ஏப்ரல் 22, 2016

நார்வேஜியன் வுட் - வாதையோடு களியாட்டம்

கட்டுப்பாடற்ற காமம்,கட்டுப்பாடற்ற மது என வாழ்வின் கொண்டாட்டங்களைக் காட்டும் அதே கணத்தில் வாழ்வின் வாதைகளை வாட்டனேப் என்ற இளைஞனின் வழி ஹருகி முரகாமி நார்வேஜியன் வுட்டில் காட்டிச் செல்கிறார்.
டோக்கியோவின் பல்கலைகழகமொன்றில் நாடகவியல் துறையில் படிக்கும் வாட்டனேப் தன் பள்ளித்தோழி நேக்கோவை டோக்கியோவில் சந்திக்கிறான். நேக்கோ , வாட்டனேபின் மிக நெருங்கிய ஒரே ஒரு நண்பனான கிழுக்கியின் காதலி. கிழுக்கியும், நேக்கோவும் மிக இளம் வயதிலிருந்தே காதலித்து வருகிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக கிழுக்கி தன் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் தற்கொலை செய்து கொள்கிறான். டோக்கியோவில் நேக்கோவுக்கும் , வாட்டனேபிற்கும் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இறந்துபோன நண்பனின் காதலியின் மேல் தனக்கு இருப்பது காதலா என்பதை வாட்டனேப்பால் புரிந்துகொள்ள முடியவில்லை. நேக்கோவும் கிழுக்கியை இன்னமும் காதலிப்பதாக சொல்கிறாள். இதற்கிடையில் உடன் படிக்கும் மிடோரியுடன் வாட்னேப் நெருங்கிய நண்பனாகிறான். ஆனால் மிடோரி வெறொருவனை காதலித்துக் கொண்டிருக்கிறாள். இதற்கிடையில் நேக்கோ மனநிலை பாதிக்கப்பட்டு சிறப்பு மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்படுகிறாள். உடல்நிலை சரியானதும் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று நேக்கோவிடம் வாட்னேப் சொல்கிறான். ஆனால் நேக்கோவின் மனநிலை தொடர்ந்து மோசமடைகிறது. அதே நேரத்தில் மிடோரியின் காதலன் தொடர்ந்து அவளை மனதளவில் காயப்படுத்துவதால் அவனை விட்டுப் பிரியும் மிடோரி வாட்டனேப்பை காதலிப்பதாக சொல்கிறாள். மிடோரியின் காதலை வாட்டனேப் ஏற்றுக்கொண்டானா அல்லது நேக்கோவுடன் வாழ ஆரம்பித்தானா என்பது மீதிக்கதை.

