ஜூலை 09, 2017

சாரு நிவேதிதாவின் ராஸலீலா

ஓரளவு ஏழ்மையான அல்லது நடுத்தரமான குடும்பத்தில் பிறந்து பெருநகரங்களில் வேலைசெய்யும் இளைஞர்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒருவகையினர் தனக்குக் கிடைத்த சம்பளத்தில் தனது தேவைக்கும் குறைவாக எடுத்துக்கொண்டு தனது குடும்பத்துக்கு அதிகமான தொகையை அனுப்பிவைப்பார்கள். காசில்லாமல், பலநாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்து தங்களை குடும்பத்துக்காக உழைக்கிற தியாகிகளாக சித்தரித்துக்கொள்வார்கள். கடைசிவரை தனக்காக வாழாமல், வாழ்வே இப்படித்தான்,  இதை இப்படியே வாழவேண்டியதுதான் என்று தங்களை வாழ்விற்கு ஒப்புக்கொடுப்பார்கள்.

ஆனால் இன்னொரு வகையினர் நடுத்தர குடும்ப அமைப்பின் இந்த கொடுக்கல் வாங்கல்களை உதறித்தள்ளி வாழ்வைக் கொண்டாடுவார்கள். போனால் போகுதென்று ஒரு ஆயிரமோ, இரண்டாயிரமோ வீட்டுக்குப் போகும். தான் வாழ நினைத்த மேட்டுக்குடி வாழ்க்கையை முடிந்த அளவுக்கு வாழ்வார்கள். குடும்பத்தில் கஷ்டம் என்கிற விஷயங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அது என் தப்பா? என்ற கேள்விக்கணையை வீசி குடும்பத்தினரைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவார்கள். மொத்தப் பணத்தையும் குடும்பத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் நண்பர்களைப் பார்த்தால் இவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். " ஏண்டா அத்தனையையும் வீட்டுக்கே குடுத்துட்டா எப்போதாண்டா நீ வாழ்வ?" என்று அறிவுரைகளை அள்ளித் தெளிப்பார்கள். தியாகிகள் திருந்தப்போவதில்லை என்பதால் வாழ்க்கையைக் கொண்டாடுபவர்கள் அவர்களைத் தூற்றுவதோடு அவர்களை விட்டு விலகவும் ஆரம்பிப்பார்கள்.

இதில் ஏறக்குறைய இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் கண்ணாயிரம் பெருமாள். மலம் அள்ளுவதில் ஆரம்பிக்கிறது பால்யம். அதற்குப் பிறகு உயரதிகாரிகளின் மனிதத்தன்மையற்ற அதிகார வெறிகளால் தபால் துறையில் அடிமை வேலை செய்வதில் கழிகிறது இளமை. இந்த அமைப்பு அவனை எரிச்சலூட்டுகிறது. போதுமான பணம் இல்லாத நடுத்தர வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவேயில்லை. தன் எழுத்தின் மூலம் கிடைத்த பணக்கார நண்பர்களால் வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பிக்கிறான் அவன். அப்பொழுது மற்ற நடுத்தர வாழ்க்கைக்காரர்கள் வாழ்வதெல்லாம் வாழ்க்கையா என்று காறித்துப்புகிறான். இயல்பாகவே இந்தத் தன்மை எவருக்கும் வந்துவிடுமென்றுதான் தோன்றுகிறது. தானும் ஒரு பணக்காரனாய் மாறிவிட்டதைப் போன்ற ஒரு முகமூடியை அணிந்துகொள்ளுதல்,  ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தல்.

எழுத்தின் மூலம் ஏராளமான பெண் தோழிகள் கிடைக்கிறார்கள். அவர்களோடு பலமணிநேரம் பேசுகிறான் கண்ணாயிரம் பெருமாள். தனக்கு இளமையில் போதுமான அளவு கிடைக்காத காமத்துக்காக ஏங்குகிறான். ஆனால் அது கிடைக்கவேயில்லை. பேச்சு பேச்சாகத்தான் இருக்கிறது. காரும், பணமும் வைத்திருக்கும் நண்பர்களுக்கே அதெல்லாம் கிடைக்கும் என்கிறான் பெருமாள். பணக்காரனோடு சேர்ந்தால் ஒருவன் பணக்காரன் ஆகிவிடுவானா? பிம்பம் உடைகிறது. ஆனால் மனம் அடங்குவதில்லை. மீண்டும் பெண்களைத் தேடிச்செல்கிறது.

