ஜூன் 16, 2017

இரண்டு கடிதங்கள்

நண்பா,

எப்படி இருக்கிறாய்? இதை உனக்கு எழுதலாமா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். நான் என்னவாக உணர்கிறேன் என்பதை யாருக்கும் காட்டிக்கொள்ள, என்னை நிரூபித்துக்கொள்ள எனக்கு எப்போதும் விருப்பமில்லைதான்.  ஆனாலும் எழுதித்தான் இதைக் கடக்கமுடியுமென்று தோன்றுகிறது. என் வலிகளை எப்பொழுதும் நான் எழுதித்தான் கடந்திருக்கிறேன். உன்னிடமிருந்து பரிதாபத்தையோ, ஆறுதலையோ நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஆறுதல் சொல்லக்கூடிய தகுதி எவனுக்கும் இருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை. ஆனாலும் இதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதை 'ம்' கொட்டி நீ கேட்பதாக நான் கற்பனை செய்துகொள்கிறேன். அதுதான் எனக்கு தேவைப்படுகிறது.

ஆம்.மீண்டும் அது நிகழ்ந்துவிட்டது. காதல் என்ற பேயின் கைவிலங்கில் மீண்டும் சிக்கிக்கொண்டேன். ஒன்றேகால் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தேனோ அதேபோல் மாறிவிட்டேன்.

என் பதிவொன்றைப் படித்த அவள், என்னிடம் அதைப் பற்றிப் பேச ஐந்து நிமிடங்கள் வேண்டுமென்றாள். முதல் பேச்சிலேயே அவளை எனக்குப் பிடித்துவிட்டது. நான் இவளுக்குக்காகத்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேனோ என்று தோன்றியது. இதைப் பேசவேண்டும், இதைப் பேசக்கூடாது என்று எங்களுக்குள் எந்த வரையறையும் இருந்ததில்லை. எங்களுக்குள் ஆண், பெண் என்ற வேறுபாடே இருந்ததில்லை. நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். தனிமையின் வெறுமையை பற்றி, காதலில் மறைந்திருக்கும் சுயநலத்தை பற்றி, காமத்தின் சுவாரசியங்களை பற்றி, திராவிட அரசியலை பற்றி, தமிழ் தேசிய அரசியலைப் பற்றி, பாஜக வின் பாசிச அரசியலைப் பற்றி, அவள் குடும்பத்தைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, குடும்ப அமைப்பைப் பற்றி, திருமணத்தைப் பற்றி, அவளுக்கு பிடித்த பாடல்களைப் பற்றி, அவள் எழுதுவதைப் பற்றி, நான் எழுதுவதைப் பற்றி, எனக்கு பிடித்த கவிதைகளைப் பற்றி,  Fifty shades of greyவைப் பற்றி, வெண்ணிற இரவுகளைப் பற்றி, Friends என்ற ஆங்கில சீரியலைப் பற்றி, அவள் அப்படித்தான் என்று தமிழில் வெளிவந்த நம்பவியலாத ஒரு படத்தைப் பற்றி என்று நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம், பத்து மணி நேரம், பனிரெண்டு மணிநேரம் எனப் பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் அவள்மீதான எனது பிரியம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவளிடம் காதலை சொல்வதற்காக ஏங்கினேன். அவளை ஒருநொடி கூட பிரிந்திருக்க என்னால் முடியவில்லை.

இப்படியாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் நாளொன்றில் அவள் பைத்தியக்காரத்தனமாக நேசிக்கும் ஒருவனைப் பற்றி அவளைப் பைத்தியக்காரத்தனமாக நேசித்துக்கொண்டிருக்கும் என்னிடம் சொன்னாள். என்னால் நம்பவே முடியவில்லை. நான் மீண்டும் ஒருமுறை காதல் தோல்வியின் விளிம்புக்கு அருகில் நிற்பதை உணர்ந்தேன். அவள் அவனைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள். நான் அவளை ஆறுதல்படுத்தினேன். அவள் காதலனைவிட அதிகமாக நான்தான் அவளோடு பேசியிருப்பேன்.  நிச்சயமாக அலாதியான அன்பை நான் அவளுக்குக் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் எளிதாகக் கிடைக்கும் அன்பை புறக்கணித்து,  கிடைக்காத அன்புக்காக ஏங்கி சாகும் மனிதனாகவே அவளும் இருந்தாள்.

