அக்டோபர் 20, 2017

ரயில் பயணங்களில்

பயணச்சீட்டுக்கு தேவையான பணத்தை மட்டும் பர்சிலிருந்து வெளியே எடுத்துவிட்டு எனக்கு பின்னால் நின்றவனைத் திரும்பிப் பார்த்தேன். பாக்கின் கறை படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தான். பர்ஸை சட்டையின் பாக்கெட்டில் வைத்துகொண்டேன். முன்னால் பெரிய வரிசையாக இருந்தது. சென்ட்ரல் வந்து டிக்கெட் எடுக்க நினைத்தது தப்புதான், சென்னை புறநகர் நிலையத்திலேயே பயணச்சீட்டு எடுத்திருந்து இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். சுதந்திர தினம் திங்கள் கிழமை வருவதால் மூன்றுநாள் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க சென்னை அகதிகள் நிறையப்பேர் ஆசைப்பட்டதால்தான் இவ்வளவு கூட்டம். ஆனால் தீபாவளி அளவிற்கு கூட்டம் இல்லை.
தீபாவளி அன்றைக்கு ஜெனரல் கம்பார்ட்மென்டில் இடம்பிடிக்க தெரிந்திருந்தால் நீங்கள் சூப்பர்மேன்,ஸ்பைடர்மேனைவிடப் பெரிய மேன். (பெண்ணியவாதிகள் வொண்டர் வுமன் என்று மாற்றிப் படித்துக்கொள்ளுமாறு ரொம்பவும் அடக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன்) போன வருடம் தீபாவளிக்கு என்னை இப்படிப்பட்ட மேன்களில் ஒருவன் என நம்பி தரணி ஃபோன் செய்தான்.
“டேய் எங்கடா இருக்க, கிளம்பிட்டியா இல்லியா”
“இப்பதாண்டா ஆபிஸ் முடிஞ்சது. கிளம்பிட்டே இருக்கேன். நான் ஒரு ஆறு மணிக்கு அங்க இருப்பேன். ஏழு மணி டிரெயின்ல போயிடலாம். நம்ப சிவப்பிரபு காலையிலேயே சப் அர்பன் ஸ்டேஷன்ல நமக்கு டிக்கெட் எடுத்துட்டு வந்துட்டான்”
” டேய் இடம் பிடிச்சிடுவேல்லா?”
“நாம பாக்காத டிரெயினா? நீ வாடா பாத்துக்கலாம்”
அவ்வளவு பெருங்கூட்டம் அன்றுவருமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. தென்னிந்தியர்களை விட வட இந்தியர்கள் அதிகமாக இருப்பதுபோல தோன்றியது. தரணி என்னை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஒண்ணு பண்ணுவோம்டா தரணி, நீ ஒரு கம்பார்ட்மென்ட்ல ஏறு, நான் ஒண்ணுல ஏறறேன். யாருக்கு இடம் கிடைக்குதோ அவங்க இன்னொருத்தருக்கு ஃபோன் பண்ணி சொல்லலாம்” என்றேன். சரி என்பதுபோல தலையாட்டினான். இன்றைக்கு என்ன நடக்கப்போகிறதோ என நினைத்துக்கொண்டேன்.
தொலைக்காட்சியில் ஒரு குளிர்பானத்தைக் குடிப்பதற்கு பறந்து பறந்து விஷால் செய்யும் பிரயத்தனத்தை பார்த்திருப்பீர்கள் இல்லையா?அதைப் பார்த்தது இல்லையென்றால் சாவைக் கண்டு பயப்படாமல் குளிர்பானம் குடித்துவிட்டு குறிஞ்சிப்பூ பறிக்கப் போகும் ஆர்யாவை நினைத்துக்கொள்ளுங்கள். ஆர்யாவாக, விஷாலாக மாறி வேகமாக வந்துகொண்டிருக்கும் டிரெயினின் ஜெனரல் கம்பார்ட்மெண்டின் வாயில்க் கம்பியை ஒரு வழியாகப் பிடித்தேன். ஆனால் எனக்கு முன்பே பலபேர் ஏறி இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக ரயில் வந்த உடன் எல்லாம் லைட் போட்டிருக்க மாட்டார்கள் என்பதால் இருட்டாக இருந்தது. நான்கு பேர் உட்காரும் இடத்தில் ஒருவன் படுத்துக்கொண்டிருந்தான். அவன் கால் முடிந்தபிறகு மீதமுள்ள இடத்தில் போய் உட்கார்ந்தேன். என்னை ஒருமுறை வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு எட்டி மிதித்தான். இடம் தேடிக்கொண்டிருந்த ஒருத்தன்மேல் போய் விழுந்து அவனைக் கட்டிப்பிடித்தேன். அவன் என் பிறப்பு சார்ந்த வசைகளை சொல்லி திட்ட ஆரம்பித்தான்.
