பிப்ரவரி 23, 2017

குட்டி முதலாளிகள்

கம்யூனிசக் கருத்தியல்களைப் புறந்தள்ளுபவர்கள் முன்வைக்கிற முக்கிய விமர்சனங்களில் ஒன்று தொழிலாளர் சமநிலையின் மூலம் சோம்பேறிகளை உருவாக்குகிறார்கள் என்பது. வேலை செய்யாதவனுக்கும், வேலை செய்பவனுக்கும் இதன்மூலம் வேறுபாடு இல்லாமல் போய்விடுமென்றும் அவ்வகையில் எல்லோரும் சமமென்று சொல்வதையும், சம ஊதியம் தருவதையும் ஏற்கமுடியாதென்பதும் அவர்கள் வாதம். கம்யூனிசம் வெற்றியடைந்த சில நாடுகளில் அது உருவாக்கிய சர்வாதிகார போக்கைப் பற்றி வரும் விமர்சனங்களை கருத்தில்கொண்டு கம்யூனிசத்தை தவிர்ப்பதை ஏற்காலாமென்றாலும்கூட எவ்வகை கொள்கைரீதியிலான அரசமைப்பும் சர்வாதிகார தன்மை உடையதுதான் என்பதையும் மறுப்பதற்கில்லை. முதலாளித்துவ அரசுகள் இரண்டு சர்வாதிகார மையங்கள் உடையவை. ஒன்று மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் அதிகாரம்,மற்றொன்று அரசையே ஆட்டிப் படைக்கும் முதலாளிகளின் அதிகாரம். மாறாக கம்யூனிச அரசாங்கம் ஒற்றைச் சர்வாதிகார அமைப்பு உடையது. சர்வாதிகாரமற்ற அரசு அமைப்பு என்பது எந்தக் கொள்கைரீதியிலான அரசமைப்பிலும் சாத்தியமற்ற ஒன்றுதான் என்பதை மிக எளிதாகவே இதன்மூலம் அறிந்துகொள்ள முடிகிறது ( கம்யூனிச அரசின் இறுதியில் மக்கள் சமமாக்கப்பட்டு அரசற்ற நிலை உருவாகும் என்பதெல்லாம் சாத்தியமற்ற ஒன்று என்பதால் அதைக் கணக்கிலெடுக்க வேண்டியதில்லை)

கம்யூனிசம் சோம்பேறிகளை உருவாக்குவதாகச் சொல்லும் தொழிலாளிகளின் பின்னாலுள்ள உளவியலை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒவ்வொருவருள்ளும் குட்டி முதலாளிகள் ஒளிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களைத் தொழிலாளியாக கருதுவது இன்றி முதலாளியாகவே கருதுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு உணவகத்தை எடுத்துக்கொண்டால் முதலாளி கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக்கொண்டு சும்மாதான் உட்கார்ந்திருப்பார். ஆனால் வேலை கொஞ்சம் குறைவாகச் செய்கிற தொழிலாளியை மற்றொரு வேலை நன்கு செய்கிற தொழிலாளி முதலாளியிடம் மாட்டிவிடுவார்.

"அந்தாளு வேலையே செய்ய மாட்டேங்கறானுங்க"

உண்மையில் இங்கு முதலாளியும் எந்த வேலையும் செய்யவில்லைதான். ஆனால் அவர் ஒரு முதலாளி என்பதாலேயே வேலை செய்ய வேண்டியதில்லை என்றாகிவிடுகிறது. வேலை நன்கு செய்கிற தொழிலாளிக்கு அது  தெரியுமென்றாலும் வேலையைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்வதன் மூலமே தானும் அதுபோல் ஒரு முதலாளி ஆக முடியும் என்று நினைக்கிறான். இதன்மூலம் சக தொழிலாளியைக் குறைகூறுதலைச் செய்யவும், முதலாளியை புகழவும் செய்கிறான். இங்குதான் முதலாளித்துவம் வெற்றி அடைகிறது. பணி செய்தல் என்பதை புனிதமானதாகவும், வாழ்க்கையில் நிச்சயம் செய்ய வேண்டிய ஒன்றாகவும், அதிகப் பணி செய்தல் என்பது வெற்றியாளர்களின் தத்துவம் என்பதுபோல் முதலாளித்துவம் கட்டமைக்கிறது. பணி எதுவும் செய்யாத ஒருவனை அது குற்றவாளிபோல சித்தரிக்கிறது. அதிகம் வேலை செய்பவனைத் தூண்டிவிட்டு அவனை முதலாளி ஆக்குவதுபோல் பாவ்லா காட்டுகிறது.

