மார்ச் 02, 2017

ஆளுமையை உருவாக்குதல்

" ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு போலாம் வாடா"

மேம்போக்காகப் பார்க்கிறபொழுது இது ஒரு மிகச்சாதாரணமான அழைப்பு. ஒருவன் இன்னொருவனை ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு அழைக்கிறான் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த அழைப்பு ஒரு சமூகத்தின் இளைஞர்கள் அத்தனைபேருக்கும் வேறு வேறு வாய்களிலிருந்து ஒரேபோல் விடப்படும் அழைப்பு. இந்தக் அழைப்பு உண்மையில் " ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு நீ வரியா? உன் தரப்பு என்ன" என்று கேள்வியாகக் கேட்கப்பட்டிருந்தால் அது ஆளுமைகள் உருவாகி வருவதை ஊக்குவிக்கிற சமூக அமைப்பாக இருந்திருக்கும். அது விவாதங்களுள்ள சமூக அமைப்பாக இருந்திருக்கும். ஆனால் எப்பொழுதும் சார்ந்திருத்தல் என்பதையே செய்கிற நமக்கு உண்மையிலேயே எதிர்த்தரப்பு இருப்பதே தெரியாது. ஜல்லிக்கட்டுப் போராட்டமென்றால் அதற்கு ஆதரவு மட்டும்தான் இருக்கும். இதுதான் கூட்டு மனப்பான்மையில் உழன்று போன ஒரு சமூகத்தின் பார்வை.

எல்லா விஷயங்களிலும் இப்படித்தான். சுய அறிவோடு சிந்தித்து , தனக்கு சரியென்று பட்டதை முடிவெடுக்கிற ஆளுமைகள் இங்கே பெரும்பாலும் கிடையாது. எப்பொழுதும் கூட்டத்தோடு ஒட்டிக்கொள்வதே நமக்கு சவுகரியமான ஒன்று.

" டேய் உனக்குப் பிடிச்ச ஐபிஎல் டீம் எதுடா? சி எஸ் கே வா, மும்பையா?"

நம் சூழலில் இந்தக் கேள்விக்கு ஒருவன் ஐபிஎல்லில் விளையாடும் ஏழெட்டு அணிகளில் ஏதேனும் ஒன்றன் பெயரைத்தான் பதிலாகச் சொல்ல முடியும். எனக்கு ஐபிஎல் லே பிடிக்காது என்றோ கிரிக்கெட்டே பிடிக்காது என்றோ ஒருவன் சொல்ல முடியாது. ஆனாலும் ஒருவனுக்கு மனதில் அப்படிப்பட்ட பதில் சொல்லவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் விசித்திரமானவனாகக் கருதப்பட்டு தனித்துவிடப்படுவோம் என்பதாலே ஒருவன் ஏதாவது ஒரு அணியின் பெயரைச் சொல்லிவிட்டு விருப்பமின்றி கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்பான்.

தனது ஆளுமையோடு தனித்து நிற்றல் என்பது கேலிக்குரியதாகவும், தவறானதாகவுமே எப்போதும் பார்க்கப்படுகிறது. தனித்த ஆளுமைகள் உருவாகுவதை நசுக்கும் செயல்பாடை நாம் பள்ளியிலேயே ஆரம்பித்துவிடுவோம். என்னுடைய தங்கை பள்ளியில் படிக்கும்பொழுது புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுதாவிட்டால் எப்படி அடி விழும் என்பதை சமீபத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள். ஐந்து வார்த்தைகளுக்கு மேல் புத்தகத்தில் இருப்பது மாறிவிட்டால் அடி வாங்குவதோடு மட்டுமில்லாமல் அந்த கேள்விக்கான பதிலை ஐந்து முறை எழுதிவிட்டு அடுத்த நாள் வந்து மீண்டும் அதைப் பார்க்காமல் எழுதவேண்டுமாம். இத்தனைக்கும் அது சிறிய பதில் அல்ல, விரிவாக விடையளிக்கும் வினா. இப்படிப்பட்ட சூழலில் எங்கு ஆளுமை வளரும்?

