ஜனவரி 23, 2018

டோலிக்கு

அன்புள்ள டோலிக்கு,

உன்னை இனிமேல் முன்புபோல் பற்றிக்கொள்ளவோ, உன்னோடு அபரிமிதமான அன்போடு ஒட்டிக்கொள்ளவோ முடியாதென்கிற ஒரு கணத்தில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கணம் எப்பொழுதாவது வந்துவிடுமென நம் இருவருக்கும் தெரியும். இது இவ்வளவு சீக்கிரம் நிகழ்ந்துவிட வேண்டுமென்றுதான் உண்மையில் உள்ளூர விரும்புகிறோமா? எனக்கு நீயும், உனக்கு நானும் சலித்துவிட்டோமா? இந்த நிகழ்வுகள் எல்லாமே நாம் திட்டமிட்டு நிகழ்த்திக் கொள்பவைகள்தானா? இன்னமும் உன்னைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்கிற எனது எண்ணம்கூட ஒருவகை பாவனைதானா? ஒருவேளை கஷ்டப்பட்டு தக்கவைத்தாலும் அது போலித்தனமாகத்தான் இருக்குமா? எனது குறுந்தகவலுக்கும் அதற்கான உனது பதிலுக்கும் இடையில் பதுங்கியிருக்கும் அன்பெனும் கலையமைதி இனிமேல் நமக்குள் நிகழாதா?  ஒவ்வொரு உறவிலும் நாம் கடைசியாகக் கடந்துசெல்ல வேண்டிய இடம் இதுதானே? இதைக் கடந்துவிட்டால் நீ என்னைவிட்டு உன் விருப்பப்படியே எளிதாகச் சென்றுவிடுவாய். ஒருவேளை என் விருப்பமும் அதுதானோ? பிறிதொருநாள் நீண்டதூரப் பயணத்தில் எப்பொழுதே சந்தித்துக்கொள்ளும் திசையறியா சிற்றெறும்புகள்போல நாம் இரண்டு வார்த்தை பேசிக்கொள்ளலாம். அவ்வளவுதானே எல்லாம்? உன்னை விட்டுப்போனவர்கள் எப்படி அவ்வளவு எளிதில் எல்லாவற்றையும் மறந்தார்கள் என்று கேட்கிறாய். ஆனால் நாமே எல்லோருக்கும் இதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம் அன்பே. நம்மை நாம் கவனித்துக்கொள்ளும் தேவையை சுயநலம் என்று சொல்லமுடியாதென்றாய். ஆம். நீ அதை எனக்காகவும் விட்டுத்தர வேண்டாம் என்றுதான் நானும் சொல்கிறேன். நீ நீயாகவே இரு. ஆனால் உலகம் முழுக்க மனிதர்கள் செய்துகொண்டிருப்பது இதுதான் என்ற தெளிவு உனக்கு இருக்குமேயானால் உன்னாலும் உன்னைக் கைவிட்டவர்களை வெகு எளிதில் கடந்துவர முடியுமென்று நினைக்கிறேன்.

