டிசம்பர் 03, 2017

சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்

தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்த தலைமுறையின் வாழ்வு கொஞ்சம் பரிதாபகரமானதுதான். ஆனால் அதே வேளையில் அதற்கு முன் பிறந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. பொருள் சேர்த்தல் என்பது அந்தந்த சூழலுக்கேற்ற பேராசை மனப்பான்மையுடனே இருந்திருக்கிறது. ஆனால் தனியார்மய, உலகமயத்தின் விளைவுகளால் இந்தப் பேராசை அதன் அதியுச்சத்தை அடையும் காலம் தொண்ணூறுகளாக ,இரண்டாயிரமாக இருந்திருக்கிறது. மென்பொருள் துறையின் வளர்ச்சியும் அது உருவாக்கும் புதிய பணக்காரர்களும் அனைவரையும் பிரமிக்க செய்ய வீதிக்கொரு பொறியியல் கல்லூரி துவங்கப்படுகின்றது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையைவிட அதிகமாக ஆட்கள் கிடைக்க, சம்பளம் குறைகிறது. தரமற்ற கல்வியின் மூலம் உருவாக்கப்படும் மாணவர்களைத் தேர்வு செய்ய நிறுவனங்கள் தயங்குகிறது. வேலை இருந்தாலும் தகுதியின்மை காரணமாக நிரப்ப ஆள் இல்லாததால் வேலையின்மை உருவாகிறது. வேலையின்மையின் காரணமாக மன உளைச்சல் ஏற்படுகிறது. ஒட்டுமொத்த சமூக வெறுப்பாக இது திரும்புகிறது. அது அமைப்புகளின்மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. வாழ்வின் மீதும், ஒவ்வொரு தனிமனிதரின்மீதும் இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் எழுதவரும் ஒருவரின் எழுத்து இதன் பாதிப்புகளைக் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அது லட்சியவாதங்களை அலட்சியம் செய்கிறது. " முற்றொழுங்கின் மீதான கற்பனைகள், நூறு சதவீதத் திறன் அடைவதற்கான போலியான லட்சியவாதங்கள் இளவயதில் ஏன் கொடுக்கப்படுகின்றன? நான் அடையாததை என் சந்ததி அடையட்டும் எனும் எளிய மூதாதையின் எண்ணமா அது?" என்று அது கேள்வி எழுப்புகிறது .அது வெறும் எண்ணமல்லாமல் தான் சார்ந்த அமைப்பொன்றின் உறுப்பினரின் செயல்களை தனக்கானதாகக் கொண்டு பெருமை அடைவதாகவும், அவரைப் பயன்படுத்தி பொருளியல் தேவையை பூர்த்தி செய்துகொள்வதாகவும், ஒருவகையான பயன்படுத்திக் கொள்ளலாகவும் , போலித்தனமாகவும் எஞ்சுகிற பொழுது அந்த அமைப்பு தேவையா என்ற எண்ணம் எழுகிறது.

ஆக ஒட்டுமொத்தமாக குடும்ப உறவுகள் பொருளியல் சார்ந்ததாக மாறிவிட்ட காலத்தில் பெற்றவர்கள் குழந்தைகளுக்கு செய்யும் செலவை ஏன் கணக்கு வைத்து வசூலிக்கக்கூடாது என நாவல் கேள்வி எழுப்புகிறது. பிறப்புறுப்பில் விந்தை செலுத்தும் எளிய செயல்தானே காதல் என்று கேட்பதற்கு விடையாகவே சக்தி என்ற கதாபாத்திரத்தை படைத்து அருணாவில் விந்தை செலுத்துகிறது. அதற்கு முரணியக்கமாக குணாவை உலவ விடுகிறது. இருத்தலிய, அபத்தவாத கூறுகள் இந்நாவலில் தொடர்ந்து வருகின்றன.அறம் என்பது என்ன? அது அவரவரை பொறுத்ததுதானே என்ற கேள்வி எழுகிறது.

நிழலின் தன்மையாக ஒளிர்தல் இல்லாத பட்சத்திலும் அப்படி மாற்றிக்கொண்டு வாழ வேண்டியதன் தேவை இங்கு இருக்கிறது. அந்த நடிப்புதான் நாவலில் வரும் சுரேஷின் தந்தை இறந்தபிறகு சுரேஷ் அக்காவையும், அண்ணனையும் கட்டி அழுவதும் , சக்தி அருணாவிடம் காட்டுவதும், அருணா சக்தியிடம் காட்டுவதும், 
அருணா சந்திரசேகரிடம் காட்டுவதும், மீனா குணாவிடம் காட்டுவதும் , ஆனால் இயல்பென்ற ஒன்று எது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இது இயல்பா என்றெண்ணும்போதே அது இயல்பில்லாமல்தான் போய்விடுகிறது. இதை திட்டமிடாத நடிப்பென்று சொல்லலாம். ஆனால் சக்தி இளைஞர்களிடத்தில் சொற்பொழிவாற்றிவிட்டு காரில் சென்று சிரிக்கும்போது அது திட்டமிட்டதாகிறது. இருந்தாலும்,  சரி தவறுகளை நோக்கி இதை எடுத்துச்செல்லாமல் தனிமனித இருத்தலின் தேவைக்கான கூறாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட விளைவென்பதே சமூகத்தின், உறவுகளின் கூட்டு மனப்பான்மையின் மீதான நம்பிக்கையின்மையில் உருவானதாக இருக்கிறது. இப்படித்தான் வாழ முடியுமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அதுதான் சுரேஷ் பிரதீபை அத்தனை ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளே என சொல்ல வைப்பதாய் தோன்றுகிறது. இதனால் அறம் என்பதே கேள்விக்குறியாகிறது. அறம் என்பதே இல்லையென்பதைத்தான் இது ஆமோதிக்கிறது.

