செப்டம்பர் 22, 2020

ரியா

"ஜஸ்பிரித் பும்ரா" என்று ரியா உச்சரித்தபொழுது நான் அவளைப் பார்த்து மிக மெலிதாக புன்னகைத்தேன். இம்முறை நவீன் வேகமாக ஓடிவருவதைக் கைவிட்டு மெதுவாக நடந்துவந்து, பின் மெதுவாக ஓடி ஒரு சுழற்பந்துவீச்சாளரை பிரதி செய்தான். ரியா சற்றும் தாமதிக்காமல் "ஷேன் வார்ன் தான?" என்றாள். நான் இம்முறை அவளை ஆச்சரியமாகப் பார்த்தேன். வெற்றிப் பெருமிதத்தில் அவள் கண்கள் ஒளிகொண்டன. அவள் வாய்விட்டு சிரிக்க சிரிக்க, ரத்தம் அவள் முகத்தில் அதிகமாய் படர்ந்து பரவி அவளை இன்னமும் சிகப்பாக்கியது. 

அதே சிரிப்போடு பிரவீனின் தோளில் கைபோட்டு நிற்கும் அவளது புகைப்படத்தை ஒருநாள் பார்த்தபோது இரண்டு விதமான உணர்வுகள் எனக்குள் எழுந்தன. அவளது மகிழ்வான வாழ்வுக்காக நானும் மகிழ்ந்துகொள்கிற உணர்வு ஒரு பக்கம். அவளது மகிழ்வென்பதே ஒரு மாயத் தோற்றமென அமைந்து அது ஒரு காட்டிக்கொள்ளலாக மட்டுமே எஞ்சுகிறது என்ற உணர்வு இன்னொரு பக்கம். 

என்னுடைய உண்மைகள் வெல்லவேண்டுமென்கிற உந்துதல்கள் தொடர்ந்து எழுகின்றன. ஒருவரை தொடர்ச்சியான கேள்விகளுக்கு உள்ளாக்கி, அவரை நிலைகுலையச் செய்து, என் உண்மைகளை நோக்கி அவர்களை கைபிடித்து அழைத்துவந்து, என் உண்மைகளுக்கு முன் அவர்களை மண்டியிடச் செய்யும் ஆவல். வென்றுவிட்டதான ஒரு திருப்தி. அறிந்துகொண்டதான ஒரு ஆசுவாசம். 

ரியா- பிரவீன் திருமணத்துக்கு என் நண்பர்களில் மிக சொற்பமானவர்களே சென்றிருந்தார்கள். அன்று அவளுக்காக மகிழ்ந்துகொண்டிருந்த வேளையில், இந்த உறவு அவர்களுக்குள் கூடிய சீக்கிரம் சலித்துவிட வேண்டுமென்கிற ஆசையும், எல்லா உறவும் ஒரு கட்டத்தில் சலித்துவிடும் என்கிற உறுதியான எண்ணமும் ஒரு கணம் மனதில் எழுந்து பின்னர் அடங்கியது .

அடங்கியது என்பது ஒரு பொய். ஒருவகையான மனப் போராட்டம். இதை சிந்திக்கலாம், இதை சிந்திக்கக்கூடாது, இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது என வகுக்கப்பட்டிருப்பவைகளுக்கு இடையிலான முட்டி மோதல்கள்.உறுதியாக சிலவற்றை சொல்லியதான பாவனைகளுக்குப் பிறகு அவை உண்மையிலேயே சரிதானா என்கிற மனக்குழப்பம். சந்தேகம். இருப்பினும் எனது உண்மைகளை நிரூபித்தாகவேண்டிய பரிதவிப்பு. 

பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் 'புலி நடமாடும் பகுதி' என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கும் இடத்தில் புலியைப் போன்று உறுமிவிட்டு தன் கைகளால் எங்களை பிராண்டுவதுபோல் பாவனை செய்யும் ரியா. "தூரத்துல இருந்து பாத்தாதான் காமெடியா இருப்பேன், கிட்டத்துல வந்து பாத்தா டெரரா இருப்பேன்டா, டெரரா" என அவளை கலாய்த்தது. நினைவுகள் முன் அறிவிப்பு அற்ற புயலென தாக்குகின்றன. 

