செப்டம்பர் 23, 2016

ஒரு சாமானியனின் கோபம்

தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கிற இளைஞர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே இருக்கிறதே உண்மையிலேயே யாருக்கும் வேலை இல்லையா என்றால் வேலை பெறுவதற்கான திறன் உள்ளவர்களாக நாம் இளைஞர்களை உருவாக்கவில்லை என்பதே உண்மை. அறிந்துகொள்ளுதலுக்கான வழியாக நாம் கல்வியைக் கட்டமைக்கவே இல்லை. புத்தகத்தில் இருப்பதை உருப்போட்டு வெறும் இயந்திரங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறோம். இன்றைக்கு வேலை பெற்றிருக்கிற இளைஞன் கூட மகிழ்வோடு அதை செய்துகொண்டிருக்கிறானா? அடிமையாய் நடத்தப்படுகிறான். சிந்திக்கும் ஆற்றல் தொடர் வசைகளால் முடக்கப்பட்டு நல்ல வேலையாளனாய் மாறிப்போகிறான். எட்டாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் முதலாளித்துவத்தை நக்கிப் பிழைக்கிறான். ஏன் மென்பொருள் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க முடியவில்லை? காட்டிக் கொடுக்கிற, கூட்டிக் கொடுக்கிற தனிநபர் சுயநலன் உள்ளவர்களை வைத்து எப்படி தொழிற்சங்கம் அமைக்க முடியும். இன்றைக்கு எங்களுக்கு வேலைப் பாதுகாப்பு உத்திரவாதம் இருக்கிறதா?  உண்மையில் அரசாங்களை நடத்திக்கொண்டிருக்கும் பன்னாட்டு முதலாளிகளிடம் கேள்வி  கேட்க யாருக்கு திராணியிருக்கிறது? ஏன் இங்கே திறன் வாய்ந்த மாணவனை உருவாக்கும் அளவிற்கு கல்விமுறை இல்லை. ஏனென்றால் இங்கே ஆசிரியரே சரி இல்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பவரெல்லாம் மருத்துவமும், பொறியியலும் படிக்கப்போக வேறு வாய்ப்பில்லாமல் படிக்கும் துறையாக ஆசிரியப் பணியை ஆக்கி வைத்திருப்பவர்கள் யார்? நன்றாகப் படிக்கும் மாணவனெல்லாம் மென்பொருள் வேலைக்குப் போக வேலை கிடைக்காதவரெல்லாம் விரிவுரையாளர் ஆகலாம் என ஆக்கி வைத்திருக்கிற கல்வித் தந்தைகளை என்ன செய்வது? கல்வித்தந்தைகளுக்கு அனுமதி தந்து தங்கள் வயிறு வளர்த்த அரசியல்வியாதிகளை என்ன செய்வது? தங்கள் வாழ்நாள் சம்பளத்தைக் கூட்டிப் பார்த்தாலும் ஒரு கோடியைக்கூட எட்டாத என் இளம் நண்பர்கள் ,தொப்புளில் பம்பரம் விட்டு கோடிகளில் புரளும் நடிகனுக்காக சண்டை இடும்போது எங்கு போய் அழுவது? விவசாயம் செய்து கோடிகள் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் உள்ள நாட்டில் விவசாயிகள் செத்துப்போவது ஏன்? பணம் கொழித்தாலும் விவாகரத்துகள் அதிகரிக்கிறதே அது ஏன்? அம்மா உணவகத்தில் ஏன் அரசியல்வாதிகள் சாப்பிடுவது இல்லை? அரசு மருத்துவமனைக்கு ஏன் அரசியல்வாதிகள் போவது இல்லை? அரசுப்பள்ளியில் ஏன் அரசுப்பள்ளி ஆசிரியர் மகனே படிப்பதில்லை?  ஏன் தமிழ் படிக்கத் தெரியாதவனாய் தமிழ் இளைஞன் இருக்கிறான்? இந்தக் கேள்விகள் எல்லாம் கூட எழா வண்ணம் பெரும்பான்மை இளைஞர்களை புத்தி மழுங்கியவர்களாக உங்களால் ஆக்க முடிந்திருக்கிறதே அதுதான் உங்களுக்கு கிடைத்த வெற்றி.  ஒருபோதும் அடுத்த தலைமுறையையும் இப்படி முட்டாளாக்க அனுமதிக்க மாட்டோம் அதற்காக ஒரு சிறு துரும்பையாவது நகர்த்துவோம்.