ஜூன் 29, 2017

காதலிப்பதும் கழட்டிவிடுவதும்

நமது சூழலில் ஒரு காதலை
ஒப்புக்கொள்ளுதல், நிராகரித்தல் ஆகிய முடிவுகளை பெரும்பாலும் பெண்களே எடுக்கிறார்கள். பெரும்பாலும் பெண்களைத் தேடி ஆண்கள் செல்வதாகவே நமது அமைப்பு இருக்கிறது. முற்போக்காக சிந்திக்கிற ஒரு ஆண் , ஒரு பெண்ணைக் காதலிக்கலாம் என முடிவுசெய்கிறபொழுது முதலில் அவள் சிந்தனைகள் தன்னோடு ஒத்துப்போகிறதா என்றுதான் பார்க்கிறான். ஆனால் உடல் கவர்ச்சி என்பதை முற்றிலுமாக இந்த வகைக் காதல் புறக்கணித்துவிடுவதாக சொல்லமுடியாது. ஒத்த சிந்தனையுள்ள இரண்டு பெண்களோடு ஒரே நேரத்தில் பழகும் ஒரு அறிவுள்ள ஆண் , அதில் அழகான பெண்ணைக் காதலிப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். மையநீரோட்ட மனநிலையில் கலந்துவிட்ட சராசரி ஆணுக்கு பெண்ணிய சிந்தனைகள் பற்றிய புரிதல் கிடையாதென்பதால் அவனது காதலியைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்பாடு அழகை மட்டும் பிரதானப்படுத்திதான் இருக்கும்.

இந்த இரண்டு வகை ஆண்களின் காதலிலும் உடல்கவர்ச்சி காதலுக்கான தவிர்க்கமுடியாத ஒரு காரணியாக இருக்கிறது. அழகற்ற பெண்ணியவாதியைவிட அழகுள்ள பெண்ணியவாதியை காதலிப்பவர்கள்தான் அதிகம். பெண்கள் ஆண்களைக் கழட்டிவிடுவதாக ஆண்கள் புலம்பும் இதே சூழலில்தான் காதலிக்கவே ஆள் இல்லாத, மையநீரோட்ட மனநிலையில் கலந்த, அழகற்ற பெண்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் காதலுக்காக ஏங்குகிறார்கள். ஆனால் மனித சுயநலத்தின், பேராசையின் அடிப்படையில் அழகான பெண்ணை அடைதல் என்பதை ஒரு ஆண் தனது முதல் தேர்வாக வைத்துக்கொள்கிறபொழுது அழகற்ற பெண்ணை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

எனவே ஓரளவுக்கு அழகான ஒரு பெண்ணைச் சுற்றி ஆண்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டே இருக்கிறது. குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருவராவது அவளிடம் காதலை சொல்கிறார்கள். எனவே அழகான ஒரு பெண்ணிற்கு தனக்கான ஆணைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தனக்கிருக்கும் பல்வேறு வாய்ப்புகளில் மிகச்சிறந்த ஒன்றை அவள் தேர்ந்தெடுக்கிறாள். எப்படி அழகற்ற பெண்ணை ஒரு ஆண் புறக்கணித்து தனக்கு சிறப்பானது, அழகானது வேண்டுமென்று முடிவுசெய்தானோ அதேபோல்தான் ஒரு பெண்ணும் முடிவு செய்கிறாள்.

இந்தத் தோல்விக்குப் பிறகும் ஒரு ஆண் மறுபடியும் அழகான இன்னொரு பெண்ணை நோக்கித்தான் செல்கிறான். ஒருபோதும் யாருக்காகவும் கீழிறங்கி வருவதில்லை. இப்படியான ஒரு சூழலில் சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிர்பாலினத்தின் காதல் கிடைக்காமல்தான் போகும். அதற்கு யாரும் ஒன்றும் செய்யமுடியாது. சிறந்ததையே அடைய வேண்டுமென்கிற மனித மனதின் இயல்பான தன்மையை இதற்காக குற்றஞ்சாட்டவும் முடியாது. இளமையின் இறுதி நிலையில் 'கிடைப்பதே போதும்' என்ற மனநிலைக்கும் இது செல்லும்தான். ஆனால் அதுவரை முயற்சி செய்தலைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லையென்றே தோன்றுகிறது.

ஒரு பெண் காதலிக்க ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்து விட்டாள் என்பதாலேயே மற்ற ஆண்களுக்கான வாய்ப்புகள் முடிந்துவிடுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் அந்தப் பெண் தன்னைவிட்டு விலகிவிடாமல் இருக்க எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. காதல் ஏற்கப்படுவதைவிட அதை அப்படியே சிதறாமல் கொண்டுபோவதுதான் இருப்பதிலேயே கடினமான காரியம். காரணம் ஒரு பெண், ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்த பிறகும்கூட பெரும் ஆண்கள் கூட்டம் அந்தப் பெண்ணை மொய்த்துக்கொண்டுதான் இருக்கும். மனித மனம் என்பது மிக எளிதில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவிவிடக் கூடியது. தினந்தோறும் பல வகையான ஆண்களோடு உரையாடும் ஒரு பெண்ணின் மனம் காலப்போக்கில் இன்னொருவரை நோக்கி செல்லத்தான் செய்யும்.

