க்கையை ரசிக்க விடாமல் செய்வது. இந்த தோல்வி புற உலகில் அவள் வாழ்ந்து நம் அகத்திலும், புறத்திலும் மட்டும் அவள் மரணிப்பது. இந்த துயரத்தைத் தாண்டி செல்ல இன்னொரு உயிரின எதிர்பால் அறிவுசார் தேடலை நிகழ்த்த வேண்டும்.  ஆனால் அது காலம் பிடிக்கும். அதுவரை காத்திருக்க வேண்டும், ஒரு முடிந்த தேடலின் முடிவிலா துயரத்தோடு அதனூடே கலந்து இருக்கும் சின்னஞ்சிறிய அதி மகிழ்ச்சியோடு.