டிசம்பர் 20, 2017

இனிவரும் அரசியல்

அரசில், அரசு வேலையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகக் கொதித்தெழும் பிராமணரல்லாதவர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக பார்ப்பனரல்லாதோர் சங்கத்தையும் பின்பு அதன்வழி நீதிக்கட்சியையும் நிறுவுகிறார்கள். 1919ல் மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதால் மெட்ராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சி வெல்கிறது. பிராமணரல்லாத அனைவரின் உரிமைக்காகவும், சமூக நீதிக்கும் போராடப்போவதாக அது சூளுரைக்கிறது.

மதரீதியாக பிராமணர்கள் செய்திருக்கிற, செய்துகொண்டிருக்கிற எந்தச் செயலையும் ஏற்றுக்கொள்ளமுடியாதுதான். அது தொடர்ந்து எதிர்க்கப்படவேண்டியதும், சீரமைக்கப்பட வேண்டியதுமாகும். ஆனால் அரசு வேலைகளில் பிராமணர்களின் ஆதிக்கம் இருந்தது உண்மைதான் என்றாலும் அவர்கள் முழுமையாக மற்ற இந்துக்களுக்கு வாய்ப்பே கிடைக்காத அளவுக்கு ஒடுக்கினார்கள் என்று சொல்வதற்கில்லை. 77 பிராமணர்கள் துணைக் கலெக்டராக இருந்தபொழுது பிராமணரல்லாத இந்துக்கள் 30 பேர் துணைக் கலெக்டராக இருந்திருக்கிறார்கள். இங்கே பிரச்சனை என்பது வெறும் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனருக்கு 77 இடம் கிடைத்ததும், எண்பத்தி ஐந்து சதவீதம் உள்ள பிராமணரல்லாத இந்துகளுக்கு 30 இடம் கிடைத்ததுமே ஆகும்.  அதாவது மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் இடம் கொடுக்கப்படவில்லை( விகிதாச்சார பிரதிநிதித்துவம்). இதைத் தொழில்ரீதியிலான முழுமையான ஒடுக்குதல் என்று சொல்லிவிட முடியாது. பார்ப்பனர்கள் கல்வியை தங்களது ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டபொழுது, பார்ப்பனரல்லாத ஆதிக்கசாதி இந்துகள் வணிகத்தையும், நிலவுடைமை முதலாளித்துவ விவசாயத்தையும் தங்களது ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். திராவிட அரசியலுக்கு வழிகாட்டியான நீதிக்கட்சி ஆட்சி பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாத ஆதிக்க, உயர் சாதி இந்துக்களுக்கும் நடந்த போட்டிதான். இந்தப் போட்டியில் தலித்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டார்கள். சொத்து, சொத்து வரியின் அடிப்படையில் வாக்குரிமை அளிக்கப்பட்ட 1920 தேர்தலில் தலித் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஐந்து தலித்கள் பிரிட்டிஷ் கவர்னரால் நியமன உறுப்பினர்களாக்கப்பட்டார்கள். பின்பு நீதிக்கட்சியால் கொண்டுவரப்பட்ட விகிதாச்சார இட ஒதுக்கீடு முறையிலும் முஸ்லிம்களை விடக் குறைவான இடம்தான் தலித்களுக்கு கொடுக்கப்பட்டது.

சில வேளைகளில் தலித்களுக்கு ஆதரவாகப் பெரியார் பேச முயன்றபோதும் அவரது பேச்சுக்கு அவரது ஆதரவாளர்களிடமிருந்தே எதிர்ப்பு எழுந்திருக்கிறது. 1931 கூட்டமொன்றில் பெரியார் ஆதிதிராவிடர்களுக்காகவும் நாம் குரல்கொடுக்கவேண்டுமென்கிற ரீதியில் " ஆதிதிராவிடரைப் பற்றிப் பேசும்போது பார்ப்பனர் மனவருத்தம் அடைவதில் நியாயமுண்டு, பார்ப்பனரல்லாதவர் மன வருத்தம் அடைவதில் நியாயமில்லை. அது முட்டாள்தனமாகும்" என்கிறார் .ஆனால் 1947ல் முழுக்க முழுக்க தலித் அல்லாத பிற சாதிகளுக்காக வெளிப்படையாக பேச ஆரம்பிக்கிறார் பெரியார்.  " நாம் பஞ்சம வர்ணத்தாரகவோ அதாவது ஆதிதிராவிடராகவோ,  அல்லது இஸ்லாம் மதஸ்தராகவோ ஆனால் ஒழிய நமக்கு மானவாழ்வு, நீதி வாழ்வு, முற்போக்கு வாழ்வு இல்லை" என்கிறார். ஆதிதிராவிடர்கள் இந்து அல்ல என்று வாயிலாவது சொல்லிக்கொண்டே அம்பேத்கரின் வழியாகப் பயனடைந்துவிடுவார்கள் என்கிறார்.

