ஜனவரி 07, 2018

ஃபெமினிஸ்ட்கள் சூழ் உலகு

ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடப்பதென்பது யாருக்கும் உவப்பு தரக்கூடிய விஷயமல்ல. சில அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் விருப்பமானதாக இருக்கலாம். “இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும், மெதுவ்வ்வ்வ்வா போட்டு விடறேன், சரியா?” என்று சொல்லி சதைக்கோளத்தில் இதமாக ஊசியை ஏற்றும் அழகான நர்ஸ் கிடைத்தால் ஒருவேளை நோயாளிக்கு ஆஸ்பத்திரி விருப்பமானதாக மாறலாம். ஆனால் நோயாளியை பார்த்துக்கொள்ள உடன் இருப்பவருக்கு எப்படா  இந்தத் தொல்லையிலிருந்து விடுபடுவோம் என்பதுதான் மனநிலையாக இருக்க முடியும். ஆனால் தாத்தாவைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை. பாட்டியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முதலில் வேலைவெட்டி இல்லாத எனக்குதான் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைத் தாத்தா ஒப்புக்கொள்வதாக இல்லை. பாட்டியின் கடைசி காலத்தில் தான் உடன் இருக்க வேண்டியது அவசியம் என்று அடம்பிடித்தார். அதற்கு அப்பா ஒப்புதல் தராததால் காந்தியப் போராட்டங்களை ஆரம்பித்தார். வேறுவழி தெரியாத அப்பா ஆஸ்பத்திரியில் உடன் இருந்து பார்த்துக்கொள்ளும் சுதந்திரத்தை தாத்தாவுக்கு அளித்தார். நான் பாட்டியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு போகும்பொழுது தாத்தா உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்.

“என்ன தாத்தா சிரிப்பெல்லாம் பலமா இருக்கு?” என்றேன்
“ வாழ்க்கையே ஒரு சிரிப்புதான ப்ரோ”
“ சரி மொக்க போடாத தாத்தா, விசயத்த சொல்லு”
“அந்தன்னைக்கு நான் வயக்காட்டுல வேல செஞ்சிட்டு இருந்தேன். சோத்துப் போஸியத் தூக்கிட்டு உன் அப்பத்தா வந்துட்டு இருந்தா. தூரத்துல வரும்போதே பாத்துட்டேன். அப்டியெ படக்குன்னு தரையில விழுந்தேன். பக்கத்துல வந்து என்னாச்சுங்க, என்னாச்சுங்க அப்படின்னா, மூக்கு பக்கம் விரலக் கொண்டுபோனா, மூச்ச அடக்கிப் புடிச்சுகிட்டேன். ஐயோ என் புருசன் போய்ட்டானே அப்டினா. ஒரு ரெண்டு வாட்டி சுத்தி முத்திப் பாத்துட்ட்டு சோத்துப் போஸியத் தொறந்தா. புருசன் வருவான், போவான். ரெண்டு நாளைக்கு சோத்தத் திங்க முடியாதே அப்டின்னுட்டு ஒக்காந்து தின்ன ஆரம்பிச்சுட்டா” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார். நான் கட்டிலில் கண்மூடித் தூங்கும் பாட்டியைப் பார்த்தேன். பாட்டி இடையில் கண் விழித்துப் பார்த்துவிட்டு மூடிக்கொண்டதாய் ஒரு பிரமை ஏற்பட்டது. ஒருவேளை இந்த மனிதன் அந்த சம்பவத்துக்கு பழிக்குப் பழி வாங்கத்தான் ஒத்துழையாமை போராட்டம் நடத்திவிட்டு இங்கே வந்திருக்கிறாரா என்ற சந்தேகமும் தோன்றாமலில்லை. ஆனால் தாத்தா அப்படிப்பட்ட மனிதரல்ல. தாத்தா என்னை ஒரு காலத்தில் பெரிய குழப்பங்களிலிருந்து காப்பாற்றி என் வாழ்க்கையையே மாற்றியவர்.