சிராஜ் உத் தௌலா என்கிற வங்காள நவாப் ஆங்கிலேயர்கள் நூற்று நாற்பத்தியாறு பேரை ஒரு சிறிய இருட்டறையில் அடைத்து வைத்துவிடுவான். மூச்சுத்திணறல், நெரிசல் இவற்றால் நூற்றி இருபத்து மூன்றுபேர் இறந்துவிடுவார்கள். அதிலிருந்து தப்பித்துப்போகிற ஹோல்வெல் என்கிற படைவீரர் இதை இங்கிலாந்துக்கு சென்று சொல்லி கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆதரவு பெருகி பின் வங்காள நவாப்பின் ஆட்சி முடிவுக்கு வரும். தெற்காசியா முழுவதையும் பிரிட்டீஷ் கைப்பற்றும். அந்த இருட்டறை துயரச் சம்பவம் போலதான் இந்தத் துயரமும். மூச்சு, மூச்சு என்று சிலர் கதறிக்கொண்டிருந்தார்கள். எல்லா உடல்களிலிருந்தும் வியர்வை இன்னொருவருக்கு இடம்மாறிக் கொண்டிருந்தது. நான் எப்படியாவது வெளியே செல்ல முயற்சித்தேன். ஒரு குழு வெளியே செல்ல முயல இன்னொரு குழு உள்ளே ஏற முயல பயங்கர தள்ளு முள்ளு ஏற்பட்டது. யார் யாரோ என் காலை மிதித்துக்கொண்டிருந்தார்கள். மூச்சு விட முடியவில்லை. என்னவென்றே பிரித்தறியவியலாத நாற்றம் அங்கே பரவிக்கொண்டிருந்தது. “டேய் நகருங்கடா, வெளிய போறண்டா” என்று கத்திக்கொண்டே ஒவ்வொருவரையும் விலக்கி ஒரு வழியாக வெளியே வந்தேன். நூறு மீட்டர் ஓட்டத்தில் ஓடிவிட்டு வந்தவன்போல் மூச்சு வாங்கியது. தரணிக்கு ஃபோன் செய்தேன். அவன் பேசுவது ஒன்றும் பெரும் இரைச்சலில் கேட்கவில்லை. சோர்ந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்தேன்.
ஒருவன் ஒரு இளம்பெண்ணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துவது மாதிரி அவள் கையை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது நெற்றி தொடும் முடியை விலக்கிக் கொண்டிருந்தாள். திடீரென்று அவள் கைப்பையிலிருந்து ஃபோனை எடுத்து அந்தப் பையனோடு செல்பி எடுக்க ஆரம்பித்தாள். இதுவரை புறமுதுகு காட்டி நின்றவன் இப்போது முகத்தைக் காட்டினான். அந்த உருவத்திற்கு தரணியின் முகம் இருந்தது.
“டேய் தரணி என்னடா பண்ணிட்டு இருக்க? ” என்றேன்.
“மனுஷனுங்களாடா இவனுங்க? எனக்கு முன்னாடி இவங்க ஏற டிரை பண்ணி கீழ விழப்போய்ட்டாங்க. நான்தான் காப்பாத்தனேன். ”
“யா, அகைன் எ பிக் தாங்ஸ் டூ யூ படி ” என அவனுக்கு கை கொடுத்தாள். ” டிக்கெட் புக் பண்ல. எல்லாமே ஃபில் ஆயிடுச்சு. அதான் ஜெனரல் வர வேண்டியதா போச்சு. பர்ஸ்ட் டைம். இப்படி இருக்கும்ணு தெரியாது. ஏன் லேடீஸ் கம்பார்ட்மென்ட்ல கூட ஆம்பளைங்க உட்கார்ந்திருக்காங்க” என்று கேட்டாள்.
