ஜூலை 05, 2016

கழுத்தை நெரிக்கும் கல்வி

கல்விக் கட்டணக் கொள்ளை குறித்த அதிர்ச்சியூட்டும் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் கவனிப்பாரின்றி கடந்து செல்லப்படுகின்றன. அவை வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

சமீபத்தில் செய்தித்தாள்களில் மூன்று மிக முக்கியச் செய்திகள் வந்திருக்கின்றன.
1. மதுரை அருகே கல்விக்கட்டணம் செலுத்தாததால் பள்ளியை விட்டு நீக்கப்பட்ட ஏழாம் வகுப்பு மாணவி வினிதா தற்கொலை செய்து கொண்டார்.
2. கோவை கணுவாய்ப் பகுதியில் தனது மகன்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமையால் தாய் தற்கொலை செய்துகொண்டார்.
3. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மூன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகனுக்கு இருபத்தி இரண்டாயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் மகனைக் கொன்று தந்தையும் தற்கொலை.

ஏழாம் வகுப்பு படிக்கும் பதினொன்று வயதுக்குழந்தை தற்கொலை செய்து கொள்வதை கற்பனை செய்து பார்க்கவே முடியாதபொழுது அது உண்மையிலேயே நடந்தேறியிருக்கிறது. மூன்றாவது சம்பவம்தான் கல்விக் கொள்ளையின் விபரீதத்தை நம் கண் முன்னே காட்டும் நிகழ்ச்சி. தன் மகனையே கொன்று விடுகிற ஒரு மனப்பிறழ்வு நிலைக்கு தந்தையை எடுத்துச் சென்றிருக்கிறது. குற்ற செயல்முறைக்கு ஒரு மனிதனை எடுத்துச் செல்லும் அளவிற்கு கல்விக் கட்டணக் கொள்ளை மாறியிருப்பதை நம் சமூகத்திற்கான இறுதி எச்சரிக்கையாகத்தான் கொள்ள வேண்டும். அதிலும் மூன்றாம் வகுப்பிற்கு இருபத்தி இரண்டாயிரம் என்பது எவ்வளவு பெரிய தொகை. தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்க அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணம் ரூபாய் முப்பத்தி இரண்டாயிரத்து ஐநூறு மட்டுமே என்பது இங்கே ஒப்புநோக்கத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் இலவசக்கல்வி அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஏன் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர் படையெடுக்கிறார்கள்? இதற்கு முக்கியக் காரணமாக திட்டமிட்டு பரப்பப்படும் கல்வித்தரம் பற்றிய வதந்திகளைக் குறிப்பிடலாம். அரசுசாரா தொண்டு நிறுவனமான பிரதம் இரண்டாயிரத்து பதினான்கில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை இங்கே நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது.

இந்த ஆய்வறிக்கை தமிழகம் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவிலும் கல்வித்தரம் மோசமாக இருப்பதை வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு புத்தகத்தை நான்காம் வகுப்பு மாணவரிடம்  கொடுத்து அதிலுள்ள ஒரு தமிழ் கதையையும், பத்தியையும் படிக்க சொன்னபொழுது பிழையின்றிப் படித்தவர்கள் அரசுப் பள்ளிகளில் 59.3 சதவீதம் தனியார் பள்ளிகளில் 55.6 சதவீதம். இரண்டாம் வகுப்புப் புத்தகத்தை ஐந்தாம் வகுப்பு மாணவரிடம் கொடுத்து படிக்க சொன்னபோது பிழையின்றிப் படித்தவர்கள் அரசுப்பள்ளிகளில் 49.9 சதவீதம் தனியார்ப் பள்ளிகளில் 40.2 சதவீதம். ஐந்தாம் வகுப்பில் ஏறக்குறைய பத்து சதவீத அளவிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளிகளைவிடப் பிழையின்றி படித்திருக்கிறார்கள். ஆனாலும் ஐம்பது சதவீத மாணவர்கள் இரண்டு வகைப் பள்ளிகளிலும் வாசிக்க அறியாதவர்களாய் இருக்கிறார்கள் என்பது வேதனையான செய்தி.