இது இவ்வாறு இருக்க திராவிடம் என்ற கொள்கையிலும் திராவிடர் கழகம் உறுதியாக இருந்ததாக சொல்ல முடியாது. பெரியார் முன்வைத்ததும் ஒருவகையான தமிழ் தேசியம்தான். 1956ல் ஆந்திரப் பிரிவினைக்குப் பிறகு தமிழக, கேரள, கர்நாடகப் பகுதிகளை இணைத்து தட்சணப்பிரதேசம் (ஏறக்குறைய திராவிடநாடு) அமைப்பது குறித்த ஆலோசனைகள் எழும்பொழுது அதைக் கடுமையாக எதிர்க்கும் பெரியார் கன்னடர்களும், மலையாளிகளும் இனப்பற்றும், சுய மரியாதையும், பகுத்தறிவும் இல்லாதவர்கள் எனவும் அவர்கள் நம்முடன் இல்லாதிருப்பதே நல்லது என்றும் கூறுகிறார்.

குடும்ப அமைப்பு, பெண் விடுதலை, இந்து மூடநம்பிக்கைகள் பற்றி பெரியார் சொல்லியுள்ள கருத்துகள்  முக்கியமானவை என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆனால் இன்று சுய சிந்தனையுள்ள எவரும் பெரியாரைப் படிக்காமலேகூட இந்த சிந்தனைகளைப் பெற முடியும். அவர் வாழ்ந்த காலத்தில் இது பெரிய சிந்தனைதான். தொண்ணூறு வயதிலும் மூத்திர சட்டியை சுமந்து ஊர் ஊராய் சென்று உரையாற்றிய அவர் பணியைத் துச்சமென யாரும் நினைக்க முடியாது.  இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் பெயரின் பின்னால் சாதி போட்டு கொள்ளாத நிலையை தமிழகம் அடைந்திருப்பதில் அவரது பங்கும் நிச்சயம் இருக்குமென்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் பார்ப்பனர்களை மட்டும் குறைசொன்ன அவர் அணுகுமுறை மோசமானது. கீழ்வெண்மணி படுகொலையில் அவர் எதிர்வினை ஆற்றினாரா என்ற கேள்வியை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. பஞ்சமன் என்பதெல்லாம்கூடப் பரவாயில்லை, சூத்திரன் என்றழைக்கப்படுவதுதான் அதைவிட மோசமானது என்றும்கூட அவர் பேசியிருக்கிறார். இஸ்லாம்தான் எல்லாவற்றிற்கும் தீர்வென்று பேசியிருக்கிறார். அவற்றை வைத்தும் அவரை அணுக வேண்டியிருக்கிறது. நான் பெரியாரை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. அவரைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். பெரியார் அனைத்து மக்களுக்குமானவராகத் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பினாலும்கூட அவரைச் சார்ந்தவர்களே அதற்கு எதிராக நின்றார்களா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. எப்பொழுதாவது தலித்களுக்கு ஆதரவாக பெரியார் சிறுகுரல் எழுப்பும்போதே தலித் அல்லாத, பார்ப்பனரல்லாதவர் கொதித்துப் போகிற சூழல் ஏன் வருகிறதென்று புரிந்துகொள்ள முயல்கிறேன். சசிகலா முதல்வராக வேண்டுமென கி. வீரமணி அவர்கள் சொல்வது ஏனென்று புரிந்துகொள்ள முயல்கிறேன்.  தமிழகத்தின் எந்த அரசியல் மூளைச்சலவைக்கும் நான் என்னை ஒப்புக்கொடுத்துவிடவில்லை. அதனால் பெரியாரிய அதிநாயக பிம்பத்துக்கு ஆதரவாகக் கொந்தளிப்பவர்களைப் போல் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக கொந்தளிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. பெரியாரியக் கருத்துகளை எந்தளவிற்கு திராவிடர் கழகம் பொது மக்களிடம் எடுத்துச்சென்றிருக்கிறது என்ற கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது. பன்றிக்கு பூணூல் போடுவதற்கும், நரகாசுர விழா எடுப்பதற்குமே நேரம் சரியாக இருக்கிறது . அப்பறம் கொஞ்சம் பார்ப்பனர்களைத் திட்டுவதற்கும் நேரம் இருக்கிறது. 3% இருப்பவர் திருந்துவதை விட 85% இருப்பவர் திருந்துவதுதானே முக்கியமானது?