பெண்கள் பெரும்பாலும் ஆண்களைக் கழட்டிவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தேவையற்றது. அது அப்படித்தான் நிகழ முடியும் . காரணம் எந்தவொரு உறவுமுறையும் ஒரு கட்டத்தில் சலித்துவிடக்கூடியதே. ஒரு ஆணைப் பெண்ணுக்கு சலித்துப்போய்விடுகிறபொழுது அவள் தன்னிடமிருக்கும் மற்ற ஆண்களில் ஒரு தேடலை நிகழ்த்துகிறாள். அதில் வித்தியாசமாகத் தெரியும் ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால் இதே சலிப்பு ஒரு ஆணுக்கும் உண்டென்றாலும் அவன் ஒரு பெண்ணை விட்டு விலக யோசிக்கிறான். ஏனென்றால் அவன் வேறொரு பெண்ணால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த உறவு கிடைத்ததே அவனுக்கு பெரிய விஷயம். மறுபடியும் ஒரு பெண்ணை அணுகிக் காதலிப்பதும், அதை அவள் ஒப்புக்கொள்வதும் நிகழுமா என அவனுக்குத் தெரியாது.

பெரும்பாலும் பெண்ணைத் தேடி ஆண் செல்லும் சமூக அமைப்புக்கு மாறாக ஆணைத் தேடி பெண் செல்வதாக சூழல் இருக்குமேயானால், ஒரு ஆணுக்கு தேர்ந்தெடுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்குமேயானால் நிச்சயமாக ஆண்கள் பெருவாரியாக பெண்களை கழட்டி விட்டிருப்பார்கள். பிளே பாய்களாக இருக்கும் அழகான ஆண்கள் நிச்சயம் பெண்களை கழட்டித்தான் விடுகிறார்கள். எனவே இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை. ஆண், பெண் பாலின வேறுபாடுகளின்றி மனித மனதின் இயல்பென இதை ஏற்றுக்கொள்வதே நாம் செய்யவேண்டியது.

ஒரு ஆண்- பெண் உறவு காதலென்று துவக்கத்திலேயே இருவரும் ஒப்புக்கொண்டாலும் அது பின்னாளில்தான் உறுதிபடுத்தப்படுகிறது. தொலைபேசியில் பலமணிநேரம் பேசுவதாலோ, பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றுவதாலோ மட்டும் ஒரு உறவு காதலாகி விடாது. காதலிக்கிற இரண்டு பேரும் ஒரே அறையில் குறைந்தபட்சம் ஒரு வாரம் தங்கி இரண்டு பேரின் அன்றாட வாழ்வையும் நெருங்கி அறிய வேண்டும். தொலைபேசியில் பேசும்போதோ, வெளியில் சில மணிநேரம் சுற்றும்பொழுதோ கட்டமைக்கிற பிம்பம் உடைந்து ஒருவரின் உண்மைத் தன்மையை நெருங்கி அறியும் வாய்ப்பு அவரின் அன்றாடத்தோடு கலக்கும்பொழுதே கிடைக்கிறது. அதற்குப் பிறகும் ஒருவரை சகித்துக்கொள்ள முடிந்தாலே அது காதலாகிறது. ஐ லவ் யூ சொல்லிவிட்டதாலே ஒன்று காதலாகிவிடுவதில்லை என்பதால் நெருங்கி அறிதலுக்குப் பிறகு பெரும்பாலும் காதல் இல்லாமலாகி விடுவதற்கான சாத்தியக்கூறுகளை முதலிலேயே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு காதலின் காலக்கெடு இன்னதென்று எவராலும் சொல்லிவிட முடியாது. ஏதேனும் ஒரு கணத்தில் அது இல்லாமலாகி விடக்கூடும். ஏதேனும் ஒரு நொடியில் சலித்துவிடக்கூடும். அதைப் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. காதல் தோல்வியை நம் சுயத்துக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அப்படிக் கருதும் நொடியில் காதல் முழுமையாக அழிந்து தனிமனித அகங்காரமும், சுயநலமும் மேலெழுந்து பழிவாங்குதலாக மாறிவிடுகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு மனநல ஆலோசனைகள் அளிக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

பெண்கள் பரவலாக வேலைக்கு வரத்துவங்கியிருக்கிற, வெளி உலகத்துக்கு வரத்துவங்கியிருக்கிற இந்த காலகட்டத்தில் ஆண்-பெண் உறவுநிலை வேறொரு கட்டத்தை அடையத்தான் செய்யும். காதலும், காதல் தோல்விகளும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு உருவாகி அவை மனஅழுத்தத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். சிம்புவும், ஜி.வி பிரகாஷும், ஆதிக் ரவிச்சந்திரன்களும் உருவாகி வரத்தான் செய்வார்கள். ஆசிட் வீச்சும், கொலைகளும் நடக்கத்தான் செய்யும். நகரமயமாதல், தனித்து வாழ்தல்,  இணைய வளர்ச்சி ஆகியவைகளுக்கு பிறகு வருகிற இந்த மாற்றங்களுக்கு இந்திய ஆண் மனம் தன்னை முழுமையாக இன்னும் தகவமைத்துக்கொள்ளவில்லை.  அதற்கு இன்னும் நாட்களாகும். அதுவரை மனிதர்களையும், வாழ்வையும் புரிந்துகொள்ளுதல் தொடர்பாக தொடர்ந்து பேசுவதைத் தவிர வேறுவழியில்லை.