நீண்ட கால உறவில் ரியா அடையும் மகிழ்ச்சி ஒரு பாவனை என்ற எனது 'உண்மை கண்டறிந்த சோதனை'யின் துல்லியத்தன்மை குறித்த சந்தேகம் என்னில் வலுபெறுவதும், பின் வலுவிழப்பதுமான எண்ணங்கள் தொடர்ச்சியாக நடந்தேறுகையில், பல்வேறு விதமான உண்மைகள் இருக்கக்கூடுமோ என்பதை எதிர்கொள்ளமுடியாத என் மனம் தொடர்ந்து என்னிடம் இருக்கும் உண்மைகளை மட்டுமே கெட்டியாக பிடித்துக்கொண்டு தன்னை பலியிட தீர்மானிக்கிறது. 

சில உண்மைகளுக்கு திரும்பவும் சென்றுசேர முடியாததன் மூலம் உண்டாகும் வலி, அவை உண்மைகளாகவே இருக்கமுடியாதென்கிற எண்ணத்தை விதைத்து நாம் நிற்பதே சரியான பாதை என முடிவெடுத்துக்கொள்ளச் சொல்கிறது. சுருள் சுருளாக பல பாதைகள் தென்படுகின்றன. என் பாதைக்கு என்றேனும் ரியா வரக்கூடும், ஆனால் ரியாவின் பாதையை நான் ஒருபோதும் இனி சென்றடையமுடியாது என்றொரு தீர்க்கமான எண்ணம் என்னில் நிறைந்தபிறகு, என் பாதைக்கு ரியா வந்துவிடக்கூடாது என்கிற பரிதவிப்பும், கண்டிப்பாக வந்துவிடவேண்டுமென்கிற குரூரமும் ஒருசேர எனக்குள் எழுகின்றன. 

கல்லூரியின் இன்டஸ்ட்ரியல் விசிட்டின்போது " இனி ஜல்சா பண்ணுங்கடா, குஜாலா ஜில்பா காட்டுங்கடா" என்ற பாடலுக்கு ரியா வெட்கப்பட்டு ஆடியபொழுது இடம் மாறிக்கொண்ட எங்கள் பார்வைகள். பிறகு அவள் திடீரென மயங்கி விழுந்தபொழுது ஏற்பட்ட பரிதவிப்பு. "ஓவர் சரக்கா ரியா". திரும்பவும் அதே சிரிப்பு, அதே சிவப்பு. 

வேறு ஒரு பையனோடு ரியாவை இணைத்து நண்பர்கள் கலாய்க்கும்போது உள்ளுக்குள் எழும் கோபத்தை மறைத்து வெளிப்படும் என் புன்னகை. சில நேரங்களில் அவளே அந்த பகடிகளுக்கு சிரித்துவிடும்பொழுது எனக்குள்ளும் தொற்றிக்கொள்ளும் அனிச்சையான புன்னகை. 

"உன் லவ் பத்தி சொல்லேன். எப்டி ஸ்கூல்ல இருந்து இன்னமும் ஒருத்தரையே இவ்ளோ இயர்ஸா லவ் பண்ணிட்டே இருக்க"

" டெக்ஸ்ட்ல அத முழுசா சொல்லிட முடியாது, நேர்ல சொல்றேன்" 

" யாரு ப்ரோபோஸ் பண்ணா"

" அவன்தான். நான் முடியாதுன்னு சொன்னேன். ஆனா அவன் திரும்ப திரும்ப சொல்லி சொல்லி......"

சில பாதைகளுக்கு திரும்பி போவதற்கான நுழைவு அட்டைகள் நம்மிடம் இல்லை (அல்லது) விருப்பம் இல்லை. சுயம் தன்னை 'தான் இதுதான்' என ஒருவாறாக வடிவமைத்தபின்பு திரும்பி போவதென்பது சுய அகங்காரத்தின் மீதுவிழும் அடியாக இருக்குமென்றால் திரும்பிப்போகும் விருப்பத்தை எவ்வளவு தூரம் அனுமதிக்க முடியும்? இது கட்டமைக்கப்பட்ட 'நானா' அல்லது இயல்பாய் சென்றுசேர்ந்த 'நானா'? இந்த விருப்பச் செயல்பாடுகள் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக செல்லுபடி ஆகக்கூடியதா?

"இந்த மழைத் துளிகளை நீ கையில் ஏந்துகையில் எவ்வளவு மழைத்துளிகளை நீ தவற விடுகிறோயோ அந்த அளவுக்கு  நான் உன்னை நேசிக்கிறேன்" எங்கிருந்தோ கிடைத்த ஒரு சுவாரசியமான ஃபார்வேர்ட் மெசெஜ். அதை ரியாவுக்கு அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் பேச ஆரம்பித்தோம்.