தன்னுடைய சுயசாதிப் பற்றையும், தீண்டாமையையும் விமர்சிக்கத் தயங்கும் திராவிடம் வசதியாக எல்லாப் பழியையும் பார்ப்பனீயம் என்ற வார்த்தையில் அடக்கி தப்பித்துக்கொள்கிறது. எங்குமிலாத திராவிடம் என்ற கொள்கையை ஆரம்ப காலத்தில் சில பேரின் வசதிக்காக ஏற்படுத்திவிட்டு அதிலிருந்து விடுபட வழிகளில்லாமல் தவிக்கிறது. தமிழ் தேசியத்தின் வடுக வந்தேறி பதத்திற்கு இணையாகவே ஆரிய வந்தேறிகளென பிராமணக் காழ்ப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டுள்ள திராவிடம் இனிவரும்காலங்களுக்கான அரசியல் சித்தாந்தமாக தொடர்ந்தியங்க முடியாமல் தோல்வியை நோக்கிச் செல்கிறது.

திராவிடம் பார்ப்பனீயத்துக்கு எதிராக வன்மத்தையும், வசைகளையும் வாரித் தெளித்தது. அதற்கு பதிலாக பார்ப்பனீயம் தன்னை தன் சாதிக்குழுவோடு ஒன்றிணைத்து இன்னமும் வலுவான எதிர்த்தரப்பாக மாற முயன்றது. தொடர்ந்து தன்னை பிறரிலிருந்து அந்நியப்படுத்திக் கொண்டது. சமரசத்திற்கு இருதரப்பும் ஒப்புக்கொள்ளவில்லை. இருதரப்பின் அகங்காரங்களும் முட்டி மோதின. ஒரு நல்ல உரையாடலை நோக்கி இருதரப்பும் முன்னேறவில்லை. தலித்களை இருதரப்புமே பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. பாம்பையும், பாப்பானையும் கண்டால் பாப்பானை அடி என்றது திராவிடம். கத்தி வைத்துக்கொள்ளுங்கள் என்றார் பெரியார். தொடர்ச்சியான குற்ற உணர்ச்சி பார்ப்பனத்தரப்பின்மீது ஏற்றப்பட்டது. சில பார்ப்பனர்கள் தங்கள் தரப்பை விட்டு வெளிவர முயன்றபொழுது பார்ப்பனரின் புத்தி எப்படி இருந்தாலும் ஒன்றுதான் என்ற பொதுமைவாதத்தை முன்வைத்தது திராவிடம். பார்ப்பனீய ஆதிக்கம் தன்னை மாற்றிக்கொள்ள திராவிடம் வழங்கிய வாய்ப்பென்ன? ஒன்றுமில்லை. அது பார்ப்பனரை அடியோடு ஒழிக்க முயன்றதே தவிர அரவணைத்துக்கொள்ள முயன்றதில்லை. பார்ப்பனர்கள் மனம்மாற அது வாய்ப்பே அளிக்கவில்லை.ஒரு வகையான வன்முறைதான் இது. இதன் விளைவுகளை இன்று பார்க்கும்பொழுது சாதி ஒழிப்பில் பார்ப்பனரோ, பிற இந்துகளோ மனதளவில் பெரிய அளவில் மாற்றமடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால் எந்த ஆதிக்க ஆயுதம் கொண்டு திராவிடம் பார்ப்பனர்களைத் தாக்கியதோ இன்று அதே ஆயுதம் கொண்டு தமிழ் தேசியம் திராவிடத்தைத் தாக்குகிறது.

