டிசம்பர் 19, 2017

குடும்பத்தை சிதைத்தல்

பெரும்பாலும் பெண்களை ஆராதிக்கிற, கவி பாடுகிற ஒரு சூழலில், பெண்ணைத் தேடி ஆண் செல்லும் ஒரு அமைப்பில், ஆணைத் தேடி பெண் செல்வது ஒப்பீட்டளவில் வெகு குறைவாக இருக்கும் சூழலில், சுமாரான அழகுடைய பெண்ணின் பின்னால்கூட பல ஆண்கள் வாய்ப்புக்காக அணிவகுத்து நிற்கிறார்கள். எனவே பெண் தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ளவளாகவும், ஆண் யாசிப்பவனாகவும் மாறிப் போகிறார்கள். தன்னிடமிருக்கும் வாய்ப்புகளில் சிறந்த ஒன்றை பெண் தேர்ந்தெடுக்கிறாள். இந்தத் தேர்ந்தெடுப்பிற்கு பிறகு,  உச்சகட்ட காதலில் இருவரும் திளைத்தபிறகு, சில மாதங்களில் யாராவது ஒருவருக்கு சலித்துவிடுகிறது. அப்படி சலித்துப்போன ஒருவர் ஏதாவது ஒரு மொண்ணையான காரணத்தைச் சொல்லி உறவிலிருந்து விலகுகிறார். ஆணுக்கு ஒப்பீட்டளவில் வாய்ப்புகள் குறைவென்பதால் ஒன்றிரண்டு காதலுக்குப் பிறகு காதலின் மீது நம்பிக்கை இழக்க ஆரம்பிக்கிறான். ஒரு நான்கைந்து காதலுக்குப் பிறகு பெண்ணும் காதலின் மீதிருக்கும் நம்பிக்கையை இழக்கிறாள். எனவே நீண்டகால அடிப்படையில் ஒரு உறவை எடுத்துச்செல்ல முடியாதென்கிற உண்மையை இருவரும் உணர்கிறார்கள்.
இந்நிலையில் ஆண்- பெண் இருபாலருமே காதலை மையமாக வைத்து உருவாக்கப்படும் திருமணம் என்ற நீண்டகாலம் நீடிப்பதாக சொல்லப்படும் நடைமுறையின் மீதே நம்பிக்கை இழக்கிறார்கள். அதன்படி குடும்பம் என்ற அமைப்பின் மீதிருக்கும் நம்பிக்கையையும் இழக்கிறார்கள். இதற்குப் பிறகு சுய பாதுகாப்போடு, எளிதில் தப்பித்துக்கொள்ள முடிகிற, எளிதில் விடுபட முடிகிற உறவுகளில் நீடித்துக்கொண்டு தனித்த மனிதனாக உணர்ந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை வாழலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதுதான் சிறப்பானதென்று கருதுகிறார்கள்.