" உனக்கு நான் சாகறவரைக்கும் தினமும் குட் மார்னிங் அனுப்பிட்டே இருக்கணும் ரியா" 

அவள் ஆச்சரியப்படத்தக்க முட்டாள்தனங்களை வெட்கமே இன்றி நான் தொடர்ச்சியாக செய்தேன். 

சிரித்துக்கொண்டிருக்கும் அவள் புகைப்படம் மறைந்து வெள்ளை மனித உருவமாக அவள் வாட்ஸ் ஆப் முகப்பு படம் மாறுகையில், அவள் மொபைலில் என் எண் புறக்கணிக்கப்படுபவர்களின் பட்டியலுக்கு சென்று சேர்கையில் ஏறக்குறைய அவள் என்னில் இறந்துவிட்டாள். பிறகு எனது நல்ல காலைகள் அவளை சென்று சேரவில்லை.

ரியா- பிரவீன் தம்பதிக்கு திருமணம் முடிந்த ஓராவது ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பள்ளி சீருடையில் பிரவீனைப் பார்த்து சிரித்தது போலவே அப்போதும் அவனைப் பார்த்து சிரிக்கிறாள் ரியா, தன் குழந்தையை இடுப்பிலேந்தியபடி. 

ரியா ஆசிர்வதிக்கப்பட்டவள். 

எனது பாதை சிதிலமடைந்து திரும்பிப்போக வழியில்லாத நிலையில் அல்லது அவ்வாறாக நான் எண்ணிக்கொள்ளும் நிலையில்,  தொடர்ந்து முன் நகர்வதுதான் என் முன்னுள்ள வாய்ப்பாக இருந்தது. இடது பக்க வளைவுக்கு பதிலாய் வலது பக்கம் வேறொரு பாதையில் திரும்பும் சம்பவம் என் பயணத்தில் நிகழ்ந்த நாளுக்கான உந்துதல் ஒரு தோல்வியிலிருந்து, ஒரு ஏக்கத்திலிருந்து, ஒரு புரிதலில் இருந்து ஜனித்திருக்கலாம். 'இதுதான், இன்னதுதான், இதனால்தான்' என மிகத் தெளிவாக சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வை நினைவுகூர முடியவில்லை. படிப்படியாக இக்காடு வளர்ந்து மன விலங்குகளின் வாழ்விடமாய் இதை மாற்றும் விதையை விதைத்தது பிரனிதாவா, அபர்ணாவா, நிரோஷாவா?

பாதையைத் தேர்ந்தெடுத்தல் நம் கைகளில் இல்லையென்று சில நேரம் எண்ணிக்கொள்கையில் ஆசுவாசம் ஏற்படுகிறது. இதில் நம் தவறு என்ன இருக்கிறது? அளிக்கப்படுவதன் வழி,  இருத்தல் தன்னை தகவமைத்துக்கொள்கிறது. பழியைத் தூக்கி யார் மேலாவது வைத்துவிட்டால் கொஞ்சம் பாரம் குறைகிறது. 

ரியாவின் குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்டபொழுது " Self awareness " ஆசான்களை நான் சென்றடைந்தேன். 

" நீ கவனி உனது உடலை. அது என்ன செய்கிறதென்று கவனி. நீ கவனி உன் மனதை, அது என்ன செய்கிறதென்று கவனி. நீ கவனி உனது உணர்வுகளை, அவை என்ன சொல்கிறதென்று கவனி. பின் மெல்ல மெல்ல அது உன்னில் நிகழ்கிறது. உன் எண்ணங்கள் குறைகிறது. நீ சாந்தமடைகிறாய். நீ விடுதலை அடைகிறாய்". 

ஆசான்கள். பல்வேறு ஆசான்கள். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு. புலப்படா உண்மைகளைத் தேடி. 

