தத்வமஸி

நள்ளிரவில் திடீரென கண்விழித்த எனக்கு அவசரமாகக் கொஞ்சம் அன்பு தேவைப்பட்டது. இந்த நேரத்தில் யாரிடம் சென்று அன்பைக் கேட்பதென்றே எனக்குத் தெரியவில்லை. சேமித்து வைத்திருக்கிற முகவரிகளைத் தேடிப்பிடித்து என் தோழிகளின் கதவை ஒவ்வொன்றாகத் தட்டினேன். எனக்காகவே காத்திருந்ததுபோல் அவ்வளவு சீக்கிரமாக அவர்கள் தங்கள் கதவுகளைத் திறந்தார்கள். தகர்ந்துபோன குடும்பத்தின் கதையைச் சொல்லி கண்ணீர் வடித்தாள் ஒருத்தி. நான் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டேன். மறந்துபோன காதலனை நினைத்து கதறி அழுதாள் இன்னொருத்தி. நான் அவளை ஆசுவாசப்படுத்தினேன். சொல்வதற்கு ஒன்றுமில்லாத ஒருத்தி சோற்றுக்கு வழியில்லாமல் இட்லி விற்ற தன் பால்யத்தின் கதை ஒன்றைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் வெளியேறினேன்.என் கனத்த இதயத்தில் ரகசியத்தின் கதவுகளைத் திறந்து, நிறைந்துபோன அதன் அறைகளில் இந்த வலிகளையும் கஷ்டப்பட்டு நெருக்கிப் போட்டுக்கொண்டேன். கடன் கேட்பதைவிட அன்பைக் கேட்பது எளிதென்றுதான் இவ்வளவுநாள் நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு என் அன்பால் எவ்வளவு வட்டி கொடுக்கவும் தயாராகவும் இருந்தேன். ஆனால் ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு கொடுக்க வைத்திருந்த தங்கள் அன்பை எடுத்து என்னிடம் காட்டியபோது 'அதில்  எனக்கும் கொஞ்சம் அன்பைத் தருவீர்களா?' என்று கேட்க அவ்வளவு தயக்கமாகவும், சங்கடமாகவும் இருந்தது. மீண்டும் வீடு திரும்பி,  துவைக்கப்போட்டிருந்த என்னுடைய  சட்டை ஒன்றை எடுத்து அணிந்துகொண்டேன். அந்த நொடியில் பரிபூரண அன்பு என்னவென்று உணர்ந்துகொண்டேன்.