ஏப்ரல் 09, 2017

இந்தியக் குடும்ப அமைப்பு

'ஆம்பள வேலைக்குப் போகணும், பொம்பள வீட்டப் பாத்துக்கணும்' என்ற பழைய குடும்ப அமைப்பு அதன் இறுதிமூச்சை விட்டுக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. ஆண், பெண் என இருபாலரும் வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தை நிர்வகிக்கும் புதிய அமைப்பு வந்துவிட்டது. பெண் விடுதலைக்கான மிக முக்கிய படிநிலைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஆனால் நமது பழைய குடும்ப அமைப்பை முற்றிலும் தவறானது என்று ஒருபோதும் நிராகரித்துவிட முடியாது.

நமது பழைய குடும்ப அமைப்பு மிகச்சரியாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. வேலைக்குப் போகும் ஆண் குடும்பத்தை முன்னகர்த்திச் செல்வதற்கான செல்வத்தைக் கொண்டுவருகிறான். வீட்டிலிருக்கும் பெண் உயிர்வாழத் தேவையான உணவை இருவருக்குமாக சமைக்கிறாள். உடல் தேவைகளை இருவரும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ஆண் கொண்டுவந்த பணத்தை உணவுக்காகவும், பிற அத்தியாவசிய தேவைகளுக்காகவும் திறம்படப் பயன்படுத்துகிறாள் பெண். மீதிப் பணத்தை சேமிக்கிறாள். தனக்குக் குழந்தை பிறந்ததும் தன் அம்மாவிடமிருந்து பயின்ற குழந்தை வளர்ப்பு முறைகளைப் பின்பற்றி முழு ஆரோக்கியத்தோடு குழந்தையை வளர்க்கிறாள். இப்படிப் பழைய குடும்ப அமைப்பின் வரையறையை மட்டும் எடுத்துப்பார்க்கும்போது இதில் தவறான விஷயம் என்று ஒன்றைச் சுட்ட முடியவில்லை. இருபாலரும் தனக்கான வேலையைப் பிரித்துக்கொண்டு, அவரவர்க்கான பணிச்சுமையை குறைத்துக்கொண்டு,  ஓரளவு புரிதலோடு வாழ்கிறார்கள்.

ஆனால் புதிய குடும்ப அமைப்பு பொருளியல் மட்டுமே வாழ்க்கை என்ற எண்ணத்தில் மிகத்தவறாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆணும், பெண்ணும் வேலைக்குப் போகிறார்கள். யாருக்கு அதிக சம்பளம் என்ற சிந்தனையில் சுயங்களின் மோதல் துவங்குகிறது. இருவருக்குமே சமைக்க நேரம் இருக்காது. பெரும்பாலான நாட்களில் வெளியிடங்களில்தான் உணவு உண்பதாக இருக்கும். மனைவி டே ஷிப்டிலும், கணவன் நைட் ஷிப்டிலும் வேலைசெய்துகொண்டு இருப்பார்கள். உடல் தேவையைத் தீர்த்துக்கொள்ளக்கூட ஒருவாரம் ஏங்கிக்கொண்டிருக்க வேண்டும். இருவருமே வேலைக்குப் போகும் இந்த அமைப்பில் குழந்தையை யார் வளர்ப்பார்கள்? அம்மாயி இடமோ, அப்பாயி இடமோ ,ஏதாவது ஒரு ஆயாவிடமோ அல்லது ஒரு பெரிய பேபி கேர் சென்டரிலோதான் அந்தக் குழந்தை வளரும். அன்புக்காகவும், பாசத்துக்காகவும் அது எவ்வளவு ஏங்கிப்போயிருக்கும்? பேபி கேர் சென்டரிலிருக்கும் ஏதோ ஒரு பெண்மணியைத்தானே அது அம்மாவாகக் கருதிக்கொண்டிருக்கும்?

பொருளியல் சார்ந்த புதிய குடும்ப அமைப்பு குழந்தையை தனக்கான புதிய உறவாகக் கருதுவதிலிருந்து மனிதனை திசைமாற்றி பொருளியலுக்கான இன்னொரு மூலமாக குழந்தையைக் கருதச்செய்கிறது. புதிய குடும்ப அமைப்பில் வாழ்வு மகிழ்ச்சியைத் துறந்து, யார் பொருளாதார ரீதியாகப் பெரியவர் என்பதை மட்டும் காட்டிக்கொள்ளுதலாக எஞ்சுகிறது.