திராவிடத்திலும், தமிழ் தேசியத்திலும் உள்ள அடிப்படை பிரச்சனை என்பது அது தன் சொந்த இனமக்களையே பகைவர்களாகக் கருதுகிறது என்பதுதான். பெரும்பாலும் இது தன்னிடமுள்ள தவறுகளை மீளாய்வு செய்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் எல்லாவற்றுக்கும் குறிப்பிட்ட பிரிவினர்களை குற்றஞ்சாட்டவும் உதவியிருக்கிறது. உண்மையாக எதிர்க்க வேண்டியவர்களோடு, இனக்குழுவிற்கு எதிரானவர்களோடு இவை சமரசம் செய்துகொள்கிறது. தமிழர்கள் என்கிற இனக்குழுவுக்குள்ளேயே பிளவுகளை உருவாக்க இவை முயல்கிறது. எப்பொழுதோ நிகழ்ந்த, நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிற வரலாற்றுச் சம்பவங்களைக் காரணம் காட்டி சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பார்ப்பனர்களையும், தமிழோடு பிற மொழியையும் பேசும் மக்களையும் இனக்குழுவின் எதிரிகளாக இவை சித்தரிக்கிறது.ஒருவன் எந்த இனக்குழுவின் பிரதிநிதி என்பதை தனிப்பட்ட மனிதன்தான் முடிவு செய்யவேண்டும். தமிழனாக உணரும் ஒருவனை, தமிழ்நாட்டில் பிறந்து , தமிழ் பயின்று, பல ஆண்டுகளாகத் தமிழ்ச்சூழலில் வாழும் ஒருவனின் சாதியை மட்டும் எடுத்துக்கொண்டு நீ தமிழனில்லை என்றுசொல்ல எந்த அமைப்பிற்கும் அதிகாரமில்லை. சில தமிழ்தேசிய அமைப்புகள் வந்தேறிகளை மீள்குடியமர்த்தம் செய்வோம் என்கிறார்கள். ஒவ்வொரு மாநிலமும், நாடும் வந்தேறிகளை மீள்குடியமர்த்தம் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்? சிங்களர்கள், தமிழர்கள் மீது காட்டிய இனவெறிக்கு சற்றும் குறைவில்லாததுதான் தமிழ்நாட்டில் தமிழர்களையே வடுக வந்தேறிகளாக்கும் தமிழ்தேசியர்களின் தூயஇனவெறி. திராவிடத்துக்கு மாற்றாக தமிழ் தேசியம் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு பிறகு வெல்வதற்கான வாய்ப்பு குறைந்தபட்ச அளவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது உருவாக்கப்போகும் விளைவுகளுக்குப் பிறகு திராவிடம் ஒருநாள் தோல்வியடைவதைப் போலவே தமிழ் தேசியமும் தோல்வி அடையும். தூய இனவாத சித்தாத்தங்கள் நீண்ட காலத்திற்கு நீடித்து நிற்காது. ஏனென்றால் இவற்றினால் விளையக்கூடிய நன்மை எதுவும் இல்லை. அறப்பிறழ்வு என்பது சமூகக்குழுக்களெங்கும் பின்னிப்பிணைந்திருப்பதுதான். அது வந்தேறிகளிடமும், பார்ப்பனர்களிடமும் மட்டும் இருப்பதல்ல. இருபத்தோராம் நூற்றாண்டு தமிழ்ச் சமூகத்தை பல காலங்களுக்கு பின்னோக்கி எடுத்துச்செல்ல ஏற்ற சித்தாந்தம் வடுக வந்தேறி தமிழ் தேசியம். திராவிட சித்தாந்தந்தை பேசினாலும்கூட  இங்கே ஆட்சிக்கு வந்த எந்த அரசியல் அமைப்பும் அந்தக் கொள்கையைப் பின்பற்றிய மாதிரித் தெரியவில்லை. திராவிடர் கழகம் ஒன்றுதான் பெரியாரை அதிநாயக பிம்பமாக்கி பார்ப்பன வெறுப்பரசியல் செய்துகொண்டிருக்கிறது. இருப்பினும் கடவுள் நம்பிக்கையும், பூஜையும், யாகமும், மூட நம்பிக்கைகளும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஏறக்குறைய தமிழ் தேசியமும் அதிகாரத்துக்கும், ஆட்சிக்கும் வந்தால் அப்படித்தான் ஆகுமென்றே கொள்ளலாம். அதிகாரம் என்றாலே சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது, கொள்கைகள் இல்லாமல் போய்விடுகிறது. இதனால்தான் திராவிடர் கழகத்தைப் போலவே மே17ம் அதிகாரம் பெற முயலமாட்டோம் என்கிறது. இவ்வகையான அரசியல் ஏற்படுத்தும் தாக்கம் என்னவென்று இனி பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஒருவேளை இதையும்மீறி  செயல்படுத்தப்படுமேயானால் திராவிடத்தை விடவும்  மிகவும்   ஆபத்தானது வடுக வந்தேறி தமிழ் தேசியக்கொள்கை.

