செப்டம்பர் 23, 2016

ஷார்ட் பிலிமும் சமகால இளைஞர்களும்


(முன்குறிப்பு: நல்ல கற்பனையும், சிந்தனையும் உள்ள படைப்பாளிகளைக் குறிப்பிடுவதல்ல)

குறும்படங்கள் எடுக்கிற மோகம் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டிருக்கிற  பாராட்டப்படவேண்டிய முன்னெடுப்புகளில் ஒன்று. கார்த்திக் சுப்புராஜ் போன்ற மகத்தான கலைஞர்கள் தங்கள் வெள்ளித்திரைப் பயணத்தை தொடங்க மிகமுக்கியக் காரணமாக குறும்படங்கள் அமைந்ததை மறுக்க இயலாது. ஒரு கல்லூரிக்கு சென்றுபார்த்தால் குறைந்தபட்சம் வகுப்பிற்கு ஒருவராவது குறும்படம் எடுக்கும் ஆசையோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் ஆசையை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? ஒரு படைப்பைக் கொண்டுவர நல்ல கற்பனையும் சிந்தனையும் தேவை. ஆனால் அதற்கான சிறுமுயற்சிகூட எடுக்காமல் ஏற்கனவே தமிழ்ச்சூழலில் இருக்கிற கமர்சியல் குப்பைகளில் இருந்து எதையாவது ஒன்றைப் பொறுக்கி அதில் தன் பெயரையும்போட்டு நானும் குறும்படம் எடுத்துவிட்டேன் என்று பத்தோடு பதினொன்றாக பதிவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல நண்பர்கள் குறும்படம் என்று எதையாவது எடுத்து வைத்துவிடுகிறார்கள். நானும் நம் நண்பன் எடுத்த படமா, அவன் சிந்தனை எப்படி இருக்கிறது என்று படத்தைப் பார்த்தால்  குப்பையை எடுத்து நம் வாயில் திணிக்கிறார்கள். சமீபத்தில் இப்படித்தான் இரண்டு குறும்படங்களைப் பார்த்தேன்.

முதலாவது அப்பாவைப் பற்றி நண்பன் ஒருவன் எடுத்திருக்கும் குறும்படம். என்ன படம் எடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டே இருக்கும் கதை நாயகன் முன்னால் இறந்துபோன அப்பா தோன்றுகிறார். ஏன்பா எங்கள விட்டுப் போயிட்டீங்க? உங்க உடம்பையும் நீங்க கொஞ்சம் பாத்துருக்கலாம் என்று கதாநாயகன் சொல்ல குடும்பத்துக்காகவே வாழறவர்தான் அப்பா என்று அப்பாவே சொல்ல படம் முடிந்துவிடுகிறது. அன்புள்ள நண்பா, தெரியாமல் கேட்கிறேன் இது ஒரு படைப்பா? அப்பா என்கிற உறவுமுறையை ஆண்டாண்டுகாலமாக புனிதப்படுத்தி ஆயிரம் படம் எடுத்துவிட்டோம். நீ படைப்பு என்ற பெயரில் ஒரு மிகைஉணர்ச்சியைக் காட்டிக்கொண்டிருக்கிறாய். இதில் என்ன பெரிய சிந்தனையை நீ சொல்லிவிட்டாய்? நல்ல ஒளிப்பதிவைத் தவிர என்ன இருக்கிறது உன் படத்தில்? வழக்கம்போல ஒரு கமர்சியல் குப்பை. இதற்கு உன் நண்பர்கள் வந்து சூப்பர் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். உண்மையான விமர்சனம் இதுதான் என்பதைப் புரிந்துகொள்.

இரண்டாவது டிப்ஸ் கொடுப்பதைப் பற்றிய படம். முதல் படத்தையாவது ஒளிப்பதிவிற்காக பாராட்டலாம், இதில் அதுவும் இல்லை. ஒரு பாஸ்ட்புட் கடையில் வேலை செய்யும் ஒருவன் எல்லாரிடமும் டிப்ஸ் வாங்கிக்கொண்டே இருக்கிறான். ஒருநாள் ஒருவரிடம் டிப்ஸ் கேட்கும்போது உடம்ப நல்லாதான இருக்கு , உழைச்சு சாப்பிடு என்று சொல்கிறார். அதைக்கேட்டு அவன் திருந்தி விடுகிறான். இதுதான் கதை. தெரியாமல் கேட்கிறேன் நண்பா, ஒரு எட்டாவது படிக்கும் குழந்தையிடம்போய் இதைக் காட்டினாலே இதெல்லாம் ஒரு படமா என்று கேட்காதா? எப்படி இதையெல்லாம் ஒரு படைப்பு என்று வெட்கமில்லாமல் எடுக்கிறாய்? பவர்ஸ்டார் சீனிவாசன் சீரியஸாகப் பேசினால்கூட நமக்கு சிரிப்புதானே வரும்? அப்படித்தான் இருந்தது உன் படம்.

அன்பு குறும்பட இயக்குநர்களே, உங்கள்மேல் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக் கோபமும், வெறுப்பும் இல்லை. ஏன் எங்களிடம் மொண்ணையான படைப்பைத் திணிக்கிறீர்கள்? கொஞ்சாவது சுய சிந்தனையோடு எடுங்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். உன்னை யாரு பாக்க சொன்னா என்று வாதம் செய்யாதீர்கள். பொதுவெளியில் வைக்கப்படும் படைப்புகள் பற்றி கருத்து சொல்ல யாருக்கும் உரிமை உண்டு.விமர்சனங்களைத் தாங்கும் பக்குவம் உண்டென்றால் படம் எடுங்கள் இல்லையேல் முழுதும் போர்த்திக்கொண்டு வெளிப்படாவண்ணம் தூங்குங்கள்.