ஆனால் தொடர்ந்து குறுகிய கால இடைவெளிகளில் வேறு வேறு உறவுமுறைகளில் சென்று விழுவதன் வாயிலாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் மனம் நொந்து எனக்கு யாருடைய உறவும் வேண்டாம், தனிமை போதும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். தனிமையில் சில காலம் வாழ்ந்தபின்பு அதுவும் சலித்துப்போக மீண்டும் இன்னொரு புதிய உறவை ஆரம்பிக்கிறார்கள். அதிலும் சிக்கல் கண்டு மனம் வெதும்புகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இந்த வாழ்நாள் முழுவதற்குமான உறவுத்தாவல் ஏற்படுத்தும் உளச்சிக்கலைவிடவும் குறைவான பிரச்சனைதான் குடும்ப அமைப்பில் உள்ளது. குடும்ப அமைப்பில் சில சமரசங்களை செய்வதன் வாயிலாக அந்த உறவை நீண்டகாலம் எடுத்துச்செல்ல முடியும். இன்றிருக்கும் சூழலில் தங்களுடைய காதலி இதுவரை யாரையும் காதலிக்காத, யாரோடும் உடல்சார்ந்து உறவுகொள்ளாத பெண்ணாக இருக்கவேண்டும் என்று ஒரு ஆண் நினைப்பதில்லை. அது குறித்த வருத்தங்களும், கவலைகளும் ஆண்களுக்கு உள்ளூர உண்டென்றாலும் இந்த காலகட்டத்தின் யதார்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். உலகமய, தாராளமயமாதலுக்குப் பிறகு காதலின் புனித பிம்பம் ஏறக்குறைய அதன் இறுதி மூச்சில் இருக்கிறது. மாறிவரும் பொருளாதாரச் சூழல்களினால் இன்னமும் வெகு காலத்திற்கு பெண்களை ஒழுக்கத்தின் பெயர் சொல்லி வீட்டில் பூட்டிவைக்க முடியாதென்பதை இந்தத் தலைமுறை உணர்ந்து வருகிறது. எனவே முந்தைய காதல்களைப் பற்றி இருபாலருக்கும் கவலையில்லையென்றாலும் தங்களை ஒருவர் காதலிக்கும்போது தங்களை மட்டுமே காதலிப்பவராக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். தன் காதலன்/காதலி முழுக்க முழுக்க தன்னுடைமை (possessiveness) என்ற மனப்பான்மை இருபாலருக்குமே இருக்கிறது. அது உடைந்துபோகும்போது காதல் முடிந்துவிடுகிறது. காதல் போன்ற குறுகிய கால உறவுக்கு இந்த மனப்பான்மை ஒத்துவரலாம். ஆனால் திருமணமென்கிற நீண்டகால உறவில் நுழையும்பொழுது இந்த மனப்பான்மையில் சிறிது சமரசம் செய்யவேண்டியிருக்கிறது. திருமணத்தில் நுழைந்தபிறகு சில ஆண்டுகளில் சலித்துப்போகும்போது கணவன், மனைவி இருவருமே அந்த சலிப்பை புரிந்துகொண்டு எதிர் தரப்பினருக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க வேண்டியிருக்கிறது.  காதல் என்பது எப்போதும் சீரான கதியில் நடந்துகொண்டிருக்கும் ஒன்றல்ல. குறிப்பிட்ட கால இடைவெளியில் அது திரும்பவும் உருவாகத்தான் செய்யும். காதலித்தவரையே கொஞ்சநாள் பிரிவிற்குப் பிறகு திரும்ப காதலிப்பதுபோல. திருமணம் என்பது பலபேரைக் காதலித்து உடல்சார்ந்த விஷயங்களை ஓரளவுக்காவது கடந்தபின்பு நமக்குப் பிடித்த உள்ளத்தைத் தேர்ந்தெடுப்பதுதான். எனவே திருமணத்துக்கு முன்பும், பின்பும் எப்போதும் உடல்சார்ந்தவைகளை முடிந்தளவு ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாதிருப்பதே சிறப்பானது. நீண்டகாலத்திற்கு நம்மைத் தாங்கிக்கொள்ளும் உள்ளம் எதென்பதே திருமணம் செய்யப்போகிறவரை முடிவு செய்வதற்கான மையப்புள்ளி. ஆனாலும் சட்ட திட்டங்கள் கொண்ட திருமணம் என்னும் நடைமுறையில் புழக்கத்திலுள்ள உடல் சார்ந்த சம்பிரதாயங்களை முடிந்தவரையில் கடைபிடிப்பதிலும் தவறில்லை. உலகிலிருக்கும் எல்லாரோடும் ஒருவர் பழகிவிட முடியாது, விருப்பப்பட்ட அத்தனை உடலையும் ஒருவர் புணரவும் முடியாது. மனித வரலாற்றின் துவக்கத்தில் பெண் தன் குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களோடும் உறவு கொள்கிற நடைமுறை இருந்ததென்றாலும் அங்கே possessiveness இருந்ததா, இல்லையா என்பதை இந்த காலத்தில் உட்கார்ந்துகொண்டு ஒருவர் சொல்ல முடியாது. அது அந்தக் காலத்தோடு ,அப்போதிருந்த சூழலோடு சம்பந்தப்பட்டது. இன்றிருக்கும் சூழலில் அதைப் பொருத்திப் பார்க்க முடியாது. இருபாலருக்குமே possessiveness இருக்கும் காலகட்டத்தில்,
காலத்தைப் பின்நகர்த்தி பழங்குடி வாழ்வியலில் வைத்து உரையாடுவதை நான் நிராகரிக்கிறேன். சமகால வாழ்வின் அடிப்படையில்தான் இது குறித்து பேச முடியும். எனவே முடிந்தவரை கட்டுப்பாட்டோடும், முடியாதபட்சத்தில் கொஞ்சம் மீறல்களை ஒப்புக்கொள்வதாகவுமே நல்ல புரிதலுள்ள ஆணும், பெண்ணும் குடும்பத்தை மறு வரையறை செய்யமுடியும் அல்லது பாலியல் மீறல்களை சொல்லாமலே மறைப்பது என்பதையும் முன்வைக்கலாம். இங்கே உள்ளமே பிரதானமென்னும்போது உடலைத் தாண்டி அது செல்லத்தான் வேண்டியிருக்கிறது. சில மீறல்களோடு சமரசம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது  ( எதிர்த்தரப்பின் பாலியல் செயலின்மையால் ஏற்படும் பிரச்சனைகளை இதில் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. உறவை விட்டு செல்லுதல் என்பதைத் தவிர அதற்கு வேறு வழிகளில்லை)

கேப்பிட்டலிசமா, கம்யூனிசமா என்று கேட்டால் நான் கேப்பிட்டலிசம் என்றுதான் சொல்வேன். அதற்கு அர்த்தம் அது சிறப்பானது என்பதல்ல. கம்யூனிசத்துக்கு அதுவே பரவாயில்லை என்பதுதான். இதுவரை நவீன உலகில் கம்யூனிசமே வந்ததில்லை, சோஷியலிசத்துக்கே திக்கு முக்காடித்தான் கிடக்கிறது.  அப்படித்தான் குடும்பமும். புதிய புதிய உறவுகளைத் தேடி தாவிச் செல்லும் அமைப்பைவிட கொஞ்சம் கட்டுப்பாட்டோடு கூடிய, குடும்பமே அதிலும் பொய்த்தனமும், சுயநலமும் உண்டென்றாலும்கூட எனக்கு விருப்பமானது. அதுவே என் உளச்சிக்கலை பெருமளவு குறைக்கக்கூடியது. தாவி தாவிப் போகும் உறவுநிலை மாறுபாடுகள் என்னை பைத்தியக்காரனாக்குகிறது. எனவே இனிவரும் காலத்தில் குடும்பத்தை சிதைப்பதன் கூட அல்ல, குடும்பத்தை மறுசீரமைப்பு செய்வதன் கூடவே நான் நிற்க விரும்புகிறேன்.