பழைய குடும்ப அமைப்பு ஆண்- பெண் உறவுகளுக்குள்ளான பகிர்தலை மையப்படுத்தியது. ஆனால் புதிய குடும்ப அமைப்பு தனிமனிதனை மையப்படுத்தியது. புதிய குடும்ப அமைப்பில் ஆண்- பெண் உறவு சமூகத்துக்காக செயற்கையாக கட்டமைப்படுகிறது. ஒரு உறவில் இருப்பதுபோன்ற தோற்றத்தை அது வெளிஉலகுக்குக் காட்டுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்கள், உறவுகள் என்று சொல்லப்படுபவை பொய்யானவை என்கிற பின்நவீனத்துவப் போக்கு புதிய குடும்ப அமைப்பில் இருக்கிறது. மனித மனத்தின் உண்மையான முகம் பற்றிய நேர்மையான நோக்கோடு அணுகும்போது புதிய குடும்ப அமைப்பின் இந்தப் போக்கு சரியானதே.  ஆனால் குடும்பம் போன்ற ஒரு பிம்பத்தை ஒழுக்கவியல் காரணங்களுக்காகவும், சமூக அமைதிக்காகவும் என்றும் அழியவிடாமல் காக்கவேண்டும் என்றால் பழைய குடும்ப அமைப்பு என்ற பொய்த்தனம் நிறைந்த முறை தேவையானதுதான்.

மிகச்சரியாக கட்டமைக்கப்பட்ட பழைய குடும்ப அமைப்பு தோல்வியடைவது அது செயல்பாட்டுக்கு வரும்போதுதான். வீட்டிலுள்ள வேலைகளைச் செய்வது பெரிய விஷயமல்ல, வெளியில் சென்று வேலை செய்வதுதான் கடினமானது என்ற ஆண் ஆதிக்க சிந்தனையும், பெண் ஒடுக்கப்படுதலும் நடக்கும்போது பழைய குடும்ப அமைப்பு பலவீனமாகிறது. பெண் சமைக்கவில்லையென்றால்,  ஆண் இன்னொரு வீட்டில்கூட சாப்பிட்டுக்கொள்ளலாம் . ஆனால் பெண் இன்னொரு ஆடவனிடம் போகக்கூடாது என்று ஒழுக்கம் ஒருபக்கச் சார்பாக மாறும்போது இந்த அமைப்பு அதன் அர்த்தத்தையே இழந்துவிடுகிறது. பெண் பொருளாதார ரீதியாக ஒன்றும் செய்ய முடியாமல் முழுக்க முழுக்க அடிமையாக மாற்றப்படுவது பழைய குடும்ப அமைப்பின் மிகப்பெரும் குறை. ஆனால் பெண்கள் மகிழ்ச்சியாகவும், தங்களுக்குப் பிடித்ததை செய்பவர்களாகவும் இருக்க முடியுமென்றால் பழைய குடும்ப அமைப்பு புதியதைவிட சிறப்பானதே.

குடும்ப அமைப்பை அழியாமல் காக்கவேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது பழைய குடும்ப அமைப்பை சீரமைப்பதுதான். 'ஆண் வேலைக்குப் போக வேண்டும், பெண் வீட்டை நிர்வகிக்கவேண்டும்' என்று வரையறை செய்வதற்கு மாற்றாக ' யாராவது ஒருவர் வெளியே சென்று வேலை செய்ய வேண்டும், இன்னொருவர் வீட்டை நிர்வகிக்கவேண்டும்' எனப் பிரித்துக்கொள்ளலாம். இதை எளிதாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சமூக கண்ணோட்டம் மாறவேண்டும் அல்லது காலப்போக்கில் மாறும். குழந்தையை ஆயா வளர்க்காமல் அம்மாவோ, அப்பாவோ யாராவது ஒருவர் வளர்க்கலாம். வேலைக்குச் செல்பவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வீட்டை நிர்வகிப்பவரின் கணக்கில் போட்டுவிட வேண்டும்.  குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு , வீட்டை நிர்வகிப்பவரின் அனுமதி இருந்தால் மட்டுமே அந்தப் பணத்தை எடுக்கமுடியும் என்று சட்டம் கொண்டுவரலாம். இந்தக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விவாகரத்து நடந்தால் வீட்டை நிர்வகிப்பவருக்கு அந்தத் தொகை முழுவதுமாகப் போய்விடும் என வைத்துக்கொள்ளலாம். இதனால் பொருளாதார ரீதியிலான சிக்கல்களும் பழைய குடும்ப அமைப்பில் தீரும்.