நண்பா, ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண்ணைப் பற்றிப் பேசினால் பொறாமைப்படுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்பாய். ஒரு ஆணிடம் இன்னொரு ஆணைப் பற்றிப் பேசினால் அவன் பொறாமைப்படமாட்டான் என்று யார் சொன்னது? எனக்கு அவ்வளவு பொறாமையாக இருந்தது. ஒரு இளம் ஆணுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான உறவை ஒருபோதும் நட்பென்று அழைக்கமுடியாது .இளம் வயதில் ஒரு பெண்ணை ஆணோ, ஒரு ஆணைப் பெண்ணோ ஒரு ஈர்ப்பில்தான் தேடிப்போகிறார்கள். காதலுக்கு முந்தைய படிநிலை அது. அப்படிப்பட்ட நிலையில் இன்னொரு ஆண் அந்த சூழலுக்குள் வரும்போதே அந்த உறவு உடைந்துவிடுகிறது. அதிலுள்ள நெருக்கம் குறைந்துவிடுகிறது. நானும் அதை உணர ஆரம்பித்தேன். அவளுடனான எனது நெருக்கம் குறைய ஆரம்பித்தது. ஆனால் அது தந்த வலியை என்னால் தாங்கவே முடியவில்லை. அவளை மீண்டும் தேடிச் சென்றேன். அவளை எப்பொழுதும் அழைப்பதுபோல் 'என்னடி' என்றுகூட என்னால் அழைக்க முடியவில்லை.

என்னுடைய நடவடிக்கைகளின் மாற்றங்களை கவனித்து நான் யாரையாவது நேசிக்கிறேனா என்று அவள் ஒருநாள் கேட்டாள். நான் உன்னைத் தான் நேசிக்கிறேன் என்று சொன்னேன். நண்பா, நான் ஏன் அப்படி சொன்னேன்? அவளைக் காயப்படுத்தவா? நீ இவ்வளவு நாட்கள் என்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தாய் என்று குத்திக்காட்டவா? எனக்குத் தெரியவில்லை. நான் எப்பொழுதும் அடுத்தவர்கள் உறவில் தலையிடுகிறவனாகவே இருக்கிறேன். அது என்னை குற்ற உணர்வுக்கு உள்ளாக்குகிறது. ஆனால் அவள் மீதான காதலை நான் சொல்லிவிடாமலே போய்விடக்கூடாதென்று நினைத்தேன்.

நான் அவளை நேசிப்பதாக சொல்லிய இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் எனக்கு ஐ லவ் யூ அனுப்பினாள். நானும் அனுப்பினேன். அதற்குப் பிறகு சில முறைகள் மிகுந்த அன்போடு லவ் யூக்களைப் பரிமாறிக்கொண்டோம். ஆனால் இந்த ஐ லவ் யூக்களின் பொருள் என்னவென்று எனக்கு இப்போதுவரைப் புரியவில்லை. அவளை நான் மிகுந்த மனக்குழப்பத்திற்கு உள்ளாக்கி விட்டேனென்று என் குற்ற உணர்வு அதிகரித்தது. அவள் மனநிலை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருந்தது. ஒருநாள் அவள் தன்னை தவிக்க வைக்கும் அவளுடைய காதலனைப் பற்றி மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். நான் தகிக்க ஆரம்பித்தேன்.

கடைசியாக , அவள் எப்பொழுதும் எனக்கு சிறந்த தோழிதான் என்று புரிந்துகொண்டேன். அவள் அவ்வளவு நம்பிக்கையோடு ஒவ்வொன்றையும் என்னிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறாள். உடைந்து அழுகிற ஒரு மனிதனை கண்டுகொள்ளாமல் செல்ல என்னால்  முடியவில்லை. என் மனக்காயங்களோடு நான் அவளை ஆசுவாசப்படுத்தினேன். நிச்சயமாக ஒருநாள் அவளிலிருந்து நான் விலகிவிடக்கூடும். ஆனால் அதை எப்படிச் செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. அது எல்லா உறவுகளிலும் இயல்பாக நடப்பதுபோல் நடக்கட்டும் என்று எனக்கு தோன்றுகிறது.  " உன்னிடம் நான் இவ்வளவு பேசியிருக்கக்கூடாது. உன்னைக் காயப்படுத்தி விட்டேன்" என்று ஒருநாள் அவள் சொன்னாள்.  யார்தான் யாரைத்தான் காயப்படுத்தவில்லை என்று நினைத்துக்கொண்டேன். நாம் ஒருவரை நேசிக்க, அவர் இன்னொருவரை நேசிக்க இந்த முடிவிலா அன்புத் தேடலை நினைத்து சிரித்துக்கொண்டேன். எவ்வளவு விந்தையான உலகம் இது? எவ்வளவு மோசமான மனிதர்கள் நாம்? எவ்வளவு கேவலமான மனது இது?

