ஜூன் 16, 2017

முற்போக்கும் சில யதார்த்தங்களும்

எதிர்பாலினத்தின் மீது உருவாகும் ஈர்ப்பை பொதுவாக உடல் சார்ந்த ஈர்ப்பு, உணர்வு சார்ந்த ஈர்ப்பு என வகைபடுத்தலாம். ஒரு பெண்ணையோ/ ஆணையோ பார்க்கும்பொழுது இவர் உடலை ஒரு முறையாவது அடைந்துவிட வேண்டும் என்ற வெறியை உடல் சார்ந்த ஈர்ப்பு எனலாம். தேவையான அளவுக்கு உடலைப் பயன்படுத்திக்கொண்டபின் இந்த ஈர்ப்பு முடிவுக்கு வரும். வெறும் உடல் சார்ந்த ஈர்ப்புகள் உடலை/அழகை மட்டுமே பிரதானமாகக் கொண்டதென்பதால் இந்த உறவுமுறையில் சொல்லப்படும் வார்த்தைகளின் உண்மைத்தன்மை கேள்விக்குரியதே. இந்த உறவுமுறையில் முழுமையாக நம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.  இன்றைக்கு பெரும்பாலான காதல்களை இந்த வகைபாட்டில் கொண்டுவரலாம்.

மாறாக உணர்வு சார்ந்த ஈர்ப்பு என்பது ஒருவரின் கருத்தியல்களையும், சிந்தனைகளையும் காதலிப்பது.நம் மனச்சிக்கல்களை, வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் வாயிலாக வருவது. இங்கு உடல் அழகை  கணக்கில் எடுத்துக்கொள்வதென்பது ஒப்பீட்டளவில் குறைவுதான்.

தங்கள் வாழ்வில் கண்ட துயரமான சம்வங்களின் மூலமாக உடைந்து போனவர்கள் தங்களை மீட்டுருவாக்கம் செய்கிறபொழுது அவர்கள் சிந்தனைகள் புதிய தளத்தை அடைகின்றன. வாழ்வைப் பற்றிய புதிய பார்வையும், புரிதலும் அவர்களுக்குக் கிடைக்கிறது. இப்படிப்பட்ட சிந்தனைத்தளத்தில் உடையவர்கள்தான் பெரும்பாலும் உணர்வு ரீதியாக காதலிப்பவர்கள்.  பெரும்பாலும் இவர்கள் எல்லாவற்றிலும் முற்போக்கான சிந்தனையைக் கொண்டிருப்பார்கள். கட்டற்ற பாலியல் சுதந்திரத்தினை ஆதரிப்பவர்களாக, பெண்ணிய சிந்தனைகளுக்கு குரல்கொடுப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள். ஒருவர் ஒரே நேரத்தில் பலபேரைக் காதலிக்கமுடியும், பலபேருடன் உறவுகொள்ளமுடியும் என்ற கருத்தியலை வைத்திருப்பார்கள்.

ஆனால் ஒரு மனிதன் ஒரே நேரத்தில் உடல் சார்ந்து ஒருவரையும், உணர்வு சார்ந்து இன்னொருவரையும் காதலிப்பதென்பது சிக்கல்கள் நிறைந்தது . உணர்வு சார்ந்து இருவரைக் காதலிப்பதென்பதும் சிக்கலானதுதான். வாயளவில் முடியும், முடியும் என்று சொன்னாலும் நடைமுறை வாழ்வில் இதைப் பின்பற்றுவது மிக மிகக் கடினம். உணர்வு பூர்வமான ஒரு உறவில் நாம் ஒருபோதும் அப்படி நடந்துகொள்ளவே முடியாது. உணர்வு சார்ந்த ஈர்ப்பு , உடலால் தூண்டப்படாத ஒன்றாக இருந்தாலும்கூட அந்த உறவுமுறையில் உண்டாகியிருக்கும் பிணைப்பை, அன்பை, காதலை வார்த்தைகளில் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.   ஒரு காதல் உணர்வு சார்ந்தது என்றாலும் உடல்களின் இணைவில்தான் அது பரிபூரணம் அடைகிறது. ஆக, காதல் உடலைப் பார்த்து வந்தாலும், அல்லது உணர்வு ரீதியாக உருவானாலும் அதனை முழுமையாக வெளிப்படுத்த முடிவது காமத்தில்தான். காமமற்ற காதல் என்பது ஒருபோதும் சாத்தியமில்லாத ஒன்று. ஐ லவ் யூ என்று வெறுமனே சொல்வதற்கும், முத்தமிட்டு விட்டு சொல்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. ஒரே நேரத்தில் பலபேரிடம் இதைச் செய்வதென்பது மனக்குழப்பங்களை ஏற்படுத்துவது.

உடல்சார்ந்த ஈர்ப்பில் வெளிப்படைத்தன்மை அவசியமற்றது. உடலை அடைந்தவுடன் அது முடிந்துவிடுகிறது. நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று உருக வேண்டிய அவசியம் இல்லை. நினைத்தது கிடைத்தால் கிளம்பிப் போய்க்கொண்டிருக்கலாம். ஆனால் உணர்வு சார்ந்த ஈர்ப்பில் நிச்சயம் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது. ஒவ்வொன்றையும் பேசிப் பேசித்தான் இந்தக் காதல் வளரும். ஆனாலும் வெளிப்படைத்தன்மையின் மூலமாக உணர்வு சார்ந்த ஈர்ப்பின் நெருக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்னொரு மனிதனுடனான உறவில் முழுமையான வெளிப்படைத்தன்மை எப்பொழுதும் உறவை சிக்கலுக்குள்ளாக்குவதே.