மதத்தையோ, சாதியையோ, மொழியையோ ஒருவன் பிறப்பால் தேர்ந்தெடுக்கவே முடியாது. ஆனாலும் தனது இருத்தலின் பொருட்டு தான் சார்ந்த மதத்தை,சாதியை,மொழியை பெருமைக்குரிய ஒன்றாக கட்டமைக்கவேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது. மனிதப் பிரிவினைகள் மனித இயல்பின்படியே தவிர்க்கமுடியாததாக இருக்கின்றன.ஆனால் அப்படிக் கட்டமைப்பதன் வழியாக பிற மதத்தையோ, சாதியையோ, மொழியையோ ஒருவன் காழ்ப்போடு அணுகி வல்லாதிக்கம் செய்வானென்றால், பிறரது இருத்தலை கேள்விக்குறிக்குள்ளாக்கி தனது சாதியை, மதத்தை, மொழியை வைத்து அரசியல் செய்வானென்றால் அந்த சித்தாந்தத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியிருக்கிறது. அந்த வகையில் இந்துத்துவத்தையும், இந்தித்துவத்தையும் இதே நிலையில் தொடர்ந்து எதிர்ப்பது காலத்தின் கட்டாயமாகிறது.

இந்த எல்லா அரசியல் சித்தாத்தங்களையும் விட சிறப்பானது கம்யூனிசம்தான். அது மக்கள் அனைவரையும் சமமாக மாற்றிக்காட்டும் ஒரு பூலோக சொர்க்கத்தை முன்வைக்கிறது. சமத்துவம் என்ற உயர் லட்சியவாதத்தை எவர்தான் வேண்டாமென்று சொல்லமுடியும்? ஆனால் அது ஒரு கற்பனாவாதமாகத்தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறது.பின்நவீனவாதிகள் கம்யூனிசம் வர்க்கப்பிரிவினைகளை மட்டுமே கருத்தில்கொண்டதாகவும் சாதியப்பிரிவினைகளையும், பெண் ஒடுக்குதலையும் அது கவனத்தில் கொள்ளவில்லை என்றும் சொல்கிறார்கள். அதன்பொருட்டு உலகளாவிய நோக்கைக் கொண்ட கம்யூனிசத்தைப் புறக்கணிக்கிறார்கள். ஒருவேளை பின்நவீனவாதிகள் சொல்வதையெல்லாம் கம்யூனிசம் சேர்த்துக்கொண்டாலும் அது இந்த காலகட்டத்திற்குரியதாக மாற முடியாது. ஏனென்றால் மனித மனங்களில் சமத்துவம் என்பது இயல்பிலேயே கிடையாது. ராகுல சங்கிருத்தாயன் பழங்குடி வாழ்வு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயரும்பொழுது எந்தப் பொருளையும் தன்னுடன் எடுத்துச்செல்லவில்லை, எனவே மனித வாழ்வின் துவக்கத்தில் தனியுடைமையே கிடையாது என்கிறார். ஆனால் மனித வாழ்வின் துவக்கத்திலேயே பழங்குடி குழுக்களில் மோதல் இருந்ததாக எழுதுகிறார். பெண்ணைத் தலைவியாகக் கொண்ட குழுவில் அடுத்த தலைவிக்கு போட்டி இருந்ததாக எழுதுகிறார். இதை எப்படி கம்யூனிச சமூகம் இருந்ததாகக் கொள்ளமுடியும்?