********************************************

பேரன்பு கொண்ட நண்பா,

உன் கடிதம் கண்டேன். சம்பிரதாயத்துக்குக்கூட நலமா என்று கேட்க விரும்பவில்லை. நிச்சயமாக நீ நலமாய் இருக்க மாட்டாய். நாமெல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்றால் காதலைப் பற்றி பக்கம் பக்கமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுகிறவர்கள். காதல் என்பது சுயநலங்கள் நிறைந்தது, காதல் என்பது  மனித வெறுமையைப் போக்கிக்கொள்ளும் ஒரு ஏற்பாடு என்று அடுத்தவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருப்போம். ஆனால் இதெல்லாம் நன்றாகத் தெரிந்தாலும் நாமே காதலித்துக்கொண்டுதான் இருப்போம். பிறகு வதைபடுவோம்.

உண்மையில் இதற்கு ஒன்றுமே செய்ய முடியாதுதான். காதல் ஒரு அபாயகரமான உணர்வு. நாம் கொஞ்சம்கூட நினைக்காத நேரத்தில் நினைக்காத மனிதர்கள் மேல் அது வந்துவிடும். நீ இவ்வளவு நாள் கொண்டிருந்த அத்தனை சிந்தனைகளையும் அது அழித்துவிடும். ஆனாலும் எந்த நொடியில் அதற்குள் விழுந்தோம் என்பதைக் கண்டறிய முடியாது. எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் அது எப்படியேனும் நிகழ்ந்துவிடும்.

எனவே அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை யோசிப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஒரு தோல்வியின் முடிவில் எப்பொழுதும் நீ செய்யவேண்டியது அதை ஏற்றுக்கொள்ளுதலைத்தான். ஏற்றுக்கொள்ளுதலைத் தவிர இதில் நீ செய்வதற்கு ஒன்றுமேயில்லை. காதல் என்கிற உணர்வு இரண்டு பேருக்கு இடையில் இயல்பாக உருவாகி வர வேண்டும். அதை நாம் ரொம்பவும் கஷ்டப்பட்டு உருவாக்கி எடுக்க முயலக்கூடாது. எந்த உந்துதலும் இல்லாமல் இரு மனமும் அதை உணரவேண்டும்.

உனக்கு எவ்வளவு வலிக்கிறது, நீ எவ்வளவு காயம்பட்டிருக்கிறாய் என்பதை அவளுக்கு காட்டி என்ன செய்யப்போகிறாய்? அது அவளை இன்னும் கொஞ்சம் காயப்படுத்தத்தான் கூடும். உன்மேல் பரிதாபத்தை ஏற்படுத்தக்கூடும். ஏன் இரண்டு பேரும் கஷ்டப்பட்டுக்கொள்ள வேண்டும்?  ஒன்று அவளை விட்டு  விலகு அல்லது நீ சந்தித்த புத்தம் புதிய பெண்ணைப்போல் அத்தனையையும் மறந்து அவளோடு நட்பில் இரு. இது எவ்வளவு கடினமென்பதை நான் அறிவேன். அவளை விட்டு விலகுவதாக இருந்தால் உனக்குப் பிடித்தவற்றில் கவனம் செலுத்து. எதையாவது வாசி, திரைப்படம் பார். ஆனால் ஆரம்பத்தில் உன்னால் மனம் ஒன்றி ஒரு பக்கத்தைக்கூட படிக்க முடியாது, ஒரு காட்சியைக்கூட பார்க்கமுடியாது. ஆனாலும் இதைத் தவிர வேறு  வழிகளில்லை. முயற்சி செய்.

கடைசியாக நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நிறைவேறாத அல்லது சொல்லப்படாத காதல்கள் ஒருபோதும் முற்று பெறுவதில்லை . இரண்டு பேருக்கு இடையிலான காதல் ஒருநாள் சலித்து ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடும். ஆனால் நிறைவேறாத காதல் என்றும் சலிக்காது. நீ அதை அடையவே இல்லை. நீ அதற்காக ஏங்கிக்கொண்டே இருப்பாய். அதில் இருக்கும் வலியை நான் அறிவேன். ஆனால் அதில் ஒரு சுகம் உண்டு. நினைவுகளில் அமிழ்ந்து கிடக்கும் அந்த சுகத்தை நீ கண்டிப்பாக காலப்போக்கில் அறிவாய். அப்பொழுது நீ இதை ஒரு புன்சிரிப்பில் கடப்பாய். அப்பொழுது நீ இன்னொருவரை காதலித்துக்கொண்டிருக்கவும் கூடும். தயவுசெய்து இல்லையென்று மறுக்காதே, இதையேதான் போனமுறையும் சொன்னாய். வாழ்வு இன்னும் இருக்கிறது நண்பா.