மே 19, 2017

ஷோபா சக்தியின் கொரில்லா

ஒரு இனக்குழு தனது வலிமையால் இன்னொரு இனக்குழுவின் குரல்வளையை நெரிக்கும்பொழுது, அதன் உரிமைகளை முடக்குகிறபொழுது சர்வாதிகாரத்துக்கு எதிராக விடுதலை இயக்கங்கள் முளைக்கின்றன. ஆனால் அவை மனிதன் என்னும் சுயநலம் நிறைந்த, பிரிவினைகளில் மகிழ்கிற சாதாரண உயிரினத்தால் நிறுவப்பட்டவை. சர்வாதிகார அமைப்பை தோற்கடிப்பதற்கு முன்னால் மற்ற இயக்கங்களைத் தோற்கடிப்பதுதான் முதன்மையானதென்று ஒவ்வொரு இயக்கமும் கருதுகின்றன. காரணம், ஒன்றை நிறுவதலும் அதன் மூலம் கிடைக்கும் அங்கீகாரமும் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை நிறுவிக்கொண்டே இருக்கிறான். நான் அதைச் செய்தேன், நான் இதைச் செய்தேன், வரலாற்றில் எனது பெயரைப் பொன்னெழுத்துகளால் பொறியுங்கள் என்று கதறுகிறான். கவிதை எழுதுகிறேன், மகாகவி என்று என்னைக் கொண்டாடுங்கள் என்கிறான். கதை எழுதுகிறேன். ஆனால் கதைக்குக் கீழே என் பெயரைப் போடாமல் இருக்கமாட்டேன் என்கிறான். மக்களுக்கு நன்மை செய்வதே என் கடமை, கோவில் திருவிழாவிற்கு ஆயிரம் இருக்கைகள் அளியுங்கள், ஆனால் தவறாமல் அதில் என் பெயரைப் பொறித்துவிடுங்கள் என்கிறான். அந்த அங்கீகாரம் அவனுக்கு தேவைப்படுகிறது. வேறு யார் பெயரையும் அந்த இருக்கையில் எழுத விடமாட்டான். இன விடுதலை என்கிற ஒற்றைக் குறிக்கோளைக் கொண்டிருக்கிற இயக்கங்களும் இனவிடுதலை எங்களாலே சாத்தியப்பட்டது என்று வரலாற்றில் எழுதத் துடிக்கின்றன. இனவிடுதலை பின்தள்ளப்பட்டு நிறுவுதலும், அங்கீகாரம் பெறுதலும் முதன்மையாகின்றன.

ஆனால் இதைத் தவறென்றும் சொல்ல முடியவில்லை. உலகம் முழுக்க எல்லா மனிதர்களும் , இயக்கங்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். மனித பண்பே இதுதானென்று சொல்லலாம். ஆனால் கதை நாயகன் ரொக்கிராஜ் நிரூபித்தவைகளுக்கு நேர்மையாக கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரங்களுக்கு பதிலாக அவன் குற்றவாளியாக்கப்படுகிறான். இயக்க துரோகி ஆக்கப்படுகிறான். இயக்கத்தாலும், இலங்கை அரசாலும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகிறான். சித்ரவதை செய்யப்படுகிறான். ஒரு இனத்தின் உரிமைக்காக போராடக் களம்புகுந்தவனின் இருத்தல் கேள்விக்குள்ளாகிறது. இனத்தை விட தனிமனித இருத்தல் எவ்வளவு முக்கியமென்பது ஒருவனுக்கு புலப்படும் இடம் இது. ஒரு போராளியைப் பொறுத்தவரை இது கோழைத்தனமும் கூட. ஆனால் இன்னமும் வாழ விரும்புகிற ஒருவன் சாவு உறுதியான பின்பு ஓடத்தான் செய்வான்.

சர்வாதிகார அமைப்புக்கு எதிரான மோதல் இன்னொரு சர்வ அதிகார அமைப்பை அமைப்பதற்கே என்கிற உண்மையை கொரில்லா முகத்திலறைகிறது.இடையில் துண்டாடப்படுவது மக்கள்.பதுங்குக்குழிகளில் பயந்துகொண்டிருப்பது மக்கள். எக்கணமும் எதும் நேரலாம். ஆனாலும் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிகாரங்களுக்கிடையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது வாழ்தல் என்பதே அவர்களுக்குத் தெரிந்தது.

கதையின் இடையில் ஒரு நகைச்சுவை துணுக்கு வருகிறது. பேருந்தில் போய்க்கொண்டிருக்கும் முதியவர் ஒரு இளைஞனைப் பார்த்து தம்பி இயக்கமா? என்கிறார். அவன் இல்லை என்கிறான். இயக்க சப்போர்ட்டா, சொந்தக்காரர் யாரும் இயக்கமா என்கிறார். அவன் எல்லாவற்றுக்கும் இல்லை என்கிறான். அப்போ எடுடா உன் காலை, பஸ் ஏறியதிலிருந்து நீ என்ற காலை மிதிச்சுகொண்டல்லோ நிற்கிறாய் என தைரியமாக சொல்கிறார். ஒரு சாதாரண மனிதன், இன்னொரு சாதாரண மனிதனை நோக்கித்தான் குரலெழுப்ப முடிகிறது. மக்களுக்கான இயக்கத்திலொருவனை காலை எடுடா என்று உரிமையாகச் சொல்ல முடியாத ஜனநாயகப் படுகொலைதான் இலங்கையில் நடந்ததென்பதை இதைவிட நுட்பமாக விளக்க முடியாது.

