செப்டம்பர் 25, 2016

நிர்வாணத்தை எதிர்கொள்ளல்

எப்படிப் பகிரப்பட்டிருக்கும் ஒரு நிர்வாணம்?

ஒரு தொடர் கெஞ்சலின் முடிவில்

ஒரு தூண்டப்பட்ட காமத்தின் இடையில்

மறைத்து வைக்கப்பட்டவை சார்ந்து
ஒரு புகழ்ச்சியைக் கேட்டுவிடும் பொருட்டு

ஒரு அதீத நம்பிக்கையின் உச்சத்தில்

ஒரு இயல்பான உணர்வெழுச்சியில்

ஒரு பரஸ்பர உதவியாக

ஒரு குழந்தையின் நிர்வாணம் போல்

மிகச் சாதாரணமாக அதை நீ ரசித்திருக்க வேண்டும்

ஒரு தெய்வத்தின் நிர்வாணம்போல்

மன அமைதியை நீ உணர்ந்திருக்க வேண்டும்

ஒரு காதலியின் நிர்வாணம்போல்

நீ அவளுக்கு முத்தமிட்டு இருக்க வேண்டும்

உன் காம இச்சைக்கு வடிகால் தந்ததற்காக நன்றி சொல்லியிருக்க வேண்டும்

நீ அதை வையகமே இன்பம்பெற
வாட்ஸ் அப்பில் பகிரும்போது
அதை ஒரு நடுக்கத்தோடு எதிர்கொள்கிறேன்

வீட்டில் கிடக்கும் போர்வை எடுத்து
அவள் நிர்வாணத்தை மறைத்துக்கொள்கிறேன்

கொஞ்சம் தர்மசங்கடத்தோடு சிரிக்கும் அவள் முகம் அப்பொழுது அவ்வளவு அழகாய் இருக்கும்.