" மரணித்ததுபோல் பாவனை செய்து படுத்தேன், அது என்னை வந்தடைந்தது"

" பதுங்குக் குழிகளில் பதுங்கி கிடக்கையில் அடுத்த குண்டு என் குழிமேல் விழுமோ எனும் மரண பயத்தில் அது என்னை வந்தடைந்தது"

" ஒரு கட்டத்தில் கவனிப்பவனும், கவனிக்கப்படுவதும் ஒன்றாகிறது" 

"மனமற்ற விழிப்பு நிலை என இவர்கள் அடைந்ததாய் கூறப்படும் நிலையை இவர்கள் உணர்ந்தது மனதின் துணையின்றி வேறெதினால்?எனில் விழிப்புநிலை என இவர்கள் பிதற்றுவது ஒரு பொய். ஒரு வியாபார உத்தி"

"நீ சொல்வதுதான் பொய்"

மெய்ஞானம் அடைந்தவர்களின் தெருச் சண்டைகள். மெய்ஞானமோ, முட்டாள்தனமோ எதுவாயினும் கருத்துகள், எதிர் கருத்துகள், உண்மைகள், பொய்கள், சரிகள், தவறுகள். திரும்ப திரும்ப அதே போராட்டங்கள். 

" இந்த ஐயப்பன்தாங்கல் ஏரியால ரொம்ப நாய்த் தொல்லை ரியா"

" சென்னைனாவே தெருவுக்கு தெரு அப்டிதானடா இருக்கு. பிஸ்கட் வெச்சுக்கோ. குரைக்கறத நிப்பாட்டிடும்"

இந்த மனச் சொறி நாயின் குரைப்புக்கும் நீதான் மருந்தா ரியா? நீ வாழ்ந்துகொண்டிருக்கும் அல்லது காட்டிக்கொண்டிருக்கும் உன் வாழ்வென்கிற பேருண்மைதான் அந்த பதிலா? நான் நமஸ்கரிக்க வேண்டிய குரு நீயா? நான் முடிவின்றி தேடிக்கொண்டிருந்தது உன்னைத்தானா? 

ரியா, ரியா, ரியா. ஆழ்ந்த உறக்கம் என்னைத் தழுவ வேண்டி ஒரு மந்திரம்போல் ரியாவை உச்சரிக்கிறேன். விழிப்பில்லா அவ்வுறக்கத்தில், மகிழ்வென மானுடர் எண்ணும் உணர்வுகளில் மட்டுமே நான் வாழ நீ என்னை ஆசிர்வதிப்பாயாக ரியா.

ரியா தன் சிறிய வட்டங்களுக்குள் மகிழ்வு கொண்டாள். ரியா தானொரு நல்ல அம்மா என்று நிரூபித்தாள். நல்ல மனைவி என்று நிரூபித்தாள். நல்ல மருமகள் என்று நிரூபித்தாள். நல்ல பாட்டி என்று நிரூபித்தாள். 'நல்ல' வரையறைகளின் கோடு தாண்டாமல் இந்த வாழ்வை நல்ல விதமாக விளையாடினாள். 

"நவீன், ரியாவ பத்தி நீ என்னடா நினைக்கற" 

"என்ன ஒரு boringஆன வாழ்க்கைடா அவுளுது. ஸ்கூல்ல இருந்து ஒருத்தனயே லவ் பண்ணிகிட்டு, அவனையே கட்டிகிட்டு, இப்போ எழுவத்தஞ்சு வயசுலயும் அவனயே கட்டிபிடிச்சு ஃபோட்டோ போட்டு ட்ரூ லவ்னு ஊர ஏமாத்திகிட்டு. Such a worthless life"

" But இந்த காலத்துல ஆச்சரியமா இல்லையா அது"

" என்னத்த ஆச்சரியம்? யாருகூட இருந்தா லைஃப் நல்ல செட்டில்டா இருக்கும்ணு அவளுக்கு தெரியும். எல்லாமே பிளானிங்தான. வாழ்க்கைய நல்லபடியா வாழ்றதுக்கான சுயநலம் மிகுந்த திட்டங்கள். மத்தபடி அவ மனசுல பிரவீன மட்டுமேதான் நினைச்சுகிட்டு இருந்தாளானு யாருக்கு தெரியும்?"

"தைரியமான பொண்ணு யார்மா இந்த கிளாஸ்ல" சிறிது நேர தயக்கத்துக்குப் பிறகு ரியா எழுந்துசெல்கிறாள். மாணவர்களுக்கிடையேயான மோதலில் ஒரு தரப்புக்கு சாட்சி சொல்லும் தைரியமான பெண்ணாக. 

கல்லூரியின் கடைசி நாளில் எல்லோருக்கும் பிரியாணி பரிமாறிவிட்டு கதறி கதறி அழுத அந்த தைரியசாலியை பார்த்தபொழுது அந்நாளின் சோகத்தையும் மீறி என்னுள் ஒரு புன்னகை வெளிப்பட்டது. அழுகையின் ஊடாக புன்னகை ததும்பிய அந்த முகத்தில் பரவிய சிவப்பை நவீன் தன் கேமிராவில் பகர்த்தினான். 