மனிதன் இங்கே வந்தது அலுவலக வேலை செய்வதற்கே அல்ல. மனிதனின் ஒரே வேலை தனது இனத்தை அழியாமல் பெருக்குவதுதான். மற்ற எல்லா விலங்குகளையும் போலத்தான் மனிதனும். ஆனால் பணத்தின் வருகைக்குப் பிறகு அப்படி வாழ்வது சாத்தியமில்லை என்றாலும் ஒருவன் கொஞ்சம் குறைவாகப் பணி செய்கிறான் என்பதற்காகவே அவனை சமூகக் கடமையை ஆற்றாத ஒருவனாக, குற்றம் செய்பவனாக,,வாழத் தெரியாதவனாக கருதிவிட முடியாது என்பதே நான் சொல்வது. மனித வாழ்தல் என்பது உண்மையில் சும்மா இருப்பதுதான். பணி என்பது நாம் உருவாக்கிக்கொண்டது.

இங்கே முதலாளிகளின் வெற்றி முழுக்கவே தொழிலாளர்ப் பிரிவினையில்தான் இருக்கிறது. அதை முதலாளிகள் தூண்டிவிடக்கூட வேண்டியதில்லை. சக மனிமனை நேசிக்காத முதலாளித்துவ மனப்பாங்குடைய ஒரு தொழிலாளியிடமிருந்து அது உருவாகி வரும். அந்த மனம் அதிகப் பணி செய்வதை மனிதக் கடமையாக நினைக்கும், பெருமுதலாளி ஆக கடைசிவரை முயன்று உண்மையான பெருமுதலாளிகளிடம் அடிபட்டு கடைசியில் இறந்துபோகும்.

ஒரு வெளிநாட்டுக்காரரின் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம்  இந்தியாவில் தொழிலாளிகளைச் சுரண்டி சிறப்பாகச் செயல்படுகிறதென்றால் அதற்குக் காரணம் அவர் மட்டுமல்ல. தங்களைக் குட்டி முதலாளிகளாகக் கருதிக்கொள்ளும் இந்திய டீம் லீடுகளும், டெலிவரி மேனேஜர்களும்,  HRகளுமே அதற்குக் காரணம். எட்டுமணி நேரம் வேலை செய்வதாகக் கணக்குக் காட்டச் சொல்லிவிட்டு பனிரெண்டு மணி நேரம் வேலை வாங்குகிற, இரண்டு பேர் தேவைப்படுகிற இடத்தில் ஒருவரை மட்டுமே வேலைக்கு எடுக்கிற குட்டி முதலாளிகளே காரணம். இவை எல்லாவற்றிற்குமான முதன்மைக் காரணம் ஒரு மனித விலங்கிற்கு இன்னொரு மனித விலங்கைப் பிடிக்காது என்பதைத் தவிர வேறொன்றுமல்ல.

முதலாளித்துவமே கூடாது , முதலாளித்துவமே தவறு, கம்யூனிசம்தான் சரி என்று நான் கூறவில்லை. மேம்பட்ட முதலாளித்துவ மனப்பாங்கோடு ஒரு முதலாளி தனது தொழிலாளிகளை நன்றாக நடத்தலாம், வசதிகள் செய்துகொடுக்கலாம், எட்டு மணி நேரம் மட்டும் வேலை வாங்கலாம் என்று நினைத்தால்கூட சக தொழிலாளிகளே அதாவது குட்டி முதலாளிகளே அதற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதைத்தான் சொல்கிறேன்.