பிப்ரவரி 26, 2017

யதார்த்தவாதியாக வாழ்தல்

சில நாட்களுக்கு முன்பு Whatsappல் எனது முகப்புப்படத்தை ஒரு Photo editorஐப் பயன்படுத்தி சில மாற்றங்கள்  செய்து வைத்திருந்தேன். சில மணி நேரங்களுக்குப் பிறகு ஒரு நண்பர் மெசேஜ் செய்தார்

"ஹாய் ப்ரோ"

"சொல்லுங்க ப்ரோ"

" உங்கள நான் ஒரு யதார்த்தவாதினு நினைச்சேன். ஆனா நீங்களே இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கல"

" என்னாச்சு ப்ரோ"

" ஒரு யதார்த்தவாதி Photoவ edit பண்ணி வைப்பாங்களா? இருக்கறத இருக்கறபடியே காட்டறவன்தான ப்ரோ யதார்த்தவாதி"

" ஆமா ப்ரோ. ஆனா இது என்னோட அஞ்சாயிரம் ரூபா மொபைல்ல இருக்கற அஞ்சு எம்.பி கேமராவுல எடுத்தது. ஒரிஜினல் போட்டோவப் போட்டாலும் அது என்னய இருக்கற மாதிரி காட்டாது. அதான் ப்ரோ  Edit பண்ணிப் போட்டேன்"

" ஓகே ப்ரோ"

இப்படி சொல்லி அந்தப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டாலும் சந்தானம் ஒரு படத்தில் சொல்கிற மாதிரி " நாம உண்மையிலேயே யதார்த்தவாதியா இல்ல நம்மள நாமளே அப்படி ஏமாத்திக்கறமா " என்ற எண்ணமும் அவ்வப்போது எழாமல் இல்லை. நான் ஒரு யதார்த்தவாதியாக உருவானேனா அல்லது உருவாக்கப்பட்டேனா என்றே தெரியவில்லை. பிறகு கொஞ்சம் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு அந்த முகப்புப்படத்தை நீக்கிவிட்டு தலை சீவாத, ஷேவ் பண்ணாத ஒரு படத்தை வைத்துக்கொண்டேன்.

ஆனால் ஒரு யதார்த்தவாதியின் வாழ்க்கை என்பது இதோடு முடிவதல்ல. சக யதார்த்தவாதிகளில் ஒருவர் நமக்கு ஃபோன் செய்கிறார் என்று வைத்துக்கொள்ளவும். அலைபேசியை எடுத்து ஹலோ என்று சொன்னதற்குப் பிறகு என்ன கேட்போம்?  நல்லாருக்கீங்களா என்று கேட்போம். ஆனால் யதார்த்தவாதிகளிடம் பேசும்போது இப்படி கேட்கமுடியாது. ஏனெனில் நலமா என்று கேட்பது பெரும்பாலும் ஒரு சம்பிரதாய நடைமுறையாகவும், மனதிலிருந்து கேட்கப்படாததாகவும் இருக்கிறது. நலமா என்ற கேள்விக்கு ஒரு யதார்த்தவாதி எல்லோரையும் போல நலம் என்றும் சொல்லமாட்டான். " எனக்கு ஒடம்பு சரியில்லைனா நீ என்ன பண்ணுவ, ஆஸ்பிட்டல் செலவுக்கு ஒரு அய்யாயிரம் கேட்டா குடுத்துருவியா" என்றுதான் கேட்பான் என்பதால் ஒரு யதார்த்தவாதியிடம் இன்னொரு யதார்த்தவாதி நலமா என்று எப்பொழுதும் கேட்கவே மாட்டான்.

ஒரு யதார்த்தவாதி இன்னொரு யதார்த்தவாதிக்கு இரவில் குட் நைட் என்று அனுப்பமாட்டான். ஏனெனில் குட்நைட் அனுப்புவது இக்காலத்தில் எந்த உணர்வுமின்றி எல்லாருமே ஒரு நடைமுறைபோல் செய்வது. உண்மையிலேயே அடுத்தவன் இரவு நன்றாக இருக்க வேண்டுமென்ற நினைப்போடுதான் குட்நைட் அனுப்பினாயா என்று கேட்டு யதார்த்தவாதி நம்மை வெட்கித் தலைகுனியச் செய்வான்.