” நீங்க பின்னாடி வந்தது தப்பு. முன்னாடி ஒரு லேடீஸ் கம்பார்ட்மென்ட் இருக்கும். அங்கதான் போலிஸ் லைன்ல நிக்க வச்சு பொண்ணுகள ஏத்தி விடுவாங்க. பொங்கல், தீபாவளி வந்துட்டா லேடீஸ் கம்பார்ட்மென்ட்லாம் கணக்கிலேயே எடுத்துக்கறது கிடையாது. அதிகாரிகளும் கண்டுக்கறது இல்ல. சமத்துவ சமுதாயமா மாறிடுவோம்” என்றேன்.
“சமத்துவம், சமத்துவம், எனிவே இட்ஸ் எ டிபரென்ட் எக்ஸ்பீரியன்ஸ் ” என்று ஏதோ புரிந்தது மாதிரி சிரித்தாள். லுக் ஹியர் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தைக் காட்டினாள். அங்கே தரணி இவளோடு சிரித்துக்கொண்டிருக்கும் செல்பி இருந்தது. பிரேவ் மேன், சேவ்ட் மை லைப் என்று குறிப்பு போட்டிருந்தாள். பிறகு பத்து மணிக்கு கிளம்புகிற ஒரு தொடர்வண்டியில் ஏழரை மணிக்கே ஏறி உட்கார்ந்து கொண்டோம். அவளும் தரணியும் அருகருகே அமர்ந்துகொண்டார்கள். சிரித்துக்கொண்டே வந்தார்கள்.
“நீங்க எப்போ படிச்சு முடிச்சிங்க”
“2014″
“ஹேய் நான் 2013. அப்படினா நான் உனக்கு அக்கா. என்ன லவ்லாம் பண்ணக் கூடாது ” என்று யாருமே இதை வரை சொல்லாத ஜோக் ஒன்றை சொல்லி விட்ட மாதிரி சிரித்துக்கொண்டிருந்தாள். எல்லாரும் வாய்விட்டு சிரிக்கிற நகைச்சுவைக்கே உணர்ச்சி காட்டாத தரணி கெக்க பிக்கே என சிரித்துக்கொண்டிருந்தான். கண்ணை மூடித் தூங்குவதுபோல் கொஞ்ச நேரம் பாவ்லா செய்துவிட்டு பிறகு உண்மையாகவே தூங்கிப்போய் ஊர் வந்து சேர்ந்தேன்.
ஏன் எனக்கு அவள் ஏறிய கம்பார்ட்மென்ட் முன்னால் நிற்கிற வாய்ப்பு கிடைக்கவில்லை? ஏன் அது எனக்கு தோன்றவில்லை? எனக்கு துயரச் சம்பவமாகவும் அவனுக்கு இனிய சம்பவமாகவும்தான் வாழ்க்கை இதை தீர்மானித்திருந்ததோ? நான் தரணி அளவிற்கு பிரேவ் மேன் இல்லைதான் என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
எனக்கு முன்னாலிருந்த வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் ஜெனரல் கம்பார்ட்மெண்டில் பாதிப்பேர் டிக்கெட்டே எடுப்பதில்லைதான். ஆனால் அந்த முயற்சியை நான் இப்போது எடுக்கத் துணியவில்லை. இந்தியாவின் வரிப்பணத்துக்கு பங்கம் வந்துவிடுமென்ற நினைப்பிலெல்லாம் இல்லை. அதற்கும் ஒரு முன்கதை இருக்கிறது. அதுவும் தரணியால்தான் நிகழ்ந்தது.
அப்போது நான் கிண்டியில் தங்கியிருந்தேன்.ஊரிலிருந்து திரும்பி ஒருநாள் அதிகாலை சென்னையை வந்தடைந்ததும் தாம்பரம் செல்லும் புறநகர் ரயிலைப் பிடிக்க நானும் தரணியும் இன்னும் இரண்டு நண்பர்களும் பார்க் ஸ்டேஷனில் நின்றுகொண்டிருந்தோம். பயணச்சீட்டு கொடுக்கும் இடத்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
“டேய் இன்னைக்கு டிக்கெட் எடுக்காம போய் பாப்பமா?” என்றான் தரணி.
எனக்கு உள்ளூர கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் வாழ்க்கையில் எப்போதும் சவாலான காரியங்களை செய்து பார்க்கிற என் கொள்கையை நினைத்துப் பார்த்தேன். கூட இருந்த நண்பர்களும் கொஞ்சம் பயத்தில் இருந்தார்கள். ” வேணாம்டா ” என்றார்கள்.