"உன்கிட்ட என் பர்த்டேவுக்கு ஃகிப்ட் அனுப்ப வேணாம்னுதான படிச்சு படிச்சு சொன்னேன். எங்க வீட்ல எப்டி திட்னாங்க தெரியுமா? அதுவும் செயின் அனுப்பிருக்க. Are you mad?" 

" வருஷத்துக்கு ஒருவாட்டிதான் உன் பர்த்டே வருது. அனுப்ப தோணிச்சு அனுப்பனேன். தப்பா எல்லாம் தெரியல" 

இளமையின் முட்டாள்தனமான பதில்கள். முட்டாள்தனமான செய்கைகள். எந்த தருக்கமும் செல்லுபடியாகாத ஒரு பருவம். பின்னர் வலியாகவும், மகிழ்வாகவும் மாறி மாறி எழுகின்ற உணர்வுகள்.

நடுங்கும் கரங்களால் பிரவீனை அணைத்துக்கொள்கிறாள் ரியா. 
" உண்மையிலேயே காதல்ங்கறது ஒருத்தர் மேல மட்டும்தான் வரும்னு நினைச்சுகிட்ட உன் பாவனையாலதான, அந்தக் கருத்துமேல உனக்கிருந்த நம்பிக்கையாலதான இந்த வாழ்க்கையை உன்னால நிம்மதியா வாழ முடியுது ரியா?" 

அவள் பதில் சொல்லவில்லை. மேலும் இறுக்கமாக, தன் முழு வலிமையோடு பிரவீனைக் கட்டித் தழுவினாள். எனது உண்மைகளை தனது காலில் போட்டு மிதித்து அந்த பொக்கை வாய் கிழவி சிரித்தாள்.    

" ஒரு Fun Task பண்ணுவோம். ஸ்கூல்ல படிச்ச ஒரு ரைம் இப்போ யாராவது தப்பில்லாம சொல்ணும். யாரு வரீங்க" 

யாரும் முன்வராதபோது அந்த ஆப்டிடியூட் ட்ரெய்னரின் கைகள் ரியாவை சுட்டின. 

" அன்னைக்கு சொன்ன அந்த ரைம் ஒருவாட்டி இப்போ சொல்றியா ரியா" 

நடுங்கும் குரல்களால் நான் அவளைக் கேட்டேன். 

அவள் முலைகள் செழிப்பிழந்து போய்விட்டன. அவைகளை அவளுக்கே தெரியாமல் பார்க்க நினைக்கும் திருட்டுத்தனங்கள் இந்தக் கிழங்களுங்கு இன்று இல்லை. அவள் தோல் சுருக்கம் கண்டுவிட்டது. அவள் உதடுகள் தளர்ந்துவிட்டன. அவள் கன்னங்கள் வற்றிவிட்டது.

அவள் அந்த ரைமை சொல்ல சொல்ல, இருபதுகளின் ரியா, எழுபதுகளின் ரியா. இந்த சித்திரங்கள் மாறி மாறி என்முன் விரிகிறது. 

" ஜானி ஜானி, எஸ் பப்பா

ஈட்டிங்க் சுகர், நோ பப்பா

டெல்லிங் லைஸ், நோ பப்பா

ஓப்பன் யுவர் மவுத்,  ஹா ஹா ஹா" 

"டோன்ட் டெல் த லைஸ் ரியா, ப்ளீஸ் ஓப்பன் யுவர் மவுத்" என்று நான் சொல்ல
அவள் சிரிப்பில் படர்ந்து பரவுகிறது அதே சிவப்பு. யார் யாரைத் தோற்கடித்தது என அறிய முடியாத என் அறியாமையின் காயப் பள்ளங்களில் புதுக் குருதியாய் நிறைகிறது அந்த சிவப்பு. அது இணையில்லாதது, அழிவில்லாதது, என்னாலோ, ஏன் ரியாவாலோ ஒருபோதும் அறியவே முடியாதது. ஆனாலும் திரும்ப திரும்ப அது அறியதக்கதென்று சொல்லி அதன்பின் ஓடுவதை தவிர்க்கவேமுடியாது. ஒருவேளை அது அறியத்தக்கதுதானா?