இன்றைக்கு திருமணம் செய்வதற்கான வயதும், அதற்கான தகுதிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஒரு ஆணோ, பெண்ணோ தங்கள் உடல்தேவையைத் தீர்த்துக்கொள்ள திருமணம் வரை காத்திருக்கவேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. திருமணத்துக்கு முந்தைய உறவுகள் நிச்சயமாக தவிர்க்கமுடியாதவையே. நாளை நான் திருமணம் செய்துகொள்ளும் பெண் பலபேரைக் காதலித்திருக்கக்கூடும், சில பேருடன் உடல் சார்ந்த உறவுகள் வைத்திருக்கக்கூடும். அது எனக்கு மிகத்தெளிவாகவே தெரியும். இத்தனையும் எனக்கு தெரியுமென்றாலும் அவளை நான் உணர்வு சார்ந்து காதலிக்கும்பொழுது அவள் வெளிப்படைத்தன்மையோடு அவளது கடந்தகால உறவுகளை என்னிடம் சொல்வதை ஒருபோதும் தாங்கிக்கொள்ளமாட்டேன். அவள் காதலின் தோல்வியைச் சொன்னால்கூட அவள் மீதான அன்பு அதிகரிக்க வாய்ப்புண்டு .ஆனால் ஒருபோதும் ஒரு உடல் சார்ந்த உறவைப் பற்றி அவள் என்னிடம் சொல்லக்கூடாது என்றே நினைப்பேன். நாம் எந்தவொரு சிந்தனைத்தளத்தை, பக்குவத்தை முன்னரே அடைந்திருந்தாலும் அதை நம்மால் சகித்துக்கொள்ள முடியாது. அந்த அளவுக்கு possessiveness உணர்வு சார்ந்த உறவில் உண்டு. Gangbang பற்றியோ, groupsex பற்றியோ நான் உணர்வு சார்ந்து காதலிக்கிற பெண் என்னிடம் பேசுவதை நான் நிச்சயமாக விரும்பமாட்டேன். உடல் சார்ந்த ஈர்ப்புகளில் இந்த மாதிரியான sexual fantasyகளைப் பற்றிப் பேசலாம். இதற்கு அர்த்தம் அவள் அதையெல்லாம் செய்யக்கூடாது என்பதல்ல. எதைச் செய்வதற்கான உரிமையும் அவளுக்குண்டு. அதை அவள் முன்னர் செய்திருக்கலாம். இனியும் செய்யலாம். அவள் அதை என்னிடம் சொல்லாமல் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். வெளிப்படைத்தன்மை என்னை அவளிலிருந்து விலகச் செய்கிறது. எவ்வளவு முற்போக்கு பேசினாலும் என்னைக் காதலிக்கும் கணமொன்றில் ஒரு பெண் என்னை மட்டும்தான் காதலிக்கவேண்டுமென்று நினைக்கிறேன். அப்படித்தான் எவராலும் இருக்கமுடியும். வாழ்க்கையில் எத்தனைபேரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்,  ஆனால் ஒரு நேரத்தில் ஒருவரைத்தான் உணர்வுபூர்வமாக காதலிக்கமுடியும். அந்தப் பித்து தீர்ந்தபின்புதான் இன்னொருவருக்குப் போக முடியும். காதலின் உச்சகட்டமாக காமம் இருக்கிற நிலையில் காதலில் திளைக்கிற ஒருவன் வேறொரு பெண்ணோடு உறவு வைத்துக்கொண்டான் என்பதை எந்தப் பெண்ணும் அவ்வளவு சீக்கிரத்தில் மன்னித்துவிட மாட்டாள். உடல் பெரிய விஷயமல்ல என்று முற்போக்காக சொல்லலாம், ஆனால் அது அப்படியல்ல என்பதே உண்மை.  சில வேளைகளில் நம்மை மீறி இவ்வாறான உடல் சார்ந்த நடவடிக்கைகள் நடந்துவிடும் வாய்ப்புகள் உண்டென்றாலும் அதை வெளிப்படையாக சொல்லாமலிருப்பதே சிறப்பு. காதலும், காமமும் புனிதத்தன்மை அற்றதாகவே இருந்தாலும் பொய்யாகவாவது அதற்கு புனிதத்தன்மை பூசுவதன் மூலமாகவே நாம் நம்மை குழப்பங்களிலிருந்து விடுவித்துக்கொள்ளமுடியும்.

நாம் தொடர்ச்சியாக பாலியல் சுதந்திரத்தை பேசி வந்தாலும், உடலைக் கடந்து வருதலை பேசி வந்தாலும் ஒரு உணர்வு சார்ந்த உறவுமுறையில்கூட அவ்வளவு வெளிப்படையாக நம்மால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஒரு ஆணின் மீதான/ பெண்ணின் மீதான பிடிப்பை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிட முடியாதுதான். ஒரு உறவு, உணர்வு சார்ந்ததாகவே இருந்தாலும் அதிலிருந்து உடல் வேண்டாமென்று தனியாகப் பிரித்துவிட முடியாதுதான். மனித மனதின் விசித்திரங்களை நாம் மிகச்சரியாக புரிந்துகொள்கிற அதே வேளையில் பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மில் இருக்கும் பழைய பொது மனதின் எச்சங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை . எனவே சில நேரங்களில் சிலவற்றை மறைத்து , வெளிப்படைத்தன்மையின்றி,  கொஞ்சம் பொய்த்தனத்தோடுதான் எந்த உறவையும் கொண்டுசெல்ல முடியும். ஆனால் அப்படி செய்வதுகூட நாம் மிக மிக விரும்பும் ஒரு உறவு எப்பொழுதும் நம்மோடு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். அப்படித்தான் நாம் வாழமுடியும், மற்றபடி இதில் குற்ற உணர்ச்சிக்கெல்லாம் வேலையேயில்லை.