காதலை நான் Complicate ஆக்குவதாய்ச் சொல்கிறாய். உண்மையில் நீதான் நான் புரிந்துகொண்டிருக்கிற காதல் என்னவென்று புரியாமல் Complicate செய்துகொண்டிருக்கிறாய். என் காதலை Define செய் என்கிறாய். ஒருவரைக் காதலிக்க ஒவ்வொரு பெண்ணுக்கும்/ஆணுக்கும் ஓராயிரம் காரணங்கள் உண்டு. அழகாக இருக்க வேண்டும், அறிவாக இருக்க வேண்டும், சிகப்பாக இருக்க வேண்டும், Body builderஆக இருக்க வேண்டும், உயரமாக இருக்கவேண்டும், பணம் இருக்க வேண்டும், bike இருக்க வேண்டும், Car இருக்க வேண்டும், வீடு இருக்க வேண்டும், நல்ல வேலை இருக்க வேண்டும் என்று இந்தப் பட்டியலைப் போட்டுக்கொண்டே போகலாம். இந்தப் பட்டியலில் உனக்கு விருப்பமானதொன்றில் நான் இடம்பெறாமல் போகலாம். அதனால் நீ என்னிலிருந்து விடுபட நினைக்கலாம்.நீ மகிழ்ச்சியாக இருக்க இந்தப் பட்டியல்கள் ஒரு நீண்டகால உறவுக்கு கண்டிப்பாக உனக்கு தேவைப்படவும் செய்யலாம். ஆனால் இந்தக் காதலை ஒரு நீண்டகால உறவாக நான் வரையறுக்கவே இல்லை. இந்தப் பட்டியல்களில் இடம்பெறவோ, உனக்கொரு பட்டியல் போடவோ நான் விரும்பவில்லை. உண்மையில் என் பட்டியலின் பல தேர்வுகளை நீ பூர்த்தி செய்யவே இல்லை. இந்த நொடியில் நான் உன்னைக் காதலிக்கிறேன். அவ்வளவுதான் அது. எந்தவகையிலும் என் பொருளாதாரச் சிக்கல்களை உன்மேல் சுமத்தி உன்னைத் துன்புறுத்துவது அல்ல அது. உன்னை விடாமல் பின்தொடர்வது அல்ல அது. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றோ, உன்னோடு படுக்கவேண்டும் என்றோ ஆசைப்படுவதல்ல அது. உன் உடல்மேல் எனக்கு ஆசையே இல்லையா என்றால் கண்டிப்பாக உண்டு. ஆனால் அதை அடைவது மட்டுமே என் தலையாய நோக்கமல்ல. தனித்திருக்கும் ஒருவன் எதிர் பாலினத்திடம் கொஞ்சமே கொஞ்சம் அன்பைக் கோரி நிற்பதுதான் அது. இந்த வெறுமையைப் போக்க கொஞ்சமே கொஞ்ச காலம் ஒரு துணையாக வருவாயா என்று கேட்பதுதான் அது. அதை ஏன் உன்னைப் பார்த்துக் கேட்கிறேன் என்றால் இந்த நொடியில் உன்னைத்தான் பிடித்திருக்கிறது என்பதால்தான். இது இப்படியே நீடிக்கும் என்று திட்டவட்டமாக நான் சொல்லவே இல்லை ( ஒருவேளை நீடிக்கலாம்). ஏன் காதலை நீண்டகால நோக்கிலேயே பார்க்கிறாய்? ஏன் அதன் இறுதி முடிவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு நிகழ்காலத்தைச் சிதைக்கிறாய்? எதிர்பாலினத்திடம் மட்டும் ஏன் இந்த ஈர்ப்பு என்று ஹார்மோன்களைத்தான் கேட்கவேண்டும். ஆண்களின் அன்பு எனக்குப் போதுமானதாக இல்லை. பெண் அன்புதான் பெரும்பாலான ஆண்களுக்கு ( அல்லது எனக்கு) இயல்பான தேவையாய் இருக்கிறது. இதைத் தரமுடியாது என்று மறுப்பதற்கான எல்லா உரிமையும் உனக்கிருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். அன்பை நான் இப்பொழுது உன்னிடம் கேட்கவும் இல்லை. உன்னிடம் அன்பைக் கொடு, அன்பைக் கொடு என்று வற்புறுத்தி துன்புறுத்தியதன்வழி நானே அதைக் கொன்றுவிட்டேன். இதை எழுதுவதன்மூலம் நான் உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடந்து சென்றுகொண்டிருக்கிறேன்.

ஆண், பெண் இவர்களில் யார் குற்றவாளி என்றால் யாரும் இல்லைதான். உன்னைக் கைவிட்டவர்கள் எல்லாம் ஆண்கள் என்றால் என்னைக் கைவிட்டவர்கள் எல்லாம் பெண்கள். காதலற்றுப் போன மனித மனத்தின் முன்னால் சக மனிதன் கையேந்துவது எவ்வளவு மோசமான ஒரு நிகழ்வு? இத்தனைக்கோடிப்பேர் இங்கிருந்தும் ஒற்றை மனதொன்றில் இடம்கிடைக்காததற்காக எப்படியெல்லாம் வருந்துகிறோம்? மனித அகங்காரத்தை, அடைதலின் வெறியை அன்பே நாம் எங்கு சென்று தொலைப்பது? நாம் கேவி நிற்பதைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஒருவனோ,ஒருவளோ தன்னைக் காத்துக்கொள்ளத்தானே நினைப்பார் இல்லை தன்னை நமக்காக அழிப்பாரா? இந்த விளையாட்டை மனிதன் இருக்கிறவரை இப்படித்தான் விளையாடி ஆக வேண்டும். இதில் யாராவது ஒருவர் தோற்றுத்தான் போக வேண்டும்.

எனக்காக இனிமேல் புத்தகம் படிப்பாய் என்றாய். அடுத்தமுறை சந்திக்கும்போது புத்தகம் கட்டாயம் கொண்டுவா என்றாய். இனிமேல் என்றாவது சந்திப்போமா என்றே தெரியவில்லை. மணல்வீடு கட்டும் உன் சிறுபிள்ளை மனதை இனி என்று ரசிப்பேன்? அது என் மணல்வீட்டை உடைக்கும் அளவுக்கு இன்று திடமாகிவிட்டதென்கிறாயா? தைரியமான பெண் என்ற பிம்பத்தை எல்லாம் உடைத்து உன் கதைகளை சொல்லி அழும் அந்த அழுவாச்சிக் குழந்தையின் குரலை இனி நான் என்றாவது கேட்பேனா? இனி எப்போதாவது என்னை டோலா என்று அழைப்பாயா? விளக்கை அணைத்துவிட்டுப் போ என்று சொல்லிவிட்டு ஒரு தலைவன் செத்துப்போனானாம். அதைப்போல 'போயிட்டு வரேன் டோலா' என்று சொல்லிவிட்டு உனக்காகப் பற்றி எரியும் என் மனவிளக்கை அணைத்துவிட்டுப் போ டோலி. பிறகு மெழுகுவர்த்தி ஏற்றி மீண்டும் என்னை எரியவைக்க வருபவர்களுக்காக நான் காத்திருப்பேன் உன்னைப் போலவே.