ஜூலை 27, 2017

மிகையுணர்வும் வாழ்வும்

ஒரு பள்ளியில் தேசியகீதம் இசைத்துக்கொண்டிருக்கிறது. சாலையில் சென்றுகொண்டிருக்கும் ஒருவர் தேசியகீதத்தைக் கேட்டு அதற்கு மரியாதை செய்யும் பொருட்டு நடுச்சாலையில் நின்று சல்யூட் அடித்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் இருக்கும் வண்டியோட்டி பயங்கரமாகக் கத்துகிறார். வண்டியிலிருந்து இறங்கிவந்து நிற்பவரை அறைகிறார்.ஆனாலும் தேசிய கீதம் முடியும்வரை நின்றுகொண்டிருப்பவர் நகரவில்லை. இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் கதாநாயகன் அவரது தேசப்பற்றை எண்ணி வியக்கிறார். சமீபத்தில் ஏதோ ஒரு பழைய திரைப்படத்தைப் பார்க்கும்பொழுது இந்தக் காட்சியைப் பார்க்க நேர்ந்தது. இந்தக் காட்சியைப் பார்க்கிற பெரும்பாலானவர்களும் கதாநாயகனைப் போலவே மயிர்கூச்செரிந்து நாமும் இந்த அளவுக்கு  பற்று கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணத்தை அடைவார்கள் என்பது உறுதி.

மனிதர்களுக்குள் மிகை உணர்வை உற்பத்திசெய்ய போக்குவரத்து சீர்கெட்டாலும் கவலைப்படாமல் நடுச்சாலையில் நின்று சல்யூட் அடிக்கிற மிகைநாடகத் தருணங்களை, பொய்யான வரலாறுகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. மிகைநாடகத் தருணங்கள் மூலம் மெய்யுணர்வுகள் யதார்த்தத்திலிருந்து விலகி மிகை உணர்வுகளாக மாறுகின்றன. அதே வேளையில் அவ்வாறானதொரு மிகையுணர்வுதான் மக்கள் திரள் கொண்டிருக்கவேண்டிய இயல்பான உணர்வு என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டு அல்லது கற்பிக்கப்பட்டு அவை புனிதப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் அரசியலும், கலையும் ஒட்டுமொத்த வாழ்வின் ஒவ்வொரு கூறும் மிகையுணர்வுகளால், போலித்தனத்தால் நிரப்பப்படுகின்றன.

நாடு என்கிற நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்ட நிலப்பரப்பு சார்ந்து மிகைநாடகத் தருணங்களையும் அந்நிலப்பரப்பு சார்ந்த மக்கள் வெற்றுப் பெருமிதம் கொள்ளும் பொருட்டு வரலாற்று நிகழ்வுகளையும் உண்டாக்கிப் பரப்பும் பொழுது பற்று என்கிற உணர்வு உருவாகி வருகிறது. இப்பொழுது ஒரு பொது எதிரியின் சித்திரம் வரையப்பட்டு அவனே அத்தனைக்கும் காரணம், நம் ஆண்டாண்டுகாலப் பெருமைகளுக்கு பங்கம் விளைவிப்பவன் அவனே, நம் வளர்ச்சியைத் தடுப்பவன் அவனே என்ற பரப்புரை ஆரம்பிக்கும்பொழுது பற்று ஆக இருந்தது வெறியாக மாறுகிறது.இதுவே இயல்பான தன்மையென காலப்போக்கில் ஆகிவிடுதல் பொருட்டு தன் நிலப்பரப்பு சார் வெறி அல்லது மொழிசார் வெறி புனிதத்தன்மையடைந்து அதன்மேலான கேள்விகள் தடைசெய்யப்படுகின்றன.

என் நாடு கிரிக்கெட்டில் நிச்சயம் வெல்லவேண்டுமென்கிற கட்டாயத்தை இந்தப் புனிதத்தன்மை ஏற்படுத்துகிறது. சுய பெருமையும், பிறரை சகிக்க முடியாத்தன்மையும் மிகைஉணர்வுகளால் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு எந்தவித வேறுபாடுகளுமின்றி,  எதிரிகளென்று ஆக்கப்பட்டோரை ஒட்டுமொத்தமாக வீழ்த்துவதே ஒரே நோக்கமாகிறது. இது நாடென்று இல்லாது மொழிசார் இனக்குழுவாக மாறும்பொழுது ஜல்லிக்கட்டை நடத்தியே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு கொண்டுசெல்கிறது. என் நாடு கிரிக்கெட்டில் ஜெயித்தால் என்ன, ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கினால் என்ன? அதனால் என் வாழ்வில் ஏதாவது மாற்றமுண்டா என கேள்வி கேட்க விடாமல் ஏற்றிவைக்கப்பட்ட புனிதத்தன்மை தடுக்கிறது. அந்தப் புனிதத்தன்மை ஒருவனை அந்த இனக்குழுவே தான்தான் என உணரச்செய்கிறது. அதே வேளையில் நீட் போன்றதொரு தேர்வை இனக்குழு பிரச்சனையாக அணுகாமல் மருத்துவர்கள் என்கிற தனிக்குழுவின் பிரச்சனையாக அணுகுதலும் மருத்துவர்களைப் பற்றி காலங்காலமாக சமூகம் உண்டாக்கி எடுத்திருக்கிற மிகைபிம்ப கருத்தியலின் வெளிப்பாடென்பதை பார்க்க வேண்டியிருக்கிறது.

விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்படறாங்க தெரியுமா? அம்மாவும் அப்பாவும் கஷ்டப்படறது யாருக்காக , உங்களுக்குக்காகத்தான? எல்லையில் இராணுவ வீரர்கள் யாருக்காக பாடுபட்றாங்க, மூத்த அண்ணன் நீதான தங்கச்சிகளக் கரையேத்தணும்,  அப்துல் கலாம் எவ்ளோ பெரிய லீடர் தெரியுமா என மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் மிகையுணர்வுகள் இடம்பிடித்துவிடுகின்றன. இவ்வாறான கருத்தியல்களை உருவாக்குவதற்காக நாடகீய தருணங்களும், புனைவுகளும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த மிகையுணர்வுக்கு இரையானவைகள் பட்டியலில் காதலையும் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளலாம். இன்று காதல் சார்ந்து கொண்டாடப்படும் எந்தவொரு பதிவிலும் மிகையுணர்வு நிரம்பி வழிவதைக் காணலாம். உன் கால் தடம் பட்ட மண்ணை சேமித்து வைப்பேன், உன் கண்ணாடி வளையல் உடைந்தால் பொறுக்கி எடுத்து உனக்குக் காட்டுவேன் என்று எழுதப்படும் வரிகளே இதற்கு சான்று. தமிழ் திரைப்படப் பாடலாசிரியர்கள் காலம் காலமாக இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். 'இமைக்கும்போது உன் முகம் தெரியவில்லை வாடினேன். இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்' என்பது எவ்வளவு மிகையுணர்ச்சியாக இருந்தாலும் காதலை சுவாரசியமாகக் கொண்டுசெல்ல இது தேவை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. இல்லையேல் ஆறுமாதத்தில் வரவேண்டிய சலிப்பு ஆறு நாளில் வந்துவிடவும் வாய்ப்புகள் உண்டு.

யதார்த்தங்களை எதிர்கொள்வதில் மனிதர்களுக்கு இருக்கும் பயமே மிகையுணர்வைக் கொண்டாடும் நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது. யதார்த்தங்களை எதிர்கொள்வது இப்பொழுது இருக்கும் வாழ்வை இன்னும் கொஞ்சம் சிக்கலாக்குகிறது. அவரவர் வாழ்வை அவரவர் அமைத்துக்கொள்ள வேண்டும், மூத்த பையன் தியாகியல்ல என்ற யதார்த்தவாதக் கருத்தியல் பெண்ணைத் தனித்து செயல்படும் நிலை நோக்கி நகர்த்தும்பொழுது நமது குடும்ப அமைப்பு அதிர்ச்சியடைகிறது.யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இதுவரை உண்டாக்கி வைத்திருக்கிற புனிதத்தன்மைகள் அழிகின்றன. அரசின்மைவாதம், ஒரே உலகு, சமத்துவம் போன்ற லட்சியவாதங்களை நோக்கிப் பயணிப்பதை , குறிப்பிட்ட நிலப்பரப்பின், இனக்குழுவின் மீதான வெறி என்ற மிகையுணர்வின் மூலம் உருவாக்கப்பட்ட தற்பெருமையும், சகிப்பின்மையும் அழிக்கின்றன. பொது எதிரி என்ற சிருஷ்டிப்பின் மூலம் சக மனித வெறுப்பின் மீதுதான் இங்கே எல்லா அரசியல் சித்தாந்தங்களும் பயணித்துக்கொண்டிருக்கிறது. குறைந்த அளவிலான மனிதர்களின் மகிழ்ச்சிக்காக அதிகம் பேர் உழைப்பதாக இங்கே அரசியல் இருக்கிறது. அதனால் மக்களுக்கான அரசியல் என்று ஒன்றையும் இங்கே சுட்ட முடிவதில்லை என்கிற மிகைப்படுத்தப்படாத உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆக அப்படிப்பட்ட ஒன்றை உடைத்து யதார்த்தவாதம் மீளுதல் என்பதே நிகழ வாய்ப்புகள் குறைவானதொரு லட்சியவாதம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி மீண்டால் இன்னொரு இனக்குழுவை அழிப்பதிலிருந்து மனிதன் தன்னை விடுவித்துக்கொள்வான் என்றாலும் இன்னொரு இனக்குழுவை முழுமையாக நேசிப்பென்பது சாத்தியமில்லை என்பது உண்மைதான். ஏனென்றால் சுயநலத்தை, சுய பாதுகாப்பை மிகையுணர்வாகக் கொள்ள முடியவில்லை. அந்த வகையில் பிரிவினைகளற்ற உலகென்பது எப்போதும் நிகழாத கனவுதான்.