பிள்ளைகளை வைத்து புதிய பணக்காரர்களாகத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்திடம்தான் இந்தப் பிரச்சனை அதிகமிருக்கிறது. நம் சூழலிலும் நடுத்தர வர்க்கமே அதிகமும் இருக்கிறது. இங்கே உருவாக்கப்படும் ஒரே ஆளுமை , மதிப்பெண் அதிகம் பெறும் ஆளுமைதான். அதைத் தவிர்த்த பிற ஆளுமைகள் உண்டா என்றால் பணம் கொழிக்கும், புகழ் கிடைக்கும் ஏதாவதொரு ஆளுமையை மாதிரியாகக் கொள்ளலாம்.அதற்காக இந்த நடுத்தர வர்க்கத்தினர் சமூகத்தில் உள்ள பிற ஆளுமைகளை  கவனமாக வடிகட்டி மிகச்சரியாக தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிலரைப் பரிந்துரைப்பார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் அப்துல் கலாம். கலாம் ஐயா போகுமிடமெல்லாம் குழந்தைகள். ஒருநாளும் கலாம் சொன்ன நல்ல விஷயங்களை ஒருத்தனும் கேட்டது கிடையாது. சுய முன்னேற்ற சொற்பொழிவு ஆற்றுகிற ஒருவரின் பணியைத்தான் பெற்றோர்களுக்காக கலாம் காலங்காலமாக செய்துகொண்டிருந்தார். அதனால் அவரை, மாதிரி ஆளுமையாகக் கட்டமைக்க முடிந்தது. மற்றபடி கூட்டு மனப்பான்மையிலிருந்து வேறுபட்ட ஆளுமைகள் ஒருபோதும் இங்கு ஊக்குவிக்கப்பட்டது கிடையாது.

ஆளுமைகளை உருவாக்காமல் இருந்தால் என்ன? அது பெரிய விஷயமில்லையே என்று புறந்தள்ளிவிட முடியாது. ஆளுமையை உருவாக்காமை 'போலச் செய்தலை' அதிகரிப்பதோடு , நமக்கான  அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பதுவரை விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தால் கண்டிப்பாக வேலை என்று ஒரு பாவ்லாவைக் கட்டமைத்து எல்லோரும் அதில் சேர்ந்து இன்று வேலை கிடைக்காமல் 7000க்கும் 8000க்கும் அலைவது ஆளுமையை வளர்க்காததால் இல்லையா? ( அதிலும் மெக்கானிக்கல்னா கெத்து என்ற வெற்று பிம்பத்தை நம்பி என்ன ஏதென்றே தெரியாமல் அதில் சேர்பவர்களின் ஆளுமைதான் என்ன?)

தனித்த ஆளுமையாக நிற்பதில் ஒரு மனிதனுக்கு இருக்கிற பயம் அவனை அவனாகக் காண்பிக்காமலே போய்விடுகிறது. ஆனால் அவனுக்கு தன்னை வெளிப்படுத்த ஆசையாக இருக்கிறது. சமூகம் தன்னைத் தள்ளி வைக்காமல் , தானொரு தனித்த ஆளுமையாக மாற வேண்டுமென்று நினைக்கிறான். அப்பொழுது ஏதாவது ஒரு பெரிய ஆளுமையை தானாகக் கற்பனை செய்கிறான். தானும் அவரும் ஒன்றுதான் என நினைக்கிறான். ஏறக்குறைய ஒரு Alter egoவாக. அவரை முழுவதுமாகப் பின்பற்ற ஆரம்பிக்கிறான். ஒருவேளை அவர் தேர்தலில் நின்றால் அவருக்கே ஓட்டுப்போட்டு தலைவனும் ஆக்கிவிடுவான். ஏனென்றால் அது வேறொருவரல்ல, அது தானேதான் என்று உறுதியாக அவன் நம்புகிறான். நாம்தான் நாட்டையே ஆள்கிறோம், நாம்தான் எம்.ஜி.ஆர் என்று பூரிப்படைகிறான். ஆனால் இந்தத் தன்னைப் போன்ற ஆளுமைத் தேர்வை ஒருவன் வெறுமனே செய்வதில்லை. ஒல்லியாக இருக்கும் ஒருவனுக்கு தனுஷை ஏன் பிடிக்கிறது என்பதில் அதற்கான விடை இருக்கிறது. விஜயகுமார் என்று பெயர் வைத்தவர்களுக்கு விஜயைப் பிடிப்பது ஏன்? கார்த்திகேயன் என்று பெயர் இருப்பவர்களுக்கு சிவ கார்த்திகேயனைப் பிடிப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்க்கும்பொழுது மிகத் தெளிவாக ஒரு விடை கிடைக்கிறது.