ஜூலை 10, 2016

உதிர்ந்த சிறகொன்றின் நினைவில்

நம்மை தங்களுடைய வாழ்விலிருந்து தூக்கி எறிய வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்று யாராவது நினைத்தால் அதை செய்வதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மீண்டும் என்னை உன்னோடு இணைத்துக்கொள் என்று கேட்க முடியாது. அது வரம்பு மீறலாக, உரிமை மீறலாக இருக்கும். நாம் இல்லாமலிருப்பது அவர்கள் வாழ்வில் எந்த தாக்கமும் ஏற்படுத்தாமல் அவர்கள் நாமின்றியே மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்றால் அதுவே சிறப்பானது என்று தோன்றுகிறது. நான் விரும்புகிற ஒருவர் நான் அவர்களோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதே எனக்கு போதுமானதாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு நாட்கள் பழகிய நொடிகளை, நினைவுகளைப் புறக்கணித்து அவர்களால் மிகச் சுலபமாக நகர்ந்து விட முடிகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா நினைவுகளையும் நொடியில் கொன்று புதைக்கும் அந்த ஆற்றல் எனக்கு எப்போதுமே வராது என்று தோன்றுகிறது.அவ்வளவு எளிதில் யாரையும் கடந்து செல்ல முடியாது என்பதே என் பிரச்சனையாக இருக்கிறது.இப்போதிருக்கும் மனநிலை , கோபமா இல்லை வெறுப்பா என்றால் எதுவும் இல்லை. மனம் முழுக்க அன்புதான் இருக்கிறது. என்னைப் புறக்கணித்து செல்கிற ஒவ்வொருவர் மேலும் எனக்கு அன்பு மட்டுமே உள்ளது. ஆரம்பத்தில் எவ்வளவு அன்பு இருந்ததோ அதே அன்பு. புறக்கணிப்புகளின் இறுதியில் எங்கே நாம் தவறு செய்தோம் என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேனே தவிர யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. என்னை தவற விட்டதற்காக அவர்கள் வருத்தப்படுவார்கள், நான் பெரிய ஆளாகி அவர்கள் முன்னால் காட்டுகிறேன் என்று நகைச்சுவை செய்யத் தயாரில்லை. நான் பிற்காலத்தில் யார் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நிகழ்காலத்தில் அன்பு செலுத்தப்பட வேண்டும். எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி, கவலை இன்றி, சோகம் இன்றி, மகிழ்ச்சியாய், பரிபூரண அன்பு நிகழல் வேண்டும், அது உந்தப்படாமல், உணர்த்தப்படாமல் மனம் தன்னைத்தானே உணர வேண்டும். அப்படிப்பட்ட அன்பு கிடைக்கும் ஒவ்வொருவரும் பாக்கியசாலிகள்தான்.
( வாழ்வில் மறக்கமுடியாத, மோசமான பிரிவொன்றைச் சந்தித்த பிப்ரவரி11,2016ல் எழுதியது)