ஒரு அமைப்பின், இயக்கத்தின் உறுப்பினர் ஆனவுடனே ஒரு அதிகாரத் தோரணை வந்துவிடும். அது ரொக்கிராஜ் விஷயத்திலும் நிரூபணம் ஆகிறது. அவனுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும் அவன் அப்பாவை விசாரணைக்கு கூட்டிவந்து அடிக்கலாமா எனக் கேட்கவைப்பது அந்த அதிகாரம்தான்.

அதிகார மையங்கள் என்பது எல்லா அமைப்புகளிலும் இருப்பதென்பதால் குடும்ப அமைப்பும் இதற்கு விதிவிலக்கானது அல்ல. ரொக்கிராஜுக்கும் அவன் தந்தை காட்டாற்ற ஏசுராசனுக்கும் இடையிலான அதிகாரப்போர் இப்புனைவில் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. ஊரிலிருக்கும் இன்ஸ்பெக்டரையே அடித்து பெரிய ரவுடியாக வலம் வருபவன் காட்டாற்ற ஏசுராசன் என்கிற கொரில்லா. ஆனால் அப்படிப்பட்ட ஒருவனை இயக்கத்தில் சேர்ந்துவிட்டோம் என்கிற  தைரியத்தில் இழுத்து வந்து அடிக்கலாம் என்கிறான் மகன். குடும்பத்தில் யார் பெரியவர் என்கிற அதிகாரப்போட்டி இங்கு ஆரம்பமாகிறது. மகனைப் பார்த்தாலே எரிச்சலாகிறான் காட்டாற்ற ஏசுராசன்.

இந்த அதிகாரப்போட்டி பற்றி நான் எப்பொழுதுமே சிந்தித்துப் பார்ப்பதுண்டு. அப்பா தன் இளமையில் மகன்களுக்கு சோறு போட்டு, கல்வி நிலையங்களுக்கு அனுப்பி பார்த்துக்கொள்வார். ஒரு மகன் பிறக்கும்பொழுதே அப்பாக்களுக்கு ஒரு மமதை வந்துவிடும். மனைவி, குழந்தை என்று பலபேரை ஆதிக்கம் செய்யக் கிடைப்பதால், ஒரு அமைப்பின் தலைவனாக முடிவதால் வரும் தோரணை அது. ஆனால் காலம்தான் எவ்வளவு கொடியது? ஆதிக்கம் செய்த அப்பாவுக்கு வயதாகிறது. மகன் இப்போது அப்பாவாகிறான். " அப்பா வீட்ல சும்மா ஒட்காருங்க. வேலைக்கெல்லாம் ஒண்ணும் போக வேணாம்" என்கிறான் அப்பாவான மகன். ஆனால் அப்பாவால் இதை ஒப்புக்கொள்ளவே முடியாது. தனது அதிகாரம் கைவிட்டுப்போவதை வேதனையோடு பார்க்கிறார். " எனக்கு கை, கால் இருக்குடா. சாகற வரைக்கும் நான் உழைச்சு சாப்பிடுவேன். எனக்கெவனும் ஒண்ணும் தரவேண்டாம்" என்று உளமகிழ்ந்து கொள்கிறார். ஆனால் அத்தனை அதிகாரத்தையும் இழந்து மகன் கொடுக்கிற சோற்றை ஒருநாள் தின்றுதான் ஆகவேண்டும். வாழ்வுதான் எவ்வளவு நிலையற்றது?

இயக்கத்திலிருந்து ரொக்கிராஜ் நீக்கப்பட்டதும் காட்டாற்ற ஏசுராசனுக்கு மீண்டும் மகனைப் பிடித்துப்போகிறது. அவனுக்கு ஒரு சட்டை எடுத்துக்கொடுக்கிறார். " உங்க அப்பாடா நான். நீ எனக்கு அடிமை. நான் உன்னவிடப் பெரியவன்" என்கிற அதிகார ருசிதான் அது. சித்ரவதைகளைத் தாண்டி இந்தத் தோல்வியேகூட ரொக்கிராஜை வேறு நாட்டிற்கு ஓடச் செய்திருக்கக்கூடும்.

ஒருபுறம் பிரான்சில் தஞ்சம் கோரும் யாக்கோபு அந்தோனிதாசனின் கதை மறுபுறம் ரொக்கிராஜின் கதை என இரண்டு கதைகள் நாவலில் வருகின்றன. இது இரண்டும் இணையும் இடம் நாவலில் மிகச்சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

நாடிழந்து,  எப்படியாவது வாழ்ந்தால் போதும் என அகதிகளாய் தப்பி ஓடும் மக்கள் மீண்டும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தஞ்சம் புகுந்த நாட்டிலேயே தங்களுக்குள் அடித்துக்கொள்வது வேதனையிலும் வேதனை.

ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளை, இயக்கங்களின், அரசாங்கங்களின், மனிதர்களின் தவறான நடவடிக்கைகளை, தவறான கொள்கைகளை உணர்ச்சிகளின்றி பதிவு செய்கிறார் ஷோபா சக்தி. அதிகாரத்துக்கான போட்டி நடைபெறும்பொழுது,  எப்பொழுதும் அதிகாரத்தை பெற்றுவிடமுடியாத சாதாரண மனிதர்கள் குறித்தும், அவர்களின் இருத்தல் குறித்தும் சிறிதும் கவலைகொள்ளாத மனித வன்மத்தின்மீது காறி துப்புகிறது கொரில்லா. யாருக்காக இந்தப் போராட்டங்கள் என்ற கேள்விக்கு 'மக்களுக்காக' எனும் எதிர்தரப்பை அப்படி சொல்லவிடாமல் நிலைகுலையச் செய்கிறது கொரில்லா.

( கொரில்லா- ஷோபா சக்தி. கருப்புப் பிரதிகள் வெளியீடு)