ஆகஸ்ட் 09, 2017

லட்சுமி சரவணகுமாரின் கானகன்

காட்டில் தன் கண்ணில் படுகிறவற்றையெல்லாம் வேட்டையாடத் துடிப்பவன் தங்கப்பன். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வேட்டையாட வேண்டும் இல்லையேல் காட்டு தெய்வம் பழிவாங்கிவிடும் என்கிற கொள்கையுடையது பளியக்குடி என்கிற பழங்குடி. அந்தக் குடியில் பிறந்த செல்லாயி எனும் பளிச்சி தனது குழுவின் கொள்கைகளை மதிக்காமல் வேட்டையாடுவதில் இன்பம் காண்பவளாய் இருக்கிறாள். தங்கப்பனின் வேட்டையாடும் திறனைப் பார்த்து வியக்கும் செல்லாயி அவனைத் தனது இரண்டாவது கணவனாக ஏற்றுக்கொள்ள,  அவளைத் தனது மூன்றாவது மனைவியாக ஏற்றுக்கொண்டு தன் வாழ்விடத்துக்குக் கூட்டிச்செல்கிறான் தங்கப்பன். செல்லாயிக்கு அவளது முதல் கணவனான சடையன் எனும் பளியன் மூலம் பிறக்கும் குழந்தையான வாசியை தங்கப்பனே வளர்த்துகிறான். அவனைத் தன்னைப்போலவே சிறந்த வேட்டைக்காரனாக்க வேண்டுமென்று விரும்புகிறான். ஆனால் வாசி வளர வளர தங்கப்பனிலிருந்து விலகி பளியக்குடியின் கொள்கையோடு ஒத்துப்போகிறவன் ஆகிறான். தங்கப்பன், வாசி என்கிற இந்த இரண்டு மாறுபட்ட குணநலன்களின் மோதலில் கடைசியாக வென்றது யார் என்பதே கானகனின் முதன்மையான கதை. இதனூடாக காட்டிலுள்ள மரங்களை அழித்து கஞ்சா தோட்டம் அமைக்கும் முதலாளிகள், பளியக்குடிவாசிகளை விரட்டிவிட்டு அவர்கள் வாழ்விடத்திலும் கஞ்சா தோட்டம் அமைக்க முதலாளிகள் எடுக்கும் முயற்சிகள், அதற்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள், அதைத் தடுக்கும் கம்யூனிஸ்டுகள் போன்றவையும் சொல்லப்படுகின்றன.

விலங்குகளின் வாழ்விடத்தில் நுழைந்து ,அவற்றை அவற்றிடமிருந்து பறித்து, அவற்றின் வாழ்வாதாரங்களை முடக்கி , அவற்றை வேட்டையாடி மனிதர்கள் செய்யும் சூழியல் அழிவு கடைசியில் மனிதனின் அழிவுக்கே வித்திடும் என்கிற கருத்தியலை கானகன் மூலம் சொன்னதற்காக லட்சுமி சரவணகுமாரை நிச்சயம் பாராட்டலாம்.

ஆனால் இந்த நாவலை சுவாரசியமற்றதாக மாற்றுவது இதன் கதை சொல்லும் உத்தியும், மொழியும்தான். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு குறைந்தபட்சம் ஒரு கதையாவது இருக்கும். ஆனால் எல்லோரும் எழுத்தாளர்கள்ஆகிவிடுவதில்லை. லா.ச.ரா சொன்னதுபோல் நீ உன் எழுத்தின் முழு வல்லமையையும் பயன்படுத்தி ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால் அதில் பொசுங்குகிற நெடி வரவேண்டும். அப்படி ஒரு உணர்வை யாரால் வாசகனுக்குத் தரமுடியுமோ அவர்தான் எழுத்தாளர் ஆகமுடியும்.

கானகனைப் பொறுத்தவரை ஒரு நாவலைப் படிக்கிற உணர்வைத்தர அது தவறியிருக்கிறது. புனைவின் அழகியல் என்பது இல்லாமல் தகவல்களைத் தெரிந்துகொள்ள ஒரு கட்டுரையைப் படிக்கும்போது என்ன உணர்வு வருமோ அதைத்தான் தருகிறது.

மலைகள் இணைய இதழில் வெளிவந்திருக்கிற லட்சுமி சரவணகுமாரின் ரகசியத்தின் அரூப நிழல்களிலும் இதே சிக்கல்தான் இருக்கிறது. BDSM, incest குறித்த விவாதங்களுக்கு அந்தக் கதை நம்மை எடுத்துச்செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கதை சொல்லும் விதத்தால், அவரின் வார்த்தைப் பிரயோகங்களால் லட்சுமி சரவணகுமாரால் ஒரு உணர்வையும் கடத்தமுடியவில்லை (ஒருத்தி தன்னைச் சுருட்டி சின்னஞ்சிறிய கருப்பைக்குள் வைத்துக்கொள்ளமாட்டாளா என்கிற ஓரிடம் தவிர்த்து). தனது கருத்தியலை, சிந்தனையைப் புனைவாக மாற்றுமிடத்தில் லட்சுமி சரவணகுமார் தோல்வியடைகிறார். தட்டையான மொழியின் மூலம் புனைவை கட்டுரை படிப்பதுபோல் ஆக்கிவிடுகிறார்.

கானகனின் பாலியல் சித்தரிப்புகள் பெரும்பாலான வேளைகளில் தேவையின்றி வலிந்து திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன.  வேட்டையாடிவிட்டு செல்லும் தங்கப்பன் சுப்புவின் மனைவியுடன் உறவு கொள்வது, வாசி ஜமீனின் மனைவியுடன் உறவு கொள்வது, சகாயராணிக்கும் அன்சாரிக்குமான தொடர்பு போன்றவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இதைத் தவிர்த்து கானகனின் மற்றொரு குறை அதன் சினிமாத்தனம். கஞ்சா தோட்டத்துக்கு செல்லும் யானைகளை திசைதிருப்ப தங்கப்பனும் வாசியும் செல்லும்போது நடக்கும் நிகழ்வுகள், வாசிக்கு சாமி வந்தபிறகு குயிலம்மாளுடன் கொள்ளும் உறவு, புலி அடித்தும் சாகாமல் தங்கப்பன் தப்பித்தல், கதையின் முடிவு ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

சூழியல் அழிவு, கலவியில் ஆணை அடிமையாக்கி சுகிப்பதாக மாறும் பெண் மனம் குறித்த கருத்துகள் எவர்க்கும் இருக்கக்கூடும். ஆனால் ஒரு கட்டுரையாளர் இதை சொல்வதற்கும், புனைகதையாளர்கள் சொல்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. லட்சுமி சரவணகுமார் அவர்கள் தனது மொழியையும், சொல்லல் உத்திகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தி மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.