செப்டம்பர் 23, 2016

இரு பெரும் உண்மைகள்

நான் வாழ்நாள் முழுமைக்குமாக இரண்டு உண்மைகளை என் மனதில் இருத்தி வைத்திருக்கிறேன்.

1. விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட மனிதர்கள் யாரும் இல்லை
2. தாழ்வு மனப்பான்மை இல்லாத மனிதன் யாரும் இல்லை.

ஒல்லியாக இருந்தால் ஒல்லிப்பிச்சான் என்பார்கள். சரி என்று கொஞ்சம் குண்டானால் குண்டன் என்பார்கள். ஒல்லியும் இல்லை, குண்டும் இல்லை என்றால் நீ குள்ளையாக இருக்கிறாய் குட்டை என்பார்கள் , உயரமாக இருந்தாலாவது விடுவார்கள் என்றால் நெட்டை என்பார்கள். எல்லாவற்றிலிருந்தும் தப்பித்தால் கருப்பன் என்பார்கள் இல்லையேல் சிவப்பன் என்பார்கள். இந்த விமர்சனங்களால் தாழ்வு மனப்பான்மைக்குள் போகாத மனிதன் என்று யாரும் கிடையாது. அதிலேயே மூழ்கிவிட்டால் நமக்கான வாழ்வியலையே நாம் அமைத்துக் கொள்ள முடியாது. நீங்கள் ஒரு அஜித் ரசிகர் என்று வைத்துக்கொள்வோம் விஜய் எல்லாம் ஒரு ஆளா என்று விமர்சிப்பீர்கள். திடீரென ஒருநாள் விஜயை உங்கள் அருகாமையில் கண்டால் செல்பி எடுத்து பேஸ்புக்கில் போட்டு லைக் எத்தனை வருகிறது எனப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டீர்களா? விமர்சனங்களின் ஆயுள் அவ்வளவுதான். ஆனால் உடல் சாராத, நடவடிக்கை சார்ந்த விமர்சனங்கள் உண்மை எனில் நம்மை மாற்றிக்கொள்ள கண்டிப்பாக முயலல்தான் வேண்டும்.