நான் ஒரு சொற்பொழிவாளரைப்போல் அவர்கள் முன்னால் போய் நின்று பேச ஆரம்பித்தேன்.
“நாம எப்பவும் டிக்கெட் எடுத்துதான் போய்ட்டு இருக்கோம். நாம யாரையும் ஏமாத்தல. இன்னைக்கு நாம ஒரு எக்ஸ்பெரிமண்ட் பண்ணப் போறோம். அந்த சூழ்நிலை எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கப்போறோம். அத நாம எப்படி கடந்துவரோம்னு புரிஞ்சிக்கப்போறோம். இத நாம ஒரு பழக்கமாக்கிக்கப் போறதில்ல. இது ஒரு அனுபவம். கமான் கைஸ்” என அவர்களை மூளைச்சலவை செய்தேன். அவர்களும் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொள்ள அடுத்துவந்த புறநகர் ரயிலில் ஏறினோம்.
அவர்கள் கொஞ்ச நேரத்தில் சகஜமாகி பேச ஆரம்பித்திருந்தார்கள். எனக்கு இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்திருந்தது. சமூகம் தீமையென்று சொல்லியிருக்கற விஷயங்களை முயல்கிறபொழுது வருகிற நடுக்கம் அதனைத் தொடர்ந்த வேகமான இதயத்துடிப்பு. அவர்கள் பேசுவது எதுவுமே எனக்கு கேட்கவில்லை. வேறொரு உலகில் தனி மனிதனாய் அகப்பட்டுக்கொண்டதுபோல் இருந்தது. முதன்முதலில் மது குடிக்கும்போது எனக்கிந்த நடுக்கம் வந்தது. அந்த மஞ்சள் நிற திரவம் ஒரு கோப்பையில் ஊற்றப்பட்டு என் முன்னால் வைக்கப்பட்டபோது நடுங்க ஆரம்பித்தேன். என் அப்பாவின் முகமும், அம்மாவின் முகமும் என் கண் முன் வந்து ” குடிக்கிறியா கண்ணு, அம்மாவோட குட்டிப்பையன் குடிக்கிறியா கண்ணு ” என்று அம்மா கேட்பதுபோல் அன்று தோன்றியது. குவளையில் இருந்த பியரை எடுத்து நடுங்கி நடுங்கி அன்று சட்டையில் ஊற்றிக்கொண்டேன். அதே மாதிரியான நடுக்கம்( பின்னாளில் எக்ஸிஸ்டென்சியலிசம்டா, தனி மனித இருப்புடா, புனித பிம்ப உடைப்புடா, கலாச்சார கட்டுடைப்புடா என நடுங்காமல் குடித்தது வேறுகதை).
அதுவுமில்லாமல் எப்போது முதல்முறையாக சவாலான காரியங்களில் ஈடுபடுகிறேனோ அப்போதெல்லாம் மாட்டிக்கொண்டிருக்கிறேன். இப்படித்தான் ஒருமுறை மிட்நைட் ஹாட் பார்க்கலாம் என்று ஃபேஷன் டிவியை பார்த்தப்பொழுது வீட்டில் மாட்டிக்கொண்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது திருடும் அனுபவத்தைப் பெறுவதற்காக பள்ளிக்கு அருகிலுள்ள கடையில் கடைக்கார அக்காவிற்கு தெரியாமல் மிட்டாய் டப்பாவிற்குள் கைவிடும்போது மாட்டிக்கொண்டேன். பிறகு எனது கணக்கு டீச்சர் வந்து காப்பாற்றி விட்டார்.
“இந்தப் பையனா? நல்ல பையன்ங்க. நல்லா படிக்கிற பையன். இவனுக்கு திருட்டு பட்டம் கட்ட பாக்கறீங்களா? ”
” மிஸ். மிட்டாய கையில எடுத்துட்டு காசு குடுக்கலாம்னு நெனச்சேன். அதுக்குள்ள திருடன்னு சொல்றாங்க மிஸ்.”