கணிதப்பாடத்தைப் பொறுத்தவரை இரண்டு எண்களை கழிக்கத் தெரிந்த நான்காம் வகுப்பு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் 43.2 சதவீதம் தனியார் பள்ளிகளில் 56.8 சதவீதம். ஆனால் தனியார் பள்ளிகளுக்கும் , அரசுப்பள்ளிகளுக்கும் உள்ள இந்த சதவீத வித்தியாசம் என்பது ஐந்தாம் வகுப்பு மாணவர்களை இரு எண்களை வகுக்கச் சொன்னபோது அரை  சதவீத அளவிற்கே உள்ளது. வகுத்தல் தெரிந்த ஐந்தாம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்கள் 25.6 சதவீதம் , தனியார் பள்ளி மாணவர்கள் 26.1 சதவீதம். ஆக 75 சதவீதம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் தெரியவில்லை.

இந்த ஆய்வறிக்கையை ஆராயும்பொழுது கல்வித்தரம் என்பது ஒட்டுமொத்தமாக மோசமாக இருப்பது விளங்கும் அதே நேரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கல்வித்தரத்தில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது கண்கூடு. எனவே அரசுப்பள்ளிக் கல்வித்தரம் பற்றிய வதந்திகளை புறந்தள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டாவதாக அரசுப்பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்கள் பல்வேறுபட்ட சமூக சூழல்களில் இருந்து வருவதால் தங்கள் பிள்ளைகள் தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆற்படுவார்கள் என்கிற ஐயம் பெற்றோர்களிடம் இருக்கிறது.தனியார் பள்ளிகளில் படிக்கிற குழந்தைகள் அத்தனைபேரும் நல்ல சமூக சூழலில் இருந்து வருவதாக பெற்றோர்கள் எப்படி முன்முடிவு செய்ய இயலும்? இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கிற எந்தக் குற்ற செயல்களிலும் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் இருந்தது இல்லையா என்பதை யோசித்தாலே இது எவ்வளவு மோசமான வாதம் என்பது விளங்கிவிடும். சமூகம் என்பது பலதரப்பட்ட மனிதர்களால் நிரம்பியிருக்கும் நிலையில் அந்த சமூகம் சார்ந்த குழந்தையும் பலதரப்பட்ட சூழலைக் கடக்கவேண்டிய தேவை இருப்பதை தனியார் பள்ளிகளில் அடைத்து வைக்கப்படுவதால் மட்டும் தவிர்த்துவிட முடியாது என்பதை பெற்றோர்கள் உணரவேண்டும்.

மூன்றாவதாக பெற்றோர்களின் போலி கவுரவம் இதற்கு முக்கியக்காரணம். தனியார் பள்ளிகளில் படிப்பதே உயர் சமூக நடைமுறை என்ற மனநிலையில் இருப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய இயலாது. அவர்களாகத்தான் திருந்தவேண்டும்.

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண நிர்ணயத்திற்கான சிங்காரவேலு கமிட்டியின் முடிவை தனியார் பள்ளிகள் மதிக்காத இச்சூழலில் அதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இருந்தாலும் தனியார் பள்ளிகளை புறக்கணித்து அரசுப் பள்ளிகளுக்கு திரும்புவதற்கு இது ஒரு சரியான நேரமாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கல்வித்தரத்தில் இருவகைப்பள்ளிகளிலும் பெரிய மாறுதல் இல்லாத நிலையில் நிச்சயமாக இது குறித்து பெற்றோர் சிந்திக்க வேண்டும். கல்வித்தரம் உயர்த்தலுக்கான நடைமுறைகளை கல்வியாளர் குழுக்கள் அமைத்து , அதன் தீர்வுகளை அரசாங்கம் அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்துமானால் எதிர்கால சந்ததிகள் மகிழ்வோடு வாழ்வார்கள். இல்லையேல் கல்வி இன்னும் லாபம் கொழிக்கும் வியாபாரமாகி தொடர் பணக் கொள்ளையால் நம் சிறு பிள்ளைகள் பாதிக்கப்படுதலை கண்டு வேதனைப்படுவதைத் தவிர வேறொன்றையும் நம்மால் செய்ய இயலாது.