அப்படி ஒருவேளை ஒருகாலத்தில் இருந்திருப்பதாகவே வைத்துக்கொண்டாலும்கூட இன்று மாறிவரும் மனதிற்கேற்ப சிந்திக்காமல் பழங்குடி மனநிலையில் சிந்தித்து காலத்தை பின்நகர்த்த முயற்சித்து கம்யூனிஸ்டுகள் சாதித்தது என்ன? ஒரு புரட்சியை நிகழ்த்தி ஆட்சிக்கு வருகிறார்கள். கம்யூனிசத்தின் முதல்படி சோஷியலிஸம் என்று சொல்லி இருக்கிற கட்சிகளையெல்லாம் தடை செய்கிறார்கள். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமென்று அரச சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகிறார்கள். செய்திகள் வெளிவராமல் தணிக்கை செய்கிறார்கள். பிறகு கம்யூனிசத்தை நோக்கி செல்வதைப்பற்றி வாயே திறக்காமல் இருக்கிறார்கள்.திறந்த சந்தைப் பொருளாதாரத்தைத் தடைசெய்து கம்யூனிசப் பொருளாதாரத்துக்கு கதவு திறக்கிறார்கள். கடைசியில் பஞ்சமும், பட்டினியும் வந்தபிறகு முதலாளித்துவமே பரவாயில்லையென்று முடிவெடுக்கிறார்கள். இதுதான் இவர்கள் செய்தது. கம்யூனிசம் என்பது முதலாளித்துவத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக முன்நிறுத்தப்பட வேண்டிய ஒரு கருத்தியல், அது எப்பொழுதும் இருக்கவேண்டியது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது ஒரு அரசை அமைப்பதற்கான சித்தாந்தமல்ல. இன்று கம்யூனிஸ்டுகளே இதை உணர்ந்து தங்களை காலத்திற்கேற்ப தகவமைக்க துவங்கிவிட்டார்கள் என்றாலும்கூட அது எப்படிப் பார்த்தாலும் கம்யூனிசம் இல்லையே?

பார்ப்பனர்கள் சாதியப் பாகுபாடுகளை என்றைக்கோ உருவாக்கிவிட்டார்கள் என்பதால் இனி ஒருபோதும் அவர்கள் திருந்தக்கூடாது , எப்பொழுதும் குற்ற உணர்வோடே அவர்களை வைத்திருக்க வேண்டுமென்று இடைநிலை சாதி வெறியை வசதியாக மறந்துவிடும் திராவிடம். பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு தமிழனென்று தன்னை எண்ணுகிற தமிழ் உணர்வுள்ள மனிதர்களை வந்தேறிகள் என்று பிரித்தாளத் துடிக்கும் தமிழ் தேசியம். பிறப்பால் மனிதன் தீர்மானிக்கவே முடியாத மதத்தின்பால் வெறிகொண்டு தன் மதமல்லாத பிறரை நாட்டை விட்டே வெளியேறச் சொல்லும் இந்துத்துவம். கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சிவிட்டு பிச்சை காசைத் தூக்கிப் போடும் தாராளமய, தனியார்மயம். சமத்துவம் என்ற கற்பனாவாதத்தை, லட்சியவாதத்தை சொல்லி,  இருக்கிற கட்சிகளையெல்லாம் அழித்தொழித்து, தகவல்கள் வெளிவராமல் தணிக்கை செய்து,  அரச சர்வாதிகாரமாக மாறி, கடைசியில் இதற்கு தனியார்மயமே பரவாயில்லையென்று நம்மை சொல்லவைக்கும் கம்யூனிசம். இப்படிப்பட்ட அரசியலில் எந்த அரசியல் சித்தாந்தமாவது ஒட்டுமொத்த மனிதர்களின் ( குறைந்தபட்சம் ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழும் ஒற்றை இனக்குழுவின் உறுப்பினர்களின்) நன்மைக்கு உதவியுள்ளதா? இனக்குழுவிற்குள்ளேயே யாராவது ஒருவரை பொது எதிரியாக கட்டமைத்து வெறுப்பரசியல் செய்வதைத் தவிர இவை என்னதான் செய்துள்ளது? ஒரு இனக்குழுவின் குறிப்பிட்ட பகுதியினரை ஆதிக்கம் செய்பவர்களாக, அதிகாரம் செய்பவர்களாக மாற்றுவதைத் தவிர இவை என்னதான் செய்துள்ளது? சகமனித வெறுப்பைத் தூண்டிவிடுவதை மட்டுமே தனது கொள்கையெனக் கொண்டிருக்கும் இவை எதுவுமே இனிவரும் காலத்துக்கான அரசியலல்ல. முறைபடுத்தப்பட்ட தனியார்மயக் கொள்கைகளோடு  ஒரு இனக்குழுவுக்குள் வாழும் ஒவ்வொருவரையும் ஒன்றிணைத்து செல்லும் அரசியலே இனிவர வேண்டிய அரசியல்.இனக்குழுக்களுக்கிடையேயான வேறுபாடுகளை இயல்பான மனித உணர்வின்படி முழுமையாக தவிர்க்கமுடியாது என்பதால் ஏறக்குறைய அது தமிழ்தேசிய அரசியல்தான். ஆனால் நிச்சயமாக அது வந்தேறி அரசியலல்ல.