ஜூன் 07, 2016

காக்டெயில் இரவில்

பகார்டி லெமனில் சோடா ஊற்றிக்கொண்டே பிங் வோட்கா பிரியவதனியின் இளம்தொண்டையில் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். "நாலு வருஷமா லவ் பண்ண தீபக் ஒருநாள் என்னைப் போடினு சொல்லிட்டான்.அவன் கால்ல விழுந்து கதறி அழுதேன். எட்டி மிதிச்சு கதவ சாத்திட்டான்" என்றாள் பிரியவதினி. எனக்கு அழ வேண்டும் போல் இருந்தது. மகிழினியின் கொஞ்சல்,  எதையாவது யோசிக்கும்போது உதட்டை சுளித்துக்கொள்வது, இடைவிடாத இரவுப் பேச்சுகள் எல்லாம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது."அவ என்ன சொன்னா மதி?" "காரணம்லாம் இல்ல.இது வேணாம்னு சொன்னா" "அவளுக்கு நீ புளிச்சு போய்ட்ட மதி. கொஞ்ச நாள்ல அவ கூட உனக்கு புளிச்சு போய்ருக்கலாம், நெருங்கனாவே புளிச்சிடும், எப்பவுமே கொஞ்சம் தள்ளி இருக்கணும். கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்ல பாரு ஜோடிக்கு பேச ஒண்ணும் இருக்காது. புளிச்சிடும். நெருங்கிய நட்புனு சொல்றது எல்லாம் உள்ளுக்குள்ள பொறாமைல பொகஞ்சிட்டு இருக்குமே அந்த மாதிரி, ரொம்ப நெருங்கனா புடிக்காது , புளிச்சிடும்" பிரியவதனி சொல்வதற்கு ஆமாம் போட்டுக்கொண்டிருந்தேன். பகார்டியைப் பிடுங்கி அதையும் கவிழ்த்த ஆரம்பித்தாள். "தீபக் போன வாரம் கால் பண்ணி புதுசா கார் வாங்கிருக்கேன். ஒரு ரைடு போவோம் வரியானு கேட்டான்" "என்ன சொன்ன?"  "போனேன். நம்ம ரியாஸ் கூட பைக்ல. ஹாய் பாஸ்டார்ட் இதாண்டா என் ஆளுனு ரியாஸ கட்டி பிடிச்சுகிட்டேன். அவன் கார்ல காறி துப்பிட்டு ரியாஸ்கூட லாங் டிரைவ் போனேன்." வழிந்த ஒருதுளிக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். திடீரென்று வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். கடைசியில் களைப்புற்று என் மடியில் படுத்து "ஐ லவ் திஸ் இடியாட்டிக் லைப்" என்று பிதற்றிக்கொண்டிருந்தாள். மூடியிருந்த அவள் கண்களில் முத்தமிட்டேன். இன்னும் வாழ்வதற்கான ஆசையோடு தூங்க ஆரம்பித்தேன்.