மனித அக உணர்வுகளை எழுதுவது சுரேஷ் பிரதீப்பிற்கு இயல்பாக கைகூடி வருகிறது. அதுவே அவரது பலம் என்று தோன்றுகிறது. ஆனால் மற்ற இடங்களில் அவரது நடை சற்று மாறுபட்டு மிகவும் எளிய நடையாகிவிடுகிறது. இந்த நாவலுக்கு மையம் அமைந்துவிடக்கூடாதென்றுதான் இந்த வடிவத்தை அவர் தேர்ந்தெடுத்தாரென்று தோன்றுகிறது. காலத்தை முன்பின்னாகப் போட்டாலும் தவிர்க்கமுடியாமல் மையம் உருவாகிவிடுகிறது. இந்த வடிவமே கதாபாத்திரங்கள் யார் எவரென புரிந்துகொள்வதில் சிக்கலை ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது. நாவலின் முதல் பாதியில் இருக்கும் சுவாரசியம் கிராமத்தின் கதைகளை சொல்ல ஆரம்பித்த பிறகு கொஞ்சம் குறையத்தான் செய்கிறது.

"துயர்கொண்டு அழுவதற்கு முந்தைய கணம் உதடுகள் துடித்துக் கண்கள் கலங்கி முகத்தசைகள் இழுபடுவதைவிடக் கவர்ச்சியான தோற்றம் பெண்ணுக்கு வாய்த்துவிட முடியாது" என்ற வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிறகு ஒரு அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதையில் வரும் முழுமை குறித்த வரிகள் அருமையாக வந்திருக்கிறது

" கால் வளைந்து உடல் சூம்பி முலை வற்றி முகம் சுருங்கி நிற்பவள் ஓரழகு.  உடல் நிமிர்ந்து விழி சரிந்து தோள் நிமிர்த்தெழுபவள் மற்றோரழகு.

சீழ் ஒழுகி உடல் கிழிந்து தோல் சுருங்கி பற்களின்றி சிரிப்பவளே. முகம் பொலிய உடல் ஒசிய முலை நிமிர விரைவடியில் நடப்பவளே

குறையென ஏதுமுண்டோ பெண்ணில் முழுமை முழுமை முழுமை முழுமையென ஏங்குகிறதடி நெஞ்சு"

பிறகு பாம்பு மாத்திரையை உவமையாக்கும் வருணனைகள் . "பல நூறு பாம்பு மாத்திரைகளை ஒன்றாக வைத்துக் கொளுத்தியது போல, தடித்துக் கருத்த பனைமரங்கள் அந்தக் குறுகிய சாலையை நோக்கிக் குனிந்திருந்தன. வெகு நேரம் உற்றுப் பார்த்தால் மேலே வந்து விழுந்து விடும் என்ற பயத்தினை ஏற்படுத்தக்கூடியவை. நிறைந்த கருமையில் எச்சில் துப்பியது போல, நாங்கள் பயணித்த பேருந்து அந்தச் சாலையில் ஒளியையும் ஒலியையும் கலங்கடித்துச் சென்றது.பேருந்துக்கு வெளியே இருள் அடர்த்தியாகத் திரண்டிருந்தது. முழித்துப் பார்க்கும் கண்களென இடையிடையே தென்பட்ட குடிசைகளின் வெளிச்சம் என்னை அதிரச் செய்து கொண்டிருந்தது. வெளிச்சங்கள் தென்படாமலாகி அடர் இருள் சூழ்ந்துகொண்டபோது தனித்து விடப்பட்டவன் போல உணர்ந்தேன்" 

"ஒன்றைச் செய்து முடிக்கும்போது அது எவ்வளவு அற்பமானதெனினும் அல்லது எவ்வளவு உயர்வானதெனினும் மனதில் எழும் நிம்மதி ஒன்றுதான் போல" என்று சுரேஷே சொல்வதுபோல ஒளிர்நிழலை முடித்தபிறகு ஒரு நிம்மதியையும், விடுபடலையும் அவர் உணர்ந்திருப்பாரென்று எண்ணுகிறேன். பொதுவாகவே வயது குறைவானவர்களின் புனைவைப் படிக்கும்போது பெரியவர்களுக்கு எழும் எண்ணம் " இவன்லாம் என்ன சொல்லிருக்கப் போறான்" என்பதுதான். பெரியவர்கள் என்றால் வயதானவர்களை மட்டும் எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை. இருபத்து ஐந்து வயதில் இருப்பவர்களுக்கு இருபது வயது உள்ளவரே ஒண்ணும் தெரியாத சின்னப்பையன்தான். ஆனால் நாற்பது வயதுள்ளவர் இருபத்தி ஐந்து வயதுள்ளவரை நோக்கி இதைச் சொன்னால் இருபத்தி ஐந்து வயதுள்ளவர் பொறுத்துக்கொள்ளமாட்டார். ஆக மனித இயல்பாக, அகங்காரமாக மாறியிருக்கும் இந்தத் தன்மைகளைக் கடந்து சுரேஷ் பிரதீப்பை எவரும் வாசிக்கலாம். வயது வெறும் எண் என்பதை நிரூபிப்பவர்களில் சுரேஷும் ஒருவர். சக வயது இளைஞரான சுரேஷ் பிரதீப்பை கொஞ்சம் பொறாமையோடு பார்க்கும் அதே நேரத்தில் அவருடைய இந்த முதல் முயற்சிக்காக அவரை மனதார வாழ்த்துகிறேன். ஒரு நம்பிக்கைக்குரிய படைப்பாளியாக அவரை நிச்சயம் குறிப்பிடலாம்.