யாருக்காவது பிறந்தநாள் வந்தால் யதார்த்தவாதி அதை ஒரு பொருட்டாகவே நினைக்கமாட்டான், வாழ்த்து சொல்லாமலே சகஜமாக உரையாடுவான். உண்மையிலேயே வாழ்த்துவதற்கான மனநிலை மனதில் உருவாகி வந்தால் வாழ்த்துவேன் என்பான். நடைமுறையில் அத்தனைபேரும் செய்வதுபோல் இரவு பன்னிரெண்டு மணிக்கு அலாம் வைத்து எழுந்து " ஹேப்பி பர்த்டே மச்சி " என நடிக்கமாட்டேன் என்றும் சொல்வான் யதார்த்தவாதி. தன் பிறந்தநாளுக்கு யாரும் வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் கோபப்படமாட்டான். தப்பித்தவறி வாழ்த்து சொல்லிவிட்டால் இது உன் மனதிலிருந்து வரும் வாழ்த்துதானா என்று சந்தேகப்பட்டு திட்டுவான்.

ஒரு யதார்த்தவாதி யாருக்காவது கடிதம் எழுதினால் அன்புள்ள என்று போட்டு ஆரம்பிக்க மாட்டான். உண்மையில அவங்க மேல எனக்கு அன்பே இல்லையே அப்பறம் என்ன மயித்துக்கு அன்புள்ள போடணும்னு உண்மையாகவே கேட்பான்.

யதார்த்தவாதியாக இருப்பதில் சிக்கல் எழும் தருணம் என்பது நாம் ஒவ்வொரு செயலுக்கும் யதார்த்தமாகத்தான் எதிர்வினையாற்றுகிறோமா என்று யோசித்து செயலாற்றும்போதுதான்.  அப்படி யோசிக்கும்பொழுதே யதார்தத்தை இழந்து செயற்கையான, முன் திட்டமிட்ட நடவடிக்கைகளை செய்பவர்களாகிவிடுகிறோம்.நலமா என்று கேட்பது உணர்வற்ற , முன் திட்டமிட்ட சம்பிரதாயம் என்றால் அதற்கு மாற்றாக யதார்த்தவாதிகள் முன்வைக்கும் நலமா என்று கேட்கக்கூடாது என்பதும் செயற்கையான, முன் திட்டமிட்ட நடவடிக்கைதான். எனவே திட்டமிடுதலற்று அக்கணத்தில் தோன்றுவதை வெளிப்படுத்துபவனே யதார்த்தவாதியாக இருக்க முடியும்.

ஆனால் முழுமையான யதார்த்தத்தோடு ஒருவனால் நிச்சயமாக வாழ முடியாது. என்னுடைய சில நண்பர்கள் அவர்களுக்குப் பிடித்த பெண்களின் புகைப்படத்தைக் காட்டி " மச்சி நானும்  இவளும் லவ் பண்றோம். எப்புடிடா  இருக்கா? " என்று கேட்பார்கள். ஒருவன் தன்னுடைய காதலி எப்படி இருக்கிறாள் என அடுத்தவனிடம் கேட்க வேண்டியதன் அவசியம் என்னவென்றே எனக்குத் தெரியாது. ஒரு யதார்த்தவாதியாக " நான் நல்லா இல்லைனு சொல்லிட்டா நீ கழட்டி விட்ருவியா? உன் மூஞ்சிக்கு இந்த மூஞ்சியே அதிகம்டா " என சொல்லலாம்தான். ஆனால் அவன் கோபப்பட்டு ரூமை காலி செய்துவிட்டால் அவனுக்கும் சேர்த்து நான் வாடகை கொடுக்க வேண்டி வரும். அதனால் கொஞ்சம் நடிப்பும் வாழ்க்கைக்கு நிச்சயம்  தேவையானதுதான் என்பதால் " நீ குடுத்து வச்சவன்டா மச்சி" என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.