“ஏங்க, கண்கூடா பாக்கற நானு முட்டாளுங்களா? ” மிஸ்ஸைப் பார்த்து கேட்டார் கடைக்கார அக்கா
“சும்மா பேசாதம்மா, எவ்ளோ ஆச்சுன்னு சொல்லு. நான் குடுக்கறேன்”
ரயில் கிண்டியை தொட்டிருந்தது. பயணச்சீட்டு பரிசோதகர்கள் யாரும் இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரையுமே காணவில்லை. எதிரி மன்னனை புறமுதுகிட்டு ஓடச்செய்த மன்னனைப்போல் நடக்க ஆரம்பித்தேன். வெளியே செல்லும் மேம்பாலத்திற்கு அருகில் இரண்டு வெள்ளுடை வேந்தர்கள் நின்று கொண்டிருந்தார்கள். “டிக்கெட் செக்கர்டா” என்று எங்களில் ஒருவன் கத்தினான். மூன்று பேரும் மாட்டிக்கொண்டோம். தரணி தப்பித்திருந்தான்.
“தம்பி, டிக்கெட் எங்கப்பா?”
ஊரிலிருந்து சென்னை வரை வந்த டிக்கெட்டைக் காட்டினேன். ஒரு அறைக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். “நான் ஃபைன் போடறேன். நான் இன்னும் யாரையும் புடிக்கல ” என்றார் ஒருவர். ” என் கணக்குல கைவைக்காதீங்க சார். எனக்கும் இதுதான் முதல் போணி ” என்றார் எங்களைப் பிடித்தவர். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவர்கள் போல் நின்று கொண்டிருந்தோம்.
“டேய் ஃபைன் கட்ட காசில்லைனு சொல்லுடா, என்ன பண்ணிருவானுங்கன்னு பாப்போம் ” என்றான் கூடிருந்த நண்பன்.
” ஃபோன பிடுங்கிட்டு விட்ருவானுங்க. அமைதியா இருடா ” என்றேன்.
“எல்லாம் உன்னாலதான்” என்று இரண்டு பேரும் முகத்தைக் கொடூரமாக்கிக் கொண்டு கோரஸாகப் பாடினார்கள். முகத்தை வேறு பக்கம் திருப்பி சுவரில் ஊர்ந்து கொண்டிருக்கும் பல்லியை கவனிக்க ஆரம்பித்தேன். மூன்று பேரின் பெயரையும் அபராதப் படிவத்தில் நிரப்பிவிட்டு கையெழுத்து கேட்டார்கள். ஆளுக்கு இருநூற்றைம்பது வீதம் எழுநூற்று ஐம்பது ரூபாய் அபராதம். என்னிடமிருந்த இந்த அபராத ரசீதை பிடுங்கி இந்த சம்பவத்தின் நினைவாக தரணி கொஞ்ச நாள் வைத்துக்கொண்டிருந்தான். இப்போது வைத்திருக்கிறானா என்று தெரியவில்லை. (பிறகுதான் தெரிந்தது. நான் ஊரிலிருந்து ஏறும்போதே சென்னை என்பதற்கு பதிலாக கிண்டிக்கே டிக்கெட் எடுக்க வசதி உண்டென்று. பார்க் ஸ்டேஷனில் டிக்கெட்டுக்கு நிற்க வேண்டிய அவசியமும் இல்லையென்பது)
வரிசையில் முன்னால் இன்னுமொரு ஐந்து பேர் இருந்தார்கள்.வேகமாக முன் நகர்ந்தேன்.என் பின்னாலிருந்த உருவம் என் தோளைத் தட்டியது. என்ன என்பதுபோல் தலையை கீழிருந்து மேல்தூக்கிக் கேட்டேன். எதுவும் பேசாமல் கீழே கை காட்டியது. என் இரண்டு கால்களுக்கிடையே என் பர்ஸ் கிடந்தது. அவசரமாக நகர்கிறபொழுது முன் பாக்கெட்டிலிருந்து விழுந்துவிட்டதுபோல. “தேங்ஸ்” என்றேன். லிப்ஸ்டிக் போட்டதுபோல் இருந்த பல்லைக் காட்டி தலையை சொறிந்துகொண்டே சிரித்தார். பர்ஸை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.
டிக்கெட் எடுத்துவிட்டு வேகமாக நிலையத்தில் நுழைந்தேன். போகத் திட்டமிட்டிருந்த ரயில் வந்திருந்தது.முன்னால் இருக்கும் பொதுப்பிரிவு பெட்டியைப் பார்த்தேன். பேருந்தில் தொங்குவதுபோல் தொங்கிக் கொண்டிருந்தார்கள். பிளாட்பார்மின் இறுதியில் இருக்கும் பொதுப்பெட்டியை நோக்கி வேகமாக ஓடினேன். அங்கும் கூட்டமாகத்தான் இருந்தது. ஆனால் நிற்பதற்கு இடமிருந்தது. ரயில் மெதுவாக நகர ஆரம்பித்திருந்தது. எப்படியும் ஊர்ப்போகிறவரை நின்றுகொண்டே இருக்க முடியாது அப்படியே தரையிலையே உட்கார்ந்தேன். அவ்வளவு கஷ்டமாகவெல்லாம் இல்லை.
