செப்டம்பர் 23, 2016

உரையாடுதல்

விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்குப் போனால் முதல்நாள் பாட்டி வாழ்வில் நடந்த கதை ஒன்றைச் சொல்லுவார். நல்ல சுவாரசியமான, நகைச்சுவையான கதை. நமக்கு பேசுவதற்கான பெரிய வேலையொன்றும் இருக்காது அவ்வப்பொழுது 'ம்' போட்டு கேட்டுக்கொண்டே அந்த சுவாரசியத்தில் மூழ்கலாம். மறுநாள் பாட்டி நேற்று கதை சொன்னதையே மறந்துவிட்டு அதே உற்சாகத்தோடு அதே கதையைச் சொல்லுவார். நமக்கு பிடித்த திரைப்படத்தைத் திரும்ப பார்ப்பதுபோல், பிடித்த புத்தகத்தை மீண்டும் படிப்பதுபோல், பிடித்த பெண்ணை மீண்டும் பார்ப்பதுபோல் அந்தக் கதையை கேட்கமுடியும். நேற்று விடுபட்டுப்போயிருந்த விஷயங்கள் பாட்டியால் சேர்க்கப்பட்டு சுவாரசியம் கூடியிருக்கும். இதேபோல் எங்காவது உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் இரண்டு தாத்தாக்களை பார்த்தால் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த முகங்களைப் பார்ப்பதே நமக்கு ஆனந்தமாய் இருக்கும். செக்ஸியான விஷயங்களும், ஆபாசம் என்று சொல்லப்படுகின்ற வார்த்தைகளும் மிக இயல்பாக அந்தப் பேச்சில் வெளிப்படும். ஆக இதுபோன்ற ஒரு உரையாடலை நாமும் அனுபவிக்க வேண்டுமென்று நம் இளைஞர்கள் பக்கம் போனால் செத்தோம்.

பாட்டியின் கதையைக் கேட்பதன்மூலம் என்னை ஒரு சிந்தனைத் தளத்தில் பாட்டி ஆழ்த்துகிறாள். நான் பெறாத ஒரு அனுபவத்தை என் மனதில் காட்சிப்படுத்துகிறாள். அப்படி நான் அடைந்த அனுபவத்தை சக இளைஞனிடம் எழுத்திலோ, பேச்சிலோ பகிரும்போது அதைக் கேட்க அவன் ஒப்புக்கொள்வதே இல்லை. ஒரு கருத்தியலை புறக்கணிப்பதற்கான அல்லது ஏற்பதற்கான உரிமை கேட்பவனைச் சேர்ந்தது. ஆனால் கேட்காமலே புறக்கணித்தலைத்தான் இளைஞர்கள் செய்கிறார்கள். சரி, அவன் கேட்கதான் விரும்பவில்லை ஏதாவது சொல்வானா என்று பார்த்தால் சொல்வதற்கும் அவனுக்கு தெரிவதில்லை. கேட்டலைப் புறக்கணிக்கத்தலுக்கு மிக முக்கியக் காரணம் அவன் தலைமேல் ஏற்றி வைத்திருக்கிற 'நான்' என்ற அகங்காரம்தான். சுயத்தை முழுமையாக இழத்தல் எவர்க்கும் சாத்தியப்படாதென்றாலும் அறிவார்ந்த தகவலை ஒருவன் சொல்கிறபொழுது அதை தன் சுயத்தை கொஞ்சம் ஓரம் தள்ளி விட்டு கேட்காதவன் ஒருபோதும் ஒன்றையும் அறியமாட்டான்.

சமகால இளைஞனுக்கு கல்லூரியில் படிப்பதும், அதுகொண்டு வேலை வாங்குவதுமே பெரிய சாதனைகள். அதைச் செய்துவிட்டாலே அவன் எவர்க்கும் அறிவுரைச் சொல்லத் தகுதியானவனாகவும் மாறிவிட்டதாய் நினைத்துக்கொள்கிறான். அவனுக்கு தேவைப்படும் மனிதர்கள் மட்டும் அவன் நட்பு வட்டத்தில் இருப்பார்கள். வேறு யாரோடும் உரையாட மாட்டான். அவன் நட்பு வட்டத்தில் இருப்பவர்களோடே உரையாடாமல் வட்டத்திற்குள் நெருங்கிய வட்டம் உருவாக்குவான்.

சமகால இளைஞன் ஒரு சாதாரண பகடியைக்கூட தாங்கும் சக்தியற்றவன். போடா பொச்சு என்று சொல்லியதற்காக என்னை பிளாக் செய்த நண்பர்கள் இருக்கிறார்கள். எந்தப் பெண்ணிடமும் அவளைப்பற்றி நாம் ஒரு சிறு பகடியைக்கூட சொல்லிவிடமுடியாது. ஆனால் அதே பெண்ணிடம் வேறொரு பெண்ணைப் பற்றிக் கிண்டலடிக்க முடியும். சுய அழிப்பை சிறு அளவில்கூட சமகால இளைஞன் அனுமதிப்பதில்லை. ஆனால் நாம் சுய பகடி செய்தால் விழுந்து விழுந்து சிரிப்பான். இதையெல்லாம் விட்டுவிடலாம் ஆனால் காதலிக்கும் பெண் அல்லது ஆணிடமே வெளிப்படையாக உரையாட வக்கற்ற தலைமுறைதானே நாம் என்பதுதான் கொஞ்சம் வெட்கக்கேடாக இருக்கிறது.

காதலர்களுக்கான அதிகபட்ச உரையாடலே 'சாப்டாச்சா,என்ன சாப்ட' என்பதுதான். அறிவிலிகளாய் இருக்கிறீர்கள் என்று உரக்கச் சொல்லும்போது ஐடி கம்பெனில வேலை வாங்கிருக்கேன் என்று எதிர்வினை செய்வோருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.