அப்பொழுது நான் இனியாவைக் காதலித்துக்கொண்டிருந்தேன். அவள்தான் என்னைக் கவிஞனாக்கினாள். தபூ சங்கரை விடப் பெரிய கவிஞன் ஆகிவிட வேண்டுமென்பது எனது கனவாக இருந்தது. கனவாக இருந்தது என்பதை சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லவில்லை. தினமும் எனது கனவில் தபூ சங்கர் என்னை அவரது கவிதை வாரிசாக அறிவித்துக்கொண்டிருந்தார். வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் என்ற அவரது கவிதைப்(?) புத்தகத்தை மனப்பாடமாய் படித்து ஒருநாள் முப்பத்தாறு உரு கொண்டு ஓதி ஜபித்து திருநீறு அணிந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் கல்லூரியில் இனியாவின் அறிமுகம் கிடைத்தது.

“ இனியா, ஒரு கவிதை சொல்லட்டா”
“சொல்லுடா”
“எதைக் கேட்டாலும் வெட்கத்தைத் தரும் பெண்ணே, வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?”
“வாவ்டா, இது யாரு கவிதை?”
“ என் ஆசான் தபூ சங்கர் கவிதை. நல்லாருக்குல்ல”
“நல்லாருக்கு. ஆனா இன்னொருத்தர் கவிதையை நீ எனக்கு சொல்லவேணாம். எனக்குன்னு ஸ்பெஷலா உன் கவிதை வேணும்”
ஆம். அந்த வார்த்தைகள்தான் என்னை தபூ சங்கரை விட சிறப்பாக எழுத வைத்தது.

“ இனியா, நடனம் கற்றுக்கொண்டதில்லை நான். ஆனால் என் உதடுகள் எனக்கே தெரியாமல் எப்பொழுதோ கற்றுக்கொண்டுவிட்டன போலிருக்கிறது. என் பிரக்ஞை உன்னிடம் அமிழ்ந்து கிடந்த பொழுதுதான் அது நிகழ்ந்திருக்கவேண்டும். உன்னிடம் காதலை சொல்ல வரும்போதெல்லாம் நடனமாட ஆரம்பித்துவிடுகின்றன”

“ இனியா , பிப்ரவரி 14 காதலர் தினம், உன் பிறந்தநாள் காதல் தினம்”

இனியா என் கவிதைகளில் கட்டுண்டு கிடந்தாள். ஆனால் கவிதைகளைத் தோற்கடிக்கும் சக்தி கிட்டாருக்கு உண்டென்பதை சந்தோஷை இனியா அறிமுகப்படுத்தியபோதுதான் எனக்குத் தெரிந்தது. (இந்தக் கோபத்தை மனதில் கொண்டு பிற்காலத்தில் ஒரு சிற்றிதழில் நான் எழுதிய ‘இயற்றமிழைத் தோற்கடிக்கும் இசைத்தமிழ் என்கிற பொழுதுபோக்கு’ என்ற கட்டுரை பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது).
சந்தோஷ் நெஞ்சுக்குள் மூழ்கிடும் தாமரை என்ற தமிழ் திரைப்பாடலை கல்லூரி கேண்டீனில் இசைத்துக் காட்டினான். முன்பு என் கவிதைகளைக் கேட்கும்போது மாறுவதுபோல் இனியாவின் கன்னம் இளஞ்சிவப்பாக மாறியது. பாட்டு முடிந்ததும் சந்தோஷுக்கு என்னை அறிமுகம் செய்தாள்.

“ இவரும் என்னை லவ் பண்றேன்னு சொல்லிருக்காரு சந்தோஷ். ஆனா உன்னை முன்னாடியே பிடிச்சுப் போச்சே, என்ன பண்ண” என்று சொல்லி சிரித்தாள்.
நான் பரிதாபமாக சிரித்துக்கொண்டே(கொஞ்சம் பயத்தோடுதான்) சந்தோஷைப் பார்த்தேன்.
“பயப்படாதடா, அவரு ஃபெமினிஸ்ட். இதெல்லாம் சாதாரண விஷயமுன்னு அவருக்குத் தெரியும்” என்றாள் இனியா. சந்தோஷ் மெலிதாகப் புன்னகைத்தான்.
“ஹே சந்தோஷ், இவரு கவிஞரும்கூட” என்றாள் இனியா.
“நீங்களும் கவிஞரா. இனியாகூட கவிஞர்தான். என் பர்த்டேவுக்குக்கூட செமயா ஒரு கவிதை எழுதித்தந்தா”
என்னது இனியா கவிஞரா? இவ்வளவு நாள் இனியாவுடன் பழகியும் இது எனக்குத் தெரியவில்லையே. நான் காதலில் தோற்றதற்கு இதுதான் காரணம். ஒரு மனிதனை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் காதலிப்பதாகச் சொல்வதே அபத்தம். இனியாவை நான் புரிந்துகொள்ளவே இல்லை. சந்தோஷ் நீதான் அவளுக்குப் பொருத்தமானவன். சாரி இனியா, சாரி. என்னை மன்னித்து விடு.

