ஆகஸ்ட் 12, 2017

ஒழுக்கமும் மகிழ்ச்சியும்

' அடுத்தவன் சந்தோஷமா இருக்கறதப் பாத்து நாம சந்தோஷப்பட்றது ஆபாச படம் பாக்கும்போதுதான்'
இந்த நகைச்சுவை சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்பு சுற்றிக்கொண்டிருந்தது. இதை நாம் சிறு புன்னகையோடு கடந்திருக்கலாம்.ஆனால் இதன் கருத்தில் ஏதும் உண்மை இருக்கிறதா? சக மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து நாமும் மகிழவேண்டும் என்று நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு மனிதனின் மகிழ்ச்சியைப் பார்த்து இன்னொரு மனிதன் உண்மையிலேயே மகிழ்கிறானா, குதூகலிக்கிறானா என்றால் மனித இயல்பு அப்படி இல்லையென்றுதான் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

சக மனிதனின் மகிழ்ச்சி நமக்கு எரிச்சலூட்டும்போதுதான் ஒழுக்கம் சார்ந்த வரையறைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. கடவுளின் பெயரால், சமூக விதிகளின் பெயரால் உருவாக்கப்படும் ஒழுக்கம் தனிமனிதனின் மகிழ்ச்சியைக் குலைப்பதையே தனது நோக்கமெனக் கொண்டது. மனித சுயநலமும், சகமனித வெறுப்பும் காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டு ஓடுவதாலேயே ஒழுக்க வரையறைகள் பிறக்கிறது. ஒழுக்கம் மீறப்பட்டதாகச் சொல்லப்படும் எந்தவொரு வாழ்க்கைத் தருணத்திலும் இதைப் பொருத்திப் பார்த்து நாம் புரிந்துகொள்ளமுடியும்.

கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணான நீங்கள் அப்பொழுதுதான் அறிமுகமான புதுவிதமான சிகையலங்காரத்தோடு கல்லூரிக்குச் செல்கிறீர்கள். கல்லூரியே உங்களைத் திரும்பிப் பார்க்கிறது. ஆனால் உங்களது ஆசிரியர் இதுதான் கல்லூரிக்கு வரும் லட்சணமா என்று உங்களைத் திட்டுவார். அந்த எதிர்ப்போ, திட்டோ ஏன் வருகிறது?

அந்த சிகையலங்காரத்தின் மூலம் நீங்கள் எதிர்பாலினத்தை கவரலாம். அது காதலாகலாம். அதனால் யாருக்கு என்ன பிரச்சனை? காதல் கிடைக்காதவர்களுக்கு உங்கள் மீது வரும் வெறுப்புதான் பிரச்சனை. காதலர் தினத்தன்று காதலர்களை தாலி கட்ட சொல்லி மிரட்டும் வன்முறையாக உருமாறுவது அந்த சகமனித வெறுப்புதான். அழகான உங்கள் சிகையலங்காரத்தை வைத்துக்கொள்ள முடியாத ஆசிரியருக்கு வரும் வெறுப்புதான் அந்த மாதிரியான சிகையலங்காரங்களுக்கு கல்லூரியில் அனுமதியில்லை எனும் விதியாக மாறுகிறது.

தனக்கு கிடைக்காத விஷயங்கள் பிறருக்குக் கிடைக்கும்போது மனித மனம் கொள்ளும் வன்மமே ஒழுக்கத்தை வரையறை செய்து, தனிமனித மகிழ்ச்சியை விதிகள் மூலம் தடுத்து ஆறுதல் அடைகிறது. நீங்கள் மறுமணம் செய்தால் அது கோபமடைகிறது. உங்களுக்கு இரண்டு பொண்டாட்டி இருந்தால் அது கோபமடைகிறது. நீங்கள் விதவையானால்தான் அது மகிழ்கிறது. நீங்கள் துன்பப்படும்பொழுது, அடக்குமுறைகளுக்கு ஒப்புக்கொடுக்கும்போது அது உங்களை சிறந்த மனிதனென்று புனிதப்படுத்துகிறது. அதன்மூலம் உங்களை அதிலேயே நீடித்திருக்க செய்கிறது.அதன்மூலம் உங்களையும் தன் பகுதியாக மாற்றிக்கொள்ளும் அது சகமனிதன் மீது அதனைப் பிரயோகிக்கச் சொல்கிறது. இது ஒரு வலைபின்னலாக எங்கும் பரவுகிறது.

இந்த எரிச்சலை, வெறுப்பை மனிதன் இல்லாமலாக்க முடியுமாவென்றால் அது மனித இயல்பாகவே இருக்கும் பட்சத்தில் அதை எப்படி நீக்கமுடியும்? உங்களுக்கு காலையில் ஆறு மணிக்கு வேலைக்குப் போகவேண்டும். நீங்கள் வேண்டாவெறுப்பாக ஐந்து மணிக்கே எழுந்து தயாராகிறீர்கள். அதே அறையில் உங்களோடு தங்கியிருக்கும் நண்பனுக்கு பத்து மணிக்கு அலுவலகம் போனால் போதும். அவன் உங்கள் கண்முன்னால் குறட்டை விட்டு  தூங்கிக்கொண்டிருக்கிறான். அப்பொழுது உங்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். அவனை நீங்கள் எட்டி ஒரு மிதி மிதித்துவிட்டு ஜாலியா இருக்க என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு செல்லலாம் அல்லது காலையில் சீக்கிரம் எழுவது உடலுக்கு எவ்வளவு நல்லது என்று பாடமெடுக்கலாம். நீங்கள் பதினைந்து முறை எழுதியும் தேர்ச்சிபெறாத தேர்வில் உங்கள் நண்பன் முதல்முறையிலேயே தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். அப்பொழுது அரச சர்வாதிகாரமோ, மத சர்வாதிகாரமோ உங்களிடமிருந்தால் முதல்முறை வெல்வது செல்லாது என்று நீங்கள் விதி இயற்றலாம். உங்களுக்குப் பிடிக்காத தயிர் சாதத்தை யாரும் சாப்பிடக்கூடாதென்றுகூட நீங்கள் விதிகளை, சட்டங்களை உருவாக்கலாம். ஆனால் இந்த விதிகளுக்கு எதிராக வழக்கம்போல் மீறல்கள் நடக்கும்.மீறல்களுக்கு எதிராக அடக்குமுறைகள் நடக்கும். வன்முறை வெடிக்கும். சட்டத்திருத்தங்கள் நடக்கும். ஆனால் தீர்வென்பது இதே சுழற்சிதான். இந்த இரு தரப்புகள் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும். காரணம் நாம் மனிதர்களாய் இருக்கிறோம். நமக்கென இயல்பிலேயே சில குணங்கள் இருக்கிறது. அவற்றைக் குறைத்துக்கொள்ளலாமே தவிர முழுமையாக நீக்கிவிட முடியாது.