டிசம்பர் 13, 2017

காதலை மறுத்தல்

திருமணமான என் தோழி ஒருத்தி ஒருகாலத்தில் என்னைக் காதலித்ததாகச் சொன்னாள். நான் எப்போதாவது அந்தக் காதலை உணர்ந்திருக்கிறேனா என்று கேட்டாள். இந்தக் கேள்வியில் நான் முழுமையாக நிலைகுலைந்துபோனேன். அந்தத் தருணத்தை என்னால் எதிர்கொள்ளமுடியவில்லை. நான் அந்த உணர்வை அவளுடனான உறவில் ஒருபோதும் உணர்ந்ததில்லை. ஒருவரின் மனம் புண்படாமல் அவர்களுடைய காதலை மறுக்கவேண்டியிருக்கிறது. அதற்காக நான் கடுமையாக முயற்சித்தேன். இந்தப் பெண் என்னிடம் சொன்ன இந்தக் காதலை பல பெண்களிடம் பல சந்தர்ப்பங்களில் நான் சொல்லியிருக்கிறேன். பெரும்பாலான பெண்கள் அந்தத் தருணத்தை மிகச்சிறப்பாகக் கையாண்டார்கள். எனது மனம் புண்பட்டுவிடக்கூடாது என்று முடிந்தவரை முயன்றார்கள். அதையே நான் திரும்ப என் தோழியிடம் செய்ய முயன்றேன். எந்தவித உணர்வுமின்றி ஒருவகையான செயற்கைத்தனமான வசனங்களோடு பலவாறாக சமாளித்து அதை மறுக்கவேண்டியிருந்தது.அப்பொழுது என் காதலை மறுத்த பெண்களின் மனநிலையை எண்ணிப்பார்த்தேன். என்னைப்போலவே எவ்வளவு செயற்கையாக அவர்கள் என்னிடம் அதை செய்திருக்கக்கூடும்?

ஒரு காதலை மறுக்கும்போது பயமும், பதட்டமும் வந்து ஒட்டிக்கொள்கிறது. நம்மை அவர்கள் எப்படிப் புரிந்துகொள்ளப்போகிறார்கள், இந்த மறுப்பிற்கு பிறகு என்ன ஆகும். விக்ரமாதித்தனை விடாத வேதாளமாக இவர்கள் நம்மைப் பற்றிக்கொள்வார்களா? மனம் தள்ளாடுகிறது. ஒரு போலியான நடிப்பை தயவுதாட்சண்யமின்றித் தரவேண்டியிருக்கிறது.

என் பிறந்தநாட்களை மறக்காமல் நினைவு வைத்து வருடந்தோறும் வாழ்த்துகளால் அரவணைத்துக்கொள்கிற தோழி அவள். நிச்சயமாக அவளை எனக்குப் பிடிக்கும். ஆனாலும் அவளைக் காதலிக்க முடியவில்லை. ஒருவரைப் பிடித்தலல்ல, நிரம்பப் பிடித்தல்தான் காதலென்று தோன்றுகிறது. அவளுக்கு திருமணமாகிவிட்டதால்தான் பிடிக்கவில்லை என்று மொண்ணையான காரணமொன்றைச் சொல்லலாம். ஒருவேளை அவளுக்கு திருமணம் ஆகாமலிருந்திருந்தால்?? அப்பொழுதும் மறுத்திருப்பேன். காரணம் என் சுயநலம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. நான் இவளைவிட அழகான ஒருத்தியை எதிர்பார்க்கிறேன், நான் காதலிக்கிற அழகான பெண் என்னைவிட அழகான ஒருவனை எதிர்பார்க்கிறாள். முடிவிலா அன்புத்தேடலாய், ஒருவகைச் சிக்கலாய் இது தொடர்கிறது. நாம் மிக நெருங்கிய உறவுப் பிணைப்புகளை வெறுக்கிறோம் அல்லது சக மனிதனை அளவுக்கதிகமாய் சந்தேகிக்கிறோம். ஒரு விடுபடல், தப்பித்தல் எப்போதும் தேவைப்படுகிறது. அதே வேளையில் அதற்கு நேர்மாறாக கொடுத்து வாங்கிக்கொள்ளும் பயன்படுத்திக்கொள்ளலும் தேவைப்படுகிறது. எனவே ஒருவரை நிரம்பப் பிடித்தாலும் திருமணங்களை தவிர்க்கிறோம், Living togetherஐ ஆதரிக்கிறோம்.

காதலை மறுப்பதற்கான பயிற்சி என்பது ஒப்பீட்டளவில் ஆணுக்குக் குறைவுதான். இந்தப் பயிற்சியின்மைதான் ஒரு காதலை மறுக்கும் பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்வதிலிருந்து ஆணைத் தடுக்கிறது. காதலை மறுப்பதென்பது ஒருவகையான மனச்சித்ரவதையைத் தருவது என்பதை மறுப்பதற்கில்லை. அதைத் திறம்படச் செய்வது ஒரு கலை.