செப்டம்பர் 23, 2016

தவம்

எந்தத் திசையிலிருந்து அறியாவண்ணம் பெருங்காற்று வீசத்தொடங்கியிருந்தது. அது அவனுள்ளும் புகுந்துகொண்டது. அது அவனைப் புதிப்பித்து விடுமென்று எண்ணலானான். ஆனால் அது எப்போதும் போன்றதொரு சாதாரணக் காற்று. அது அவனைப் புதுப்பிக்கவில்லை. அது அவன் மனதின் மூலையில் ஏதாவதொரு பகுதியைத் தொட்டு ஆறுதல் தருமென்று அவன் கருதினான். அது ஆறுதலோடு அவனை அணைத்துக்கொள்ளவேயில்லை. எப்படி ஒவ்வொருவரும் தன்னைப் புதுப்பிப்பார்கள்,  ஆறுதலளிப்பார்கள் என்று நம்பி ஏமாந்தானோ அதைப்போல அந்தக் காற்றும் அவனை ஏமாற்றியது. பெருங்குரலெடுத்து அலறவேண்டும் என அவன் விரும்பினான். அவன் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாதவன். அதனால் மனதிற்கு உள்ளாகவே அலறினான். அந்த அலறலில் அவன் மனபிம்பம் உடைந்து சிதறிக்கொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு துகளையும் அவன் இணைக்க விரும்பவேயில்லை. ஆனால் அலறலின் முடிவில் அவை இணைந்துகொண்டது. இந்த வாதையிலிருந்து தப்ப முடியாது என அவன் அறிந்துகொண்டான். அவன் தப்பி ஓட விரும்பினான். ஓட்டத்தின் முடிவு என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தாலும் அதை உள்வாங்கும் தைரியம் அவனுக்கு இல்லை.

ஆனால் முடிவிற்கு முன்னர்வரை எப்போதாவது கிடைத்துவிடுகிற சுவாரசியம் அவனுக்கு தேவையாய் இருந்தது. அந்த தெத்துப்பல் அழகையும் முடிவுகளை அறிந்தபடி அப்படித்தான் நேசித்தான். அவள் பேரழகியல்ல என்பதால் அவளை சந்தித்தநாளை அவன் மனதில் பிரதியெடுத்து வைத்துக்கொள்ளவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தால் சிலரை பிடித்துப்போகுமே அப்படிப்பட்டவள் அவள்.

அவளை சொல்ல அவனே தகுதியானவன் என்று நீங்கள் கருதலாம். அவனும் நானும் வேறல்ல. எப்படி அவளும் நானும் வேறல்ல என்று ஒரு காலத்தில் கருதினேனொ அப்படிப்பட்டதல்ல இது. காதலிக்கும் தருணங்களில் நான் நானாக இல்லாமல் அவனாக இருப்பதால்தான் என்னை அவனென்றேன். காதலை அதனால் ஒரு துறவு என்பேன். நம்மை இழந்துவிடுகிற துறவு. 'நான்' எங்குமில்லாத துறவு. நானா? யார் நான்? தூ, தூ அவள் அவள் அவள் என்று உள்ளம் ரீங்காரமிடும் காலம். அடிமைத்தனம்தானே இது என்று நீங்கள் கேட்கலாம். துறவி என்பவன் அத்தனையும் துறந்துதானே கடவுளிடம் போய் நிற்கிறான். உண்மையில் துறவி என்பவன் கடவுளையும் துறந்துவிட வேண்டுமல்லவா? துறவியால் துறக்க முடியாத கடவுள்தான் எனக்கு அவள். அந்த மஞ்சள்நிற மெல்லிய உடலையும் காந்தக் கண்களையும் தெத்துப்பல்லையும் பார்க்கிற ஒருவன் இதோ தெய்வதரிசனம் கிடைத்துவிட்டது என்று அவள் காலில் விழுந்து கிடக்க மாட்டான். அவள் தினந்தோறும் காட்சிதந்து ஒருநாள் தானொரு தெய்வமென்று நமக்கு புரியவைக்கிறவள். ஒருநாள் அவள் தரிசனம் கிடைக்காவிட்டாலும் மோட்சம் தள்ளிப்போய்விடுமென்று காதலின் மன அசரீரி அவனிடம் சொல்லிக்கொண்டே இருந்தது. பின்னொரு நாள் அவன் தான் நாத்திகவாதியாகிவிட்டதாக அவன் அசரீரிக்கு பதில் சொன்னான். அன்றிலிருந்து அவன் கதைகள் எழுதத் துவங்கிவிட்டான். இப்போது எழுத்து ஒரு தவம் என்று ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்.