“ஞாபகம் வந்துருச்சு” என்றான் சந்தோஷ்.
“சொல்லுங்க” என்றேன்.
“சந்தோஷ், பிப்ரவரி 14 காதலர் தினம். உன் பிறந்தநாள் காதல்தினம்”
நான் இனியாவைப் பார்த்தேன். இனியா பதட்டமாக எழுந்து ஜூஸ் வாங்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டுப்போனாள்.
“ப்ரோ, உங்ககிட்ட ஒண்ணு சொல்ணும்”
“சொல்லுங்க சந்தோஷ்”
“ கரெக்ட் பண்றது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமாடா மயிராண்டி. அடுத்தவன் ஆளுக்கு ரூட்டு விட்ற. வெட்கமா இல்ல? திருந்தித் தொலைங்களேண்டா” என்றான்
எனக்கு ரத்தம் கொதித்தது. இருப்பினும் ஒரு ஜுஸை ஏன் வீணாக்கவேண்டும்?
இதை சொல்லி சுமார் முப்பது நொடிகள் கழித்து “கோபப்பட வைக்காதீங்க ப்ரோ. புரிஞ்சிக்குங்க” என்றான்
என்ன இருந்தாலும் சந்தோஷும் ஒரு ஆண்தானே, அவனுக்கும் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எல்லாம் இருக்கதானே செய்யும். ஓகே ப்ரோ என்று சொல்லிவிட்டு இனியா வந்ததும் மூன்று பேரும் சிரித்து ரசித்து ஜூஸ் குடித்தோம்.

ஆனாலும் இனியாவை என்னால் மறக்கவே முடியவில்லை. பாத்ரூமில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். தபூ சங்கர் இனியாவை நினைவுபடுத்தியதால் தபூ சங்கரைப் படிப்பதைக் கைவிட்டேன். ஒரு நாள் எனது அறையின் கதவை சாத்துவதற்கு மறந்து அழுது கொண்டிருந்தேன். திடீரென உள்ளேவந்த தாத்தா பார்த்து விட்டார். அப்போது அவருடன் எனக்கு இந்த அளவு நெருக்கம் கிடையாது
“ என்னாச்சு ப்ரோ?” என்றார்.
“ யோவ் வெளியப் போய்யா” என்றேன்.

அன்றிரவு ஃபேஸ்புக்கில் பின்வரும் ஸ்டேட்டஸைப் போட்டேன்
“ இந்தக் காலத்தில் சில கிழவர்களுக்கு தங்களது மனதில் இளமை ஊஞ்சலாடுவதாக ஒரு நினைப்பு இருக்கிறது ,இளைஞர்களை ப்ரோ என்று அழைத்துக்கொண்டு, இளம் பெண்களை சைட் அடித்துக்கொண்டு இவர்கள் செய்யும் அக்கப்போர்கள் தாங்கவில்லை. அது அவர்கள் உரிமை. சரி, விடுங்கள். ஆனால் அடுத்தவர்கள் அறைக்குள்கூட இவர்கள் கேட்காமல் நுழைந்து விடுவார்களா? அப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். மேற்கத்திய சமூகம் இப்படியா இருக்கிறது? குழந்தைகள் அறை என்றாலும் கதவைத் தட்டிக் கேட்டுவிட்டுத்தான் வருகிறார்கள். ஆணென்றால் பரவாயில்லை, ஒரு பெண்ணின் அறைக்குள் ஒரு கிழவர் அனுமதி இல்லாமல் நுழைந்தால் என்னாவது? பெண்ணின் உரிமைகளுக்கு இங்கே ஏது மதிப்பு? பெண்களின் உரிமைகளுக்கு யார்தான் குரல் கொடுப்பது?”
இதற்கும் ஆண்கள் லைக் போட்டு கமெண்ட் செய்துகொண்டு இருந்தார்கள். இனியாவுக்குப் பிறகு இன்னொரு பெண்ணைக் கவர்வதற்கான என் கடைசி அஸ்திரமும் பாழானது.