இந்த நாவலின் எல்லா உபகதாபாத்திரங்களையும் சுவாரசியமாக படைத்துள்ளார் முரகாமி. வாட்டனேப்பின் சுத்தமான அறைத்தோழன், விடுதியின் மற்றொரு தோழன் நாகசாவா, மிடோரியின் அப்பா, நாகசாவாவின் காதலி ஹாட்சுமி, மனநல மருத்துவமனையில் நேக்கோவின் தோழி ரெய்கோ என குறைவான பேர் இருந்தாலும் சுவாரசியத்திற்கு குறைவில்லை.
நாவல் முழுக்க மதுவைப் போலவே காமமும் வழிந்தோடுகிறது. நாகசாவா கொஞ்சம் பணம் உடையவன் என்பதால் அவன் உதவியோடு பல பெண்களோடு உறவு கொள்கிறான் வாட்டனேப். ஒருநாள் இன்று இரவை பெண்களோடு கழிக்கலாம் என்று பார், பாராக சுற்றுகிறார்கள் நாகசாவாவும், வாட்டனேப்பும். ஆனால் கடைசிவரை யாரும் கிடைக்காததால் நாகசாவா தன் காதலி வீட்டிற்கு சென்றுவிடுகிறான். கடைசி ரயிலைத் தவறவிடும் வாட்டனேப் ரயில் நிலையத்திலேயே தூங்கி விடுகிறான். காலையில் இரண்டு பெண்கள் அழுது கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அதில் ஒருத்தி  என் தோழியை காதலன் ஏமாற்றிவிட்டான் அதுதான் அழுகிறாள். மது அருந்த போலாமா என்கிறாள். அவர்களோடு செல்லும் வாட்டனேப் கடைசியில் அழுது கொண்டிருக்கும் பெண்ணோடு ஒரு ஹோட்டலில் உறவு கொள்கிறான். அந்தப் பெண் தன் காதலனை விட்டு வந்ததே அவன் வேறொரு பெண்ணோடு உறவு கொள்வதை பார்த்துவிடுவதால்தான். இப்படி ஒரு முறையே சந்திக்கும் பெண்களெல்லாம் வாட்டனேப்போடு உறவு கொள்வதாய் படு சுவாரசியமாய் எழுதிச் செல்கிறார் முரகாமி.
நேக்கோவின் இருபதாவது பிறந்தநாளில் அவளொடு உறவு கொள்கிறான் வாட்டனேப். பின்பு ஒருநாள் மனநல விடுதியில் வாட்டனேப்பை சந்திக்கும்போது தனது வாழ்க்கையிலேயே தன் உடல் உறவு கொள்ள அனுமதித்தது அந்த தருணத்தில்தான், கிழுக்கியுடன்கூட தன்னால் உறவு கொள்ள முடிந்தது இல்லை என்கிறாள். நேக்கோவின் மனநல பாதிப்பிற்கான முக்கிய காரணியாக நாம் இதை கொள்ள வேண்டி இருக்கிறது.
மிடோரியின் கதாபாத்திரம் மிகவும் சுட்டித்தனமான பெண்ணாக படைத்துள்ளார் முரகாமி. வாட்டனேப்போடு ஆபாசப்படம் பார்க்கப் போவது, நீ சுய இன்பம் செய்யும்போது என்னை நினைத்துக்கொள்ள வேண்டும் என வாட்டனேப்பிடம் சொல்வது என மிடோரி இந்த நாவலின் மறக்க முடியாத கதாபாத்திரம். நேக்கோவைவிட என்னைக் கவர்ந்தது மிடோரிதான்.
கலாச்சார, பண்பாட்டுக் கட்டுடைப்பை முரகாமி மிகச் சிறப்பாக செய்துள்ளார். மிடோரி இறந்துபோன அப்பாவின் புகைப்படம் முன்பு அமர்ந்துகொண்டு ஆடை அவிழ்த்து தன் நிர்வாணத்தை அப்பாவிற்கு காட்டும் இடங்களாகட்டும் மிடோரியின் கதாபாத்திர வடிவமைப்பு பண்பாட்டு கட்டுடைப்பாகவே படைக்கப்பட்டுள்ளது.
நேக்கோவின் மனநல விடுதி தோழி ரெய்கோவின் கதையும் வாழ்வின் ஒரு சிறு சம்பவம் வாழ்வையே மாற்றி விடுகிறது என இயல்பாய் எடுத்துக்காட்டுகிறது. கடைசிவரை தன் குழந்தையையும், கணவரையும் சந்திக்காமலே இருப்பது பெரும் மன வலிமை வேண்டுவது. அந்த வலிமைதான் ரெய்கோவின் மன நலத்தை சீரமைத்தது அது நேக்கோவிடம் இல்லாது போனதுதான் நாவலின் திருப்பமாக அமைகிறது. நாவலின் இறுதிகட்டங்களில் ரெய்கோவோடு வாட்டனேப் உறவு கொள்வது ஆபாசமாகத் தோன்றவில்லை. அது பெரும் தேவை என சொல்லலாம். வாழ்க்கையின் களியாட்டங்களை அதன் வாதையோடு கலந்து சொல்லுவதே நார்வேஜியன் வுட். நிச்சயமாக ஒருமுறையேனும் படிக்க வேண்டியது.
Death exists, not as the opposite but as the part of life என்ற முரகாமியின் வரிகளோடு முடிக்கிறேன்.