கழிவறையின் வாசலின் அருகில் உட்கார்ந்து வந்த அனுபவமும் எனக்குண்டு. ஒவ்வொருவரும் ஒண்ணுக்கோ, ரெண்டுக்கோ போகும்போது எழுந்துகொள்ள வேண்டும். சில வேளைகளில் அந்த இடத்தைப் பிடிப்பதற்கே பெரும்போட்டி நடக்கும். கழிவறையில் உட்கார்ந்து பயணம் செய்திருக்கிற நண்பர்களும் எனக்குண்டு. அதையெல்லாம் பார்க்கிறபொழுது இன்றைக்கு கிடைத்திருக்கிற இடம் கொஞ்சம் வசதியானதுதான். ஒருகாலத்தில் நான் இப்படி உட்காருபவனே அல்ல. தரணிதான் இதையும் எனக்கு பழக்கினான். முதல்முறையாக சென்னைக்கு வருகிறபொழுதும் இதே போன்றதொரு கூட்டம். இடமில்லாமல் நின்று கொண்டிருந்தேன். ” டேய் பக்கத்து பொட்டியில எடம் இருக்கு வா” என்று கூட்டிப் போனான். அங்கே கொஞ்சம் தரைப்பகுதியை பிடித்துவைத்துவிட்டு சென்னைக்கு மிக அருகில் இருக்கும் இடத்தை வாங்கிவிட்டவன்போல் என்னைப் பார்த்தான்.
“டேய் இங்க எப்படிடா உட்காரறது?” என்று கேட்டேன். ” ஓ பெரிய இவரு. சீட்டுலதான் குண்டி அமருமோ” என்றான். பிறகு அவன் மட்டும் உட்கார்ந்துகொண்டான். இதே இரவில் படுக்கை வசதி இருக்கிற பெட்டியில் இருப்பவன் எப்படி தூங்கிக்கொண்டிருப்பான்? தூங்கிக்கொண்டிருப்பானா இல்லை குளிர்சாதன படுக்கை வசதி கொண்டவனை நினைத்துக்கொண்டிருப்பானா? எனக்கு தூக்கம் வந்தது. கால் வலித்தது. தரணியை கொஞ்சம் நகரச் சொல்லிவிட்டு தரையில் உட்கார்ந்துகொண்டேன். அன்றிலிருந்து தரை பழகிப்போனது.
எனக்கு வலமும், இடமும் வட இந்தியர்கள் அமர்ந்திருந்தார்கள். ரயில் முழுக்க அவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. லக்கேஜ் வைக்கும் இடங்கள்தான் பொதுப்பெட்டியாளர்களின் அப்பர் பெர்த். கம்பிகளை குறுக்கும் நெடுக்கும் வைத்து அமைக்கப்பட்ட லக்கேஜ் வைக்கும் இடத்தில் நிறைய நேரம் அமர முடியாது. ஆனால் மரப்பலகையால் அமைக்கப்பட்ட லக்கேஜ் வைக்கும் இடங்கள் இருக்கிற ரயில் கிடைத்தால் கொண்டாட்டம்தான். சிறிய லக்கேஜ் வைக்க அமைக்கப்பட்டிருக்கிற பகுதியில்கூட படுத்து தூங்கிக் கொண்டிருக்கிற ஒருவரைக் காண முடியும்.
“நம்மாளுகளுக்கு வேலை செய்ய விருப்பமில்ல சார். உடல் உழைப்பே இல்ல. கவுரவக் குறைச்சல். எல்லாரும் கம்யூட்டரத் தட்டப் போயிட்டா யார்தான் மத்த வேலையைச் செய்யறது. இப்போ பாருங்க. கேரளா, தமிழ்நாடு முழுக்க இவங்க ஆதிக்கம்தான். சம்பளமும் கம்மியா குடுத்தாப் போதும்” என்றார் ஒருவர்.
” கூடிய சீக்கரம் ஒரு எம்.பி சீட்டோ எம்.எல்.ஏ வோ கேட்ருவாங்கன்னு சொல்லுங்க” என்றார் இன்னொருவர்.