கண்ணாயிரம் பெருமாளை ( அல்லது சாருநிவேதிதாவை) மிக நெருக்கமாக உணர்கிறேன். இதோ நான் வாழ நினைப்பதை, என் வாழ்க்கையைத் தான் இவர் எழுதியிருக்கிறார். ஆனால் இதைப் படித்து முடித்தபின் இது நமக்குத் தருவது என்ன என்ற கேள்வி எழுகிறது. ஒருவனுக்குப் போதுமான காமம் கிடைக்கவில்லை, அதற்கு யார் காரணம்? அதை அவனுக்குத் தராத பெண்கள்தான் காரணம் என்பதுதான் பெருமாளின் பதில். ஒட்டுமொத்த குற்றச்சாட்டையும் தூக்கிப் பெண்கள்மீதே வைக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

// எத்தியோப்பிய அகதிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கிறோமே... அந்த மாதிரி இருந்திருக்கிறாள் மிஸ். சந்தனா, மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். கறுப்பும் அழகுதான். நிறத்தைப் பற்றி மணி ரத்னத்துக்கு யாதொரு தவறான எண்ணமும் இல்லை. ஆனால் என்ன ஒரு வறட்சியான தோல்! கையெல்லாம் செம்பட்டை முடி வேறு... உதடுகளுக்கு நடுவே இரண்டு ஓரங்களிலும் வெடிப்பு. ‘36 - 26 - 36?’ - இது நான். ‘அட நீ வேற, வயித்தெறிச்சலைக் கிளப்பாதடா. 20 - 20 - 20. போ’ என்று எரிந்து விழுந்தான் மணி ரத்னம். ‘ஓ... ’ என்று இழுத்தேன். ‘எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் அவளுடைய தன்னம்பிக்கை...

தன்னை அவள் கண்ணாடியிலேயே பார்த்துக்கொண்டதில்லையா? எப்படியெல்லாம் பேசினாள் தெரியுமா?’ இதற்கிடையில் மணி ரத்னத்துக்கு மற்றொரு கவலை. பீச் நண்பர்கள் யாராவது பார்த்துவிட்டால் நம் மானம் கப்பலேறிவிடும் என்று. கேர்ள் ஃப்ரெண்ட் என்றும் சொல்ல முடியாது. மச்சினி என்றும் சொல்ல முடியாது. கூட வேலை பார்ப்பவள்? ம்ஹூம். சான்ஸே இல்லை. //

கூட வேலை பார்ப்பவள் என்றுகூட சொல்ல முடியாதாம். அழகிய இளம்பெண்களுடன் மட்டும்தான் வேலை பார்ப்பார்போல. இப்படியெல்லாம் சாருநிவேதிதாவால் வர்ணிக்கப்படும் பெண்ணுக்கு அவளுக்கு தேவையான காமம் கிடைத்திருக்குமா? அவளுக்கு ராஸலீலா எழுதத்தெரியாததால் அவள் தரப்பை முன்வைக்க முடியவில்லை. தன்னை பாதி பெண்ணாக உணர்வதாக சொல்லும் சாரு நிவேதிதா , நாவல் முழுக்க ஆண் என்ற ஒற்றைத்தரப்பின் குரலை மட்டும் ஒலிக்கிறார்.

பெண்ணை வெறும் உடலாக, பாலியல் பொருளாக மட்டுமே அணுகுதலும் நடக்கிறது.

