செப்டம்பர் 22, 2016

பென்யாமினின் ஆடு ஜீவிதம்

அதிகாரத்தை எதிர்க்க வேண்டுமென விரும்பினால் நம்மிடமும் அதிகாரம் இருக்கவேண்டும். அப்படி இல்லாவிட்டால் எதிர்க்க முடியாதா என்றால் எதிர்க்கலாம். சாவைக் கண்டும் பயப்படாத மனவலிமை எவனிடம் உண்டோ அவன் எதிர்க்கலாம். தனிமனிதனாக ஒருவன் அதிகாரத்திற்கு எதிராக மோதமுடியாது. சினிமாவில் மோதிக்காட்டும் விஜய்களாலோ, கமல்களாலோ கூட முடியாது. அறிவிக்கப்படாத அடிமைத்தளை நம்மைச் சுற்றி இறுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் நகரமுடியுமோ அவ்வளவுதூரம் நகரலாம். ஒரு எல்லைதாண்டி போக முடியாது. போனால் பியூஷ் மானுஷ் போல அடிவாங்க வேண்டும். அப்படிப்பட்ட எல்லையைத் தாண்டி விட்டதற்காக இந்த நாவலின் நாயகன் நஜீப் சிறையில் அடைக்கப்படுகிறான். ஆனால் அவன் வேண்டுமென்றே அகப்பட்டுக்கொண்டவன். ஏன் அவ்வாறு அகப்பட்டான்? ஒரு வாதையிலிருந்து தப்ப அதைவிட குறைவான வலிதரும் இன்னொன்றில் அகப்பட்டுக் கொள்கிறான். அதிலிருந்து தப்பித்தானா என்பது நாவலைப் படித்தால் உங்களுக்குத் தெரியும்.

சுவாரசியத்திற்கு குறைவேயில்லாமல் மொழிபெயர்த்ததற்கு எஸ். ராமனைப் பாராட்டலாம். ஊரில் ஆற்று மணல் அள்ளிக்கொண்டிருந்தவன் பணத்திற்கு ஆசைப்பட்டு வளைகுடா நாடு சென்று அங்கே பாலைவனத்தில் அரபிக்கு ஆடும், ஒட்டகமும் மேய்த்து வெளியுலகத் தொடர்பின்றிப் போய் உடல் இழந்து உணர்விழந்து கடைசியில் என்ன ஆனான் எனச் சொல்கிறது கதை.

ஆடுகளைப் பற்றிய செய்திகள் நிறைய இருக்கிறது. ஆட்டுப்பால் கறப்பது எப்படி என்றுகூட நமக்கு சொல்லித்தருகிறார் நஜீப். வாழ்வில் முக்கியத்துவமற்றவை என்று நாம் கருதுகிற விஷயங்கள், முக்கியம் அற்றவை அல்ல என உறுதியாக சொல்லமுடியாது என்று கருதும்படிக்கு நஜீபின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. நஜீபை அடிமையாக்கி வைத்திருக்கும் அரபி ,ஆட்டுப்பாலை கறந்துவர சொன்னதும் அது எப்படி என்று தெரியாமல் முழிக்கிறார் நஜீப். ஊரில் இருக்கும்போது பக்கத்து வீட்டில்கூட ஆடு இருந்ததே அப்போதுகூட கறப்பது எப்படி என்று பார்க்கவி்ல்லையே என்று கவலைப்படுகிறார். அவசர யுகத்தில் ஆர்வமின்றி நாம் கடந்துசெல்பவைக் கூட ஒருநாள் நமக்கு தேவைப்படும் என்கிற உயரிய உண்மை வெளிப்படும் இடமிது.

