செப்டம்பர் 09, 2016

அழுவாச்சி வருதுங் சாமி

'அழுவாச்சி வருதுங் சாமி' நான் படிக்கும் வாமு.கோமுவின் முதல் படைப்பு. துக்ககரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கூட நகைச்சுவையோடு கையாளும் கோமுவின் எழுத்து நமக்கு வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தருகிறது. நாம் தினமும் காண்கிற, சந்திக்கிற சராசரி மனிதர்களின் வாழ்வு கோமுவால் இலக்கியமாக்கப்படுகிறது.

இந்த சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளின் தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. கதை முழுக்க சிரிப்பைத் தூவிவிட்டு அழுவாச்சி வருதுங்சாமி என முதல்கதைக்கு தலைப்பிட்டிலிருப்பதிலிருந்து இது துவங்குகிறது. இந்தக் கதை உறவுமுறைகள் என்று நாம் வகுத்துவைத்திருப்பவற்றின் மேலிருக்கிற பற்றையும் தாண்டி தனிமனிதனின் நலன்களைத்தான் அவன் அணுகுவான் என்கிற விதத்தில் முடிகிறது. வாமு.கோமுவின் கதைகள் நகைச்சுவையின் ஊடே மறைபொருளாக பேசிச் செல்லும் விஷயங்கள் மிக முக்கியமானவை. வெறும் நகைச்சுவையை எடுத்துக்கொள்பவனுக்கு அதுவே இன்பந்தருமென்றாலும் அதன்வழி சொல்ல வரும் கருத்தியல்தான் இலக்கியத்தின் பலனைத் தருவது. அவற்றைத்தான் முக்கியமாக கோமுவின் கதைகளிலிருந்து நான் எடுத்துக்கொள்கிறேன்.

சாதிய வன்மத்தை தொடர்ந்து தனது கதைகளில் சாடும் கோமு அந்த வன்மம் எவ்வகை நோக்கியெல்லாம் கொண்டுசெல்லுமென கூட்டப்பனை சாவக்கட்டு கதையில் காட்டிச் செல்கிறார். அது தரும் முடிவு அதிர்ச்சியானது. ஆனால் அதற்கெதிராய் ஒன்றும் செய்யவியலா நிலைமையைத்தான் பாதிக்கப்பட்டவனால் செய்ய முடிகிறது. இந்தக் கையறுநிலை நீங்க பண்றது அட்டூழியமுங்க சாமி கதையிலும் எதிரொலிக்கிறது. அந்தக் கதையின் முடிவில் காதலின் புனிதபிம்பத்தை அசைத்துப் பார்க்கிற காரியத்தையும் செவ்வனே செய்கிறார் கோமு. இதன் எதிரொலிப்பாக நீ சொல்றதலுயும் நாயம் இருக்கு என்ற கதையில் காதலின் புனிதபிம்பத்தை வெட்டி வேரோடு சாய்க்கிறார்.

திருவிழாவிற்கு போன மயிலாத்தாள் கதையில் பெண் ஒடுக்கப்படுதலுக்கு எதிராக கோமு பேசுகிறார். இந்தக் கதை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இதன் முடிவு பெரிய அழுத்தங்கள் எதையும் வாசிப்பவனுக்கு ஏற்படுத்தாமல் போய்விடக்கூடிய வாய்ப்புகளைக் காண முடிகிறது. 

இலக்கியவாதிகள் பற்றிய கதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. தோழர் பெரியசாமி பற்றிய கதைகள் படு பயங்கர சுவாரசியமாய் இருக்கிறது. இலக்கியவாதிகளின் பேச்சொன்றும், செயலொன்றுமாய் இருப்பதை வாமு. கோமு இந்தக் கதைகளில் சுவாரசியமாய்க் காட்டிச் செல்கிறார்.

இடத்திற்கான பட்டா காட்ட சொல்லும் எதிர்வீட்டுப் பெண்ணிடம் தோழர் பாருடி பட்டாவ என லுங்கியைத் தூக்கிக் காட்டும் இடமும், பின்நவீனத்துவம்னா என்னனு கேட்பவரிடம் பின்னாடி பண்றது என தோழர் சொல்லுமிடங்களும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன. (தோழர் பெரியசாமியை பேட்டி எடுக்கும்போது அவர் டுர்டுரா நாவலை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அதனால் வாமு தன்னை சுய பகடி செய்து பெரியசாமியைப் படைக்கிறாரோ என்ற சந்தேகமும் உண்டு. அதைக் கோமுகன் அண்ணன்தான் விளக்க வேண்டும்)

துரதிஷ்டக்காரன் என்று தலைப்பிடப்பட்ட கதையில் முடிவுகூட துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. உணர்ந்துகொள்ளப்படாத பாலியல் தேவை ஒரு புறமும், உணர்ந்துகொள்ளப்படாத தியாகங்கள் மறுபுறமுமாக இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதாமின் இருப்பு கதை நாம் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்களையும், நியதிகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. கட்டாயத்தின் அடிப்படையிலேயே மனிதன் நல்லவனாய் நடிக்கிறான் என சொல்லிச் செல்லும் கதையின் பாத்திரத்திற்கு யெஸ். ராமகிருஷ்ணன் பெயரை சூட்டியிருக்கும் எள்ளல் ஏனென்று நான் அறியாதது.

மயானங்களில் தேடப்படும் உங்கள் பிணங்களின் முடிவு முதலிலேயே ஊகித்துவிடும் படிக்கு இருப்பதால் எனக்கு உவப்பு தரவில்லை. அன்பிற்கினியவள் கதை உறவுமுறைகளை கேலிக்கூத்தாக்கி நம்மை சிரிக்க வைக்கிறது.

மறுவாசிப்பிற்கு உட்படுத்தும்போது இன்னும் நிறைய விஷயங்களை இத்தொகுப்பிலிருந்து கண்டுணர முடியமென்று தோன்றுகிறது. வாமு. கோமுவின் பண்பியல்பிற்கும் அவரது எழுத்துக்கும் நிச்சயமாகத் தொடர்பிருக்குமென்று தோன்றுகிறது. உம்மணாமூஞ்சியாக இருக்கும் மனிதனால் இப்படி எழுத முடியுதாதென்று தோன்றுகிறது. இலக்கியத்தை இவ்வளவு கொண்டாட்டமாக்கும் வாமு.கோமுவின் கதைகளை வெறும் கொண்டாட்டத்திற்காக மட்டும் அணுகாமல் அதிலிருந்து படிப்பினைகள் பெற்றுக் கொள்வதே நமக்கு நல்ல வாழ்வியலைக் காட்டும் என்பதே என் எண்ணம் அதைத்தான் நான் செய்துகொண்டும் இருக்கிறேன்.
( சமீபத்தில் மணல்வீடு சிற்றிதழ் 25ல் அம்மாவின் வால் என்ற சிறுகதை படித்தேன். வாமு. கோமு எப்படிப்பட்ட படைப்பாளி என்று அறிய அந்த ஒரு கதை போதுமென்று தோன்றுகிறது).