“கேட்டாலும் கேட்பாங்க. அவனுங்க சொந்த ஊர் மாதிரில நம்ம ஊர்ல அராஜகம் பண்றானுங்க”
“அன்னைக்கு ஒருத்தன் வந்து என்கிட்ட ஹிந்தில டைம் என்னனு கேட்கிறான் சார். அங்க போய் தமிழ்ல கேட்டா விட்டுப்புடுவானோ. காலக்கொடுமை சார். இதுல கஞ்சாவோ, ஹான்ஸோ எதோ ஒரு கருமத்தப் போட்டுகிட்டு அது ஒரு நாத்தம், குளிக்க மாட்டானுங்க அது இன்னொரு நாத்தம்.”
இவர்கள் என்ன பேசுகிறார்கள் என என் இரு பக்கமிருந்த வட இந்தியர்களும் வெறித்துப் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் தூங்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திலேயே சுற்றி நடப்பது என்னவென்று தெரியாத தூக்கத்தில் விழுந்து ஒருவன் குறட்டை விட ஆரம்பித்தான். ஒருவன் என் தோளில் சாய்ந்து கொண்டான். எழுப்பி விடலாமா என நினைத்தேன். எனக்கும் தூக்கம் வந்தது. மெதுவாக கொஞ்சம் பின்னால் நகர்ந்து ஒருவர் மட்டும் அமரும் இருக்கையின் பக்கவாட்டில் முதுகை சாய்த்து தூங்க ஆரம்பித்தேன்.
அதிகாலையில் ஊர் வந்து சேர்ந்தேன். வட இந்தியர்களில் ஒருவனுக்கு இடம் கிடைத்திருந்தது. இன்னொருவன் பல் விளக்கிக்கொண்டே என்னைப் பார்த்து சிரித்தான். ரயிலை விட்டு இறங்கினேன்.சூரிய வெளிச்சம் முகத்திலடித்தது. பாட்டிலில் இருந்த நீர் எடுத்து முகம் கழுவினேன். கொஞ்சம் உற்சாகமாக உணர்ந்தேன். வெளியே செல்லும் வழிநோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
வெளியே செல்லும் படிக்கட்டின் அருகிலிருந்த காவலர் என் பயணச்சீட்டை வாங்கி சரிபார்த்தார். படிக்கட்டில் ஒரு நொடி தாமதித்தாலும் அடுத்த படிக்கட்டு உடைந்துவிழுந்து விடுமோ என்று அச்சப்படத்தக்க வண்ணம் பலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் தூக்கிக்கொண்டு ஓடும் குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது. வெளியே வந்து வீட்டிற்கு போக பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்தேன். டீ குடிக்க வேண்டும்போல் இருந்தது. டீ குடித்துக்கொண்டே கடையின் தொலைக்காட்சியில் ஓடும் செய்திகளைப் பார்த்தேன். இருநூறு இடங்களை வெல்வோம் என்ற எதிர்கட்சித் தலைவரின் பேச்சு பயத்தைக் காட்டுகிறதா? முப்பத்து நான்கு இடங்களுக்கு என்ன ஆனது? என்ற விவாதம் இன்றிரவு ஒளிப்பரப்பாவதாக காட்டிக்கொண்டிருந்தது. டீ கொஞ்சம் கசப்பாக இருந்தது. “அண்ணா , கொஞ்சம் சர்க்கரை ” என்றேன். கொஞ்சம் சர்க்கரையைப் போட்டு ஸ்பூனில் இரண்டு கலக்கு கலக்கினார். சர்க்கரை முழுவதும் டீயில் அழிந்துவிட்டிருந்தது. இப்போது இனிப்பாக இருந்தது.எனக்கு டீ பிடிக்கவேயில்லை.டீயைக் கீழே ஊற்றினேன். காசு கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். என் ஊருக்கான பேருந்து தூரத்தில் வந்துகொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. மழையில் நனைய ஆரம்பித்தேன். பேருந்துகள் போய்கொண்டே இருந்தது. மழை நிற்கவேயில்லை .நானும் நனைவதை நிறுத்தவேயில்லை. இந்தப் போட்டியில் மழை ஜெயிக்க வேண்டும் என்றெனக்கு ஆசையாய் இருந்தது .

( செப்09 , 2017 மலைகள் இணைய இதழில் வெளிவந்த சிறுகதை)