செப்டம்பர் 25, 2016

புண்படுதல்

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் கணிதத் தேர்வொன்றிற்கு முந்தைய நாள் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்து சில சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தான். நானும் தெரிந்தவரை சொன்னேன். அவன் அப்போது கல்லூரிக்கு அருகில் அறை எடுத்து தங்கியிருந்தான். ஒருமணிநேரம் கழித்து மீண்டும் ஃபோன் செய்து எனக்கு கொஞ்சம் சொல்லித்தர இயலுமா? இங்கே அறைக்கு வருகிறாயா என்று கேட்டான். நான் என்னை தொந்தரவு செய்யாதே என்று ஃபோனை வைத்துவிட்டேன். அப்போதுதான் நான் படிக்க ஆரம்பித்திருந்தேன். அங்கே கிளம்பிச் செல்வதற்கே இரண்டு மணி நேரம் செலவழிக்க வேண்டும். அன்றைக்கு அவனுக்கு உதவ முடியாமல் போய்விட்டதே என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவனும் மனம் புண்பட்டு ஏறக்கூறைய ஒருவார காலத்திற்கு என்னோடு பேசுவில்லை.

நம்மை கவனித்துக்கொள்வதற்காக நாம் சில நேரங்களில் மற்றவர்களைப் புறக்கணித்துதான் ஆகவேண்டும். அது சுயநலம் என்று யார் சொன்னாலும். உண்மையில் அந்த நண்பன் தேர்விற்கு பத்து அல்லது இருபது நாட்களுக்கு முன்னாகவே என்னையோ அல்லது அந்தப் பாடத்தை நன்கறிந்த வேறு யாரையாவது அணுகியிருக்க வேண்டும். நோட்ஸ் வாங்கியிருக்க வேண்டும்.அதை விடுத்து இன்னொருவனுக்கு நட்பின் அடிப்படையில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுக்கப்படுகிற அழுத்தத்தைத்தான் நான் சுயநலமாகப் பார்க்கிறேன். அதற்கு புண்படாமல் ஏன் அவ்வாறு பதில் சொன்னேன் என்பதை சொன்னவன் மனநிலையிலிருந்து சிந்தித்து பார்க்க வேண்டும்.

சமீபத்தில் இதேபோல் எனது நண்பனொருவன் எனக்குத் தெரியாமல் என்னுடைய Whatsapp பயன்படுத்தி என்னுடைய நண்பனொருவனை மிகச் சாதாரணமாக புழங்கும் வசையொன்றால் (உண்மையில் அது வசையே அல்ல. புட்டத்தைக் குறிக்கும் ஒரு வார்த்தை) திட்டிவிட்டான். அதனால் புண்பட்டு அவன் என்னை Block செய்துவிட்டான். அவன் புண்பட்டது அறிந்து அதைச் செய்தது நானல்ல என்று அவனுக்கு விளக்கிய பின்பும் உன்னுடைய ஃபோனிலிருந்து வருவதற்கு நீதான் பொறுப்பு என்று சொல்லிவிட்டான். அன்றிலிருந்து அவன் பேசுவதில்லை. அவன் பேசாததால் நான் வாழ்க்கையில் பெரிதாக எதையும் இழந்துவிட்டேன் என்று சொல்ல வரவில்லை. இந்தத் தலைமுறையில் சக மனிதன்மேலான அன்பு என்பது தேவை சார்ந்து மட்டுமே காட்டப்படுகிறது என்பதை விளக்குவதற்காக இதை சொல்லவேண்டியிருக்கிறது.

இதேபோல் இரண்டு குறும்பட இயக்குநர்களின் படங்களை குப்பை என்று திட்டினேன். அவ்வளவு கடுமையான வார்த்தைக்காக பின்பு வருந்தினேன். ஆனால் அதில் ஒருவர் கோபித்துக்கொண்டு Block செய்துவிட்டார். உண்மையில் அவர்கள்மேல் எனக்கு என்ன வெறுப்பு? என்ன கோபம்? ஒன்றும் இல்லை. அவர்களிடமிருந்து நல்ல படைப்பு வெளிவரவேண்டுமென்கிற ஆசையில்தான் அவ்வளவு கடுமையாக சொல்லவேண்டி இருக்கிறது. அப்படி வரும் பட்சத்தில் அதனைப் பாராட்டுபவனாகவும் நான் இருப்பேன்.

இதை இன்னொரு சம்பவத்தோடு பொருத்திப் பார்க்கலாம். ஒரு வாரத்திற்கு முன்பு மலைகள் இணைய இதழில் வெளிவந்த எனது சிறுகதையைப்  படித்துவிட்டு நண்பர் யமுனைசெல்வன் தீடீர் புரட்சி வெடி போன்றுள்ளது என்று குறிப்பிட்டார். ஏன் அவ்வாறு சொன்னார்? எனக்கும் அவருக்கும் நீண்டநாள் பகையா? குறிப்பிடத்தகுந்த அளவு வாசிப்புள்ள அவர் நான் இன்னமும் நன்றாக எழுதவேண்டுமென்கிற அக்கறையில் சொல்கிறார். அவ்வளவு அன்பும் அக்கறையும் உள்ள மனிதரை நான் Block செய்யவேண்டுமா இல்லை இன்னும் நான்கு கதைகளை அனுப்பி விமர்சிக்க சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட அணுகுமுறையைத்தான் குறும்படம் எடுக்கும் நண்பர்களும் விமர்சிக்கும்போது செய்யவேண்டும். ஒரு நல்ல படைப்பை என் முகத்தில் தூக்கி எறிந்தாலும் அதைப் பொறுக்கி எடுத்துப் பார்த்து மகிழ்வேன். ஆனால் அது நடப்பதில்லை. உண்மையில் சரக்கு இல்லாதவன்தான் தன் இயலாமை வெளிப்பட்டது அறிந்து விமர்சனம் கண்டு பொங்குவான். அவர்களிடம் பேசுவதற்கு எனக்கு ஒன்றும் இல்லை.

எங்கள் கல்லூரி நண்பர்களின் வாட்ஸ்அப் குழுமத்தில்போய் சமீபத்தில் சக மனிதர்களை புறக்கணிக்கும், துச்சமாக நினைக்கும், தேவைக்கு மட்டுமே அணுகும் அவர்களின் மனப்பாங்கு பற்றி கொஞ்சம் கடுமையாகப் பதிவிட்டேன். அத்தனை பேரும் புண்பட்டார்கள். ஆனால் கடைசி வரைக்கும் சுயத்தைத் தள்ளி வைத்துவிட்டு அது உண்மைதானா என்று ஒருவரும் சிந்திக்கவில்லை. ஒரு தோழி மட்டும் Private chatல் வந்து நான் அடிபட்டு கிடந்தப்பக்கூடதான் யாரும் கண்டுக்கல அதெல்லாம் நான் வெளிய சொல்லிட்டா இருக்கேன், எல்லாரும் அப்படித்தான் என்றாள். எல்லாரும் அப்படித்தான் என்று பொதுமைப்படுத்த முடியாது என்றாலும் அப்படியாக நினைத்து ஆறுதல் அடைந்துகொள்வதுதான் இப்போதைக்கு நல்லதென்று தோன்றுகிறது. உண்மையிலேயே இருபத்தோராம் நூற்றாண்டின் இளம் தலைமுறையில் ஒருவனாக இருப்பது எனக்கு அவ்வளவு எரிச்சலாக இருக்கிறது.