நஜீப் ஆடுகளோடு ஆடாக வாழ்கிறான். ஆடுகளுக்கு தனக்குத் தெரிந்தவர்களின் பெயர் வைத்து அவர்களோடு உரையாடுகிறான். ஏன் ஒருமுறை ஒரு ஆட்டோடு உறவே கொள்கிறான். அந்த ஆடு அவன் சிறுவயதில் தொட்டுக் களித்த விபச்சாரியின் பெயர்கொண்ட ஆடு. ஒரு ஆட்டைத் தன் மகனாக நினைக்கிறான். ஒருமுறை அவன் தப்பிக்க முயலுகிறபொழுது அரபியின் துப்பாக்கியிலிருந்து ஒரு ஆடுதான் அவனைக் காப்பாற்றுகிறது. அன்றிலிருந்து அவன் ஆட்டுக்கறி தின்பதையே விட்டுவிடுகிறான். அவன் குளிப்பதில்லை, ஆடோடே வாழ்ந்து அவனும் ஒரு ஆடாகிப் போகிறான். ஆனால் மனிதனாக மாறும் ஆசை அவனுக்கு உண்டு என்பதால் தப்பிக்க நினைக்கிறான்.

ஆடின் பிரசவத்தை நஜீப் வியந்து பார்க்கிற ஒரு இடம் நாவலில் உண்டு. பிறந்த ஆடு சில நிமிடங்களுக்கு உள்ளாகவே எழுந்து நடக்கும் அதிசயத்தைப் பார்த்து ஆச்சரியம் கொள்வான். எங்கள் வீட்டில் ஒரு பூனை உண்டு. அது குட்டிப் போடுகிறபொழுதும் எனக்கு இதே ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு. பூனைகளும் மூன்று வாரங்களுக்குள்ளாக எழுந்து ஓடியாடி விளையாடி தமக்குள் சண்டையிட்டு தானாக உணவுண்டு செயல்படுவதை நான் பார்த்ததுண்டு. ஆனால் உண்மையில் மனிதர்களுக்கு இது தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். மூன்று வயதில் மாமாவுக்கு ரைம் சொல்லு என்று கொடுமைப்படுத்தும் சமூகத்தில் மனிதன் பிறந்த பத்தாண்டுகளுக்கு பிறகு எழுந்து நடந்தால்கூட நல்லதென்றுதான் தோன்றுகிறது.

பாலைவனம் பற்றிய செய்திகள் இந்த நாவலில் இருக்கிறது. குளிக்காமலே இருக்கும் நஜீப் பாலைவன மழையில்தான் ஒருநாள் குளிக்கிறான். பாலைவனம் என்றாலே வெயில்தான் என்று நம்பும் நமக்கு பாலைவனத்தின் குளிரும், தொடர் மழையும் ஒரு புதிய அறிவு. கடைசியில் அரபியிடம் இருந்து தப்பி ஜெயிலில் தானே அகப்படும் வெளிநாட்டவரைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் அரபி தனது பணியிடத்திற்கு அடித்து அழைத்துச் செல்லும் அளவிற்கு அதிகாரம் வளைந்துகொடுக்கிறது. அப்படியாக நஜீப் சிறையில் மீண்டும் அரபியின் மாயமானவனைக் கண்டறியும் தேடலில் மாட்டிக்கொள்கிறார். அரபி நஜீபை என்ன செய்தான்? நஜீப் தப்பித்தானா? கொல்லப்பட்டானா? இல்லை மீண்டும் ஆடும், ஒட்டகமும் மேய்த்தானா என்பதே கதை முடிவு.

உண்மையில் நீங்கள் பெருந்துயரிலோ, சாவைக் கண்முன் காண்கிற தருணங்களிலோ மாட்டிக்கொண்டால் எப்பாடுபட்டாவது உயிரைக் காப்பாற்ற முயல்வீர்கள். அதற்கு இன்னொருவரை பலிகொடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால்கூட முயற்சிப்பீர்கள். அப்போது நட்பு, பாசம், காதல், உறவு, காமம் அத்தனையும் அழிந்துபோகும். உயிர் வாழ்தல் மட்டுமே உங்கள் தேவையாகும். அப்படிப்பட்ட சுயநலம்தான் மனித இயல்பு, அது குற்றமல்ல. அப்படிப்பட்ட தருணத்தில் நீங்கள் இந்த கதை நாயகன் நஜீப் போல் மூன்று நாட்கள் நீர் அருந்தாமல், உணவில்லாமல் பாலைவனத்தில் கால் வீங்க ஓடிக்கூட உயிர் வாழ்வீர்கள்.

( ஆடு ஜீவிதம், மலையாளத்தில் பென்யாமின். தமிழில் : எஸ்.ராமன், உயிர்மை பதிப்பக வெளியீடு)