// மான் வேட்டையும் பெண் வேட்டையும் ஒரு விதத்தில் ஒரே மாதிரியானதுதான். துள்ளிக்கொண்டு ஓடும் மான் ‘ஸர்ச் லைட்’டை அடித்ததும் அந்த ஒளியில் மிரண்டுபோய் நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்கும். ஒரே ஷாட். சுருண்டு விழுந்துவிடும். பெண்களுக்கான ‘ஸர்ச் லைட்’ என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு அடித்த லைட்டையே இன்னொரு பெண்ணுக்கும் அடித்தால் வேட்டை கிட்டாமலும் போகலாம். பெருமாள் இதில் கை தேர்ந்தவனாக இருந்ததால் ஓரிரு தினங்களில் காயத்ரியை வீழ்த்திவிட்டான். இதற்கென்று பெரிய திறமையெல்லாம் தேவையில்லை. இஷ்டத்திற்கு ஆஹா ஓஹோ என்று புளுகித்தள்ள வேண்டும். ஒரு சிறிதும் லஜ்ஜையே பார்க்கக் கூடாது. அதோடு, உருகோ உருகு என்று உருக வேண்டும். அவர்கள் உளறுவதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம், அவர்கள் மீது உங்களுக்கு செக்ஷுவல் இன்டென்ஷன் இருப்பதை - ஒரு சிறிதும் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடாது. அவ்வளவுதான் விஷயம்.//

இவ்வளவு விஷயம் தெரிந்தும் ஏன் பெருமாளை விட்டு எல்லாரும் ஓடிவிடுகிறார்கள்? எனக்கு செக்ஸே பத்தவில்லை என்று சுயகழிவிரக்கம் வேறு. புத்தகத்தில் பாதிக்குமேல் செக்ஸ் சாட் செய்கிறார். ஆனால் செக்ஷூவல் இன்டென்ஷன் இருப்பது தெரியவேகூடாது என்கிறார். ஏற்கனவே 480 முறை உறவுகொண்டபிறகும் ஐம்பது வயதில் பாலியல் உணர்வு இப்படித்தான் இருக்குமா என்பது பற்றிய தெளிவு எனக்கு இப்போதைக்கு இல்லை என்பதால் இந்த பித்துநிலையை புரிந்துகொள்வதில் எனக்கு சிக்கல்கள் உள்ளன. ஆனாலும் முழுக்க முழுக்க பெண்ணை ஒரு சதைப்பிண்டமாக மட்டும் கருதும் ஒரு போக்கை இந்த நாவலில் இயல்பாக காண முடிகிறது.

தாய்லாந்தின் மக்கள் தொகை, செக்ஸ் தொழிலாளர்களின் எண்ணிக்கை, தாய்லாந்து உணவான மீ கோரங் செய்யும் முறை, தாய் சொற்களின் பொருட்கள், அரபி எழுத்துக்களை எழுதுவது எப்படி, ஸ்வாஸிலாந்து அரசரின் மனைவிகளின் பெயர், கொலஸ்ட்ரால் வகைகள், பைபாஸ் சர்ஜரியைப் பற்றிய அத்தியாயம் போன்ற கடுப்பேற்றும் கட்டுரைகள் இடையிடையே வருவதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த நாவல் தரும் வாசிப்பின்பம் அலாதியானது. சுவாரசியமான எழுத்துநடையால் நன்றாக பொழுதுபோவதால் இந்த நாவல் எனக்கு பிடித்திருக்கிறது. இசை, சினிமா, புத்தகம் போன்றவற்றில் சாரு அறிமுகப்படுத்துபவர்கள் அவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் உதவக்கூடும். தபால்துறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தனக்கேயுரிய பகடியோடு ( சில வேளைகளில் வேதனையோடு) வெளிப்படுத்துகிறார் சாரு. ஆனால் ஆண்- பெண் உறவை மேம்போக்காக மட்டும் அணுகிச்செல்கிற இந்த நாவல் பொழுதுபோக்க மட்டும் பயன்படுவதால் உள்ளார்ந்த சிந்தனைகளை உருவாக்கத் தவறுகிறது. தவறான வழிநடத்தல்களை செய்கிறது என்றும்கூடச் சொல்லலாம்.

உணவுவகைகள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், சினிமாக்கள் என்று உலக அளவில் சாரு அறிமுகப்படுத்துபவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் உலகமே கொண்டாடவேண்டும் என்று சொல்கிற அளவுக்கு ராஸலீலாவில் ஏதாவது இருக்கிறதா என்பது உண்மையிலேயே சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இணையம் இல்லாத காலத்திலேயே தேடித் தேடி இத்தனைப் புத்தகங்கள் படித்து, இவ்வளவு சினிமாக்கள் பார்த்து சாரு அவற்றை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு பின்னால் இருக்கும் பலவருட உழைப்பை நாம் துச்சமாக நினைக்க முடியாது. அது நிச்சயம் மதிப்பிற்குரியது.