என்னைவிட இளமையாக தாத்தா ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருந்தார். நான் சோகத்தாடியிலும் தாத்தா கிளீன் ஷேவிலும் சுற்றிக்கொண்டிருந்தோம். எனது சோகங்களை சொல்வதற்கு யார்தான் இருக்கிறார்கள்? என்னோடு சுற்றுபவன்களிடம் சொன்னால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். கடைசியாக தாத்தாவையே அதற்குத் தேர்ந்தெடுத்தேன். ஒரு நாள் தாத்தாவிடம் தயங்கித் தயங்கிச் சென்றேன்.
“தாத்தா”
“சொல்லு ப்ரோ”
இதுதான் என்னை எரிச்சலூட்டுவது. இந்த ப்ரோ என்ற அழைப்பு. இருந்தாலும் வேறு வழியில்லை. எனது வலியை சொன்னதும் வழி பிறந்தது ப்ரோ என்று சொல்லிவிட்டு அவருடைய புத்தக அலமாரி பக்கம் சென்றார். “ This is the guide for you” என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அதன்பிறகு நான் ஆளே மாறிப்போனேன். சித்தர் பாடல்களின் பைத்தியமானேன்.

‘ கால்காட்டி கைகாட்டி கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம்?
பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம்?
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்ப்பதுவும் எக்காலம்?
ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனை தேற்றுவதும் எக்காலம்?”
என்ற பத்திரகிரியார் பாட்டை மனப்பாடம் செய்தேன். மனப்பாடம் செய்ததோடு விட்டிருக்கலாம். தெரியாத்தனமாக அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டேன். பெண்ணியவாதிகள் ஒன்று சேர்ந்து என்னை ஆணாதிக்கப் பன்றி என திட்டினார்கள். அந்தத் திட்டுகளுக்கு இடையில் நான் பெண்ணியவாதிகளுக்கு இன்பாக்ஸில் அனுப்பிய குறுந்தகவலில் ஒன்று பலனளித்தது. நான் ஏன் இப்படி ஆனேன் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்ட பிரியா, வாழ்க்கை என்றால் என்னவென்று எனக்கு கற்பிப்பதாகச் சொன்னாள்.  பிளே பாயான தாத்தா எனக்கு சித்தர் பாடல்களைப் படிக்கத் தந்தது ஏன் என்ற பிரியாவின் எளிய கேள்விக்கு முன்னால் நான் தலைகுனிந்தேன். பிறகு அவள்
'மாதர் தோள்சேராத தேவர் மானிலத்தில் இல்லையே
மாதர் தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே
மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே' என்ற சிவவாக்கிய சித்தரின் பாட்டைக் கற்பித்தாள்.
இப்படிக் கற்பித்து கற்பித்து ஃபெமினிஸ்ட் பிரியாவை இப்போது காதலித்துக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. அவள் சொல்வதை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள வேண்டும், நான் சொல்வதை அவள் கொஞ்சம்கூட கேட்கமாட்டாள் என்பதைத் தவிர எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் காலத்தின்  போக்கையோ, அது காட்டும் விசித்திரங்களையோ யார்தான் முன்கூட்டி சொல்லமுடியும்? தாத்தாவின் சித்தர் பாடல்கள் வழி எனக்கு காதல் அமைந்ததுகூட அப்படித்தானே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாட்டிக்கு முன்னாலே தாத்தா போய் சேர்ந்ததும் அப்படித்தான். தாத்தாவை இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்லடக்கம் செய்யப் போகிறார்கள். பாட்டி என்னைக் கூப்பிட்டு எத்தனைப் பேர் வந்திருக்கிறார்கள் என்று கேட்டார். ஒரு அம்பது பேர் என்றேன். பத்து ரூபாயை கையில் கொடுத்து ஃபேர் அண்ட் லவ்லி வாங்கி வரச் சொன்னார். அதை வாங்கத்தான் இப்போது கடைக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.