செப்டம்பர் 23, 2016

வாழ்ந்துவிட்டுப் போதல்

மிகவும் மோசமான வாழ்வியல் சூழலில் நம்பிக்கை தரக்கூடிய சொற்கள் நாம் யாரென்றே அறியாத சிலரிடமிருந்துதான் வருகின்றன. நமக்கான வாழ்த்துகள் நமக்கு யாரென்றே தெரியாதவர்களிடமிருந்துதான் மனதார வருகின்றன. நம்மை அறிந்தவர்கள் மனம் வெந்து வெறுமனே வாழ்த்துகிறார்கள். நாம் இறந்துவிட்டோம் என்று அறிந்தால்கூட எந்த உணர்வும் இன்றி ஜடங்கள்போல் RIP என்று போட்டுவிட்டுப்போகிறவர்கள் நம்மை அறிந்தவர்கள். நாம் யாரென்றே அறியாதவர்களே நமக்காய் ஒரு சிறுதுளிக் கண்ணீரை சிந்துகிறார்கள். உண்மையில் நாம் அறியாத அவர்கள்தான் நம்மை அறிந்தவர்கள். ஏன் அவர்களைத் தவறவிட்டு விடுகிறோம்? நம்மை அறிந்தவர்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களெல்லாம் நம்மை அறிந்தவர்களல்ல என்று நாம் உணரும்போது நம்மை உண்மையிலேயே அறிந்தவர்களை விட்டு நாம் வெகுதூரம் வந்து விடுகிறோம். நாம் வாழ்நாள் முழுக்க நம்மை அறிந்தவர்கள் என்று கருதுவோரின் அன்பிற்காய் ஏங்கிக்கொண்டிருக்கிறோம் , உண்மையில் நம்மை அறிந்தவர்கள் நம் அன்பிக்காய் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். பணக்காரக் குழந்தை ஒன்று அழகான பொம்மையோடு விளையாடிக்கொண்டு இருந்தாலும் மணலில் விளையாடும் குழந்தையைப் பார்த்து ஏக்கப்படுமே அப்படிப்பட்ட ஏக்கம் அது. மணலில் விளையாடும் குழந்தை மாடியில் இருக்கும் குழந்தையின் விளையாட்டு பொம்மையைப் பார்த்து ஏக்கம்கொள்ளுமே அப்படிப்பட்ட ஏக்கம் அது.

நாம் அறியாத ஆனால் நம்மை அறிந்தவர்களை நம்மோடு இணைத்துக்கொண்டாலும் இந்த ஏக்கம் தீர்ந்துவிடாது. வெகு சீக்கிரத்தில் நம்மை அறியாதவர்களென்று கருதி நாம் இணைத்தோரும் நம்மை அறிந்தவர்களென்று நாம் கருதுவோர்க் கூட்டத்தில் சேர்ந்துவிடுவார்கள். மணல் கிடைத்த மாடிவீட்டுக் குழந்தைக்கும் பொம்மை கிடைத்த ஏழைக் குழந்தைக்கும் சீக்கிரத்தில் சலித்துவிடுதல்போல. இதற்கு இதுதான் தீர்வென்று வரையறுத்துவிடமுடியாது. வாழ்வென்பதே பெரும் தேடல் என்பதால் தேடித் தேடி வாழ்வதைத்தான் நாம் செய்யமுடியும். அது சரியா, தவறா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும். அனுமானத்தில் இதை முன்பே சொல்லிவிட முடியாது அனுபவங்களின் மூலமும் அறிந்துகொள்ள முடியாது. இவர்களோடு வாழ்ந்தோம், இப்படியாக வாழ்ந்தோம் இது சரியா, தவறா என்று உறுதியாக ஒன்றைச் சுட்ட முடியாது. வாழ்க்கையை வாழ்வதை மட்டுமே நாம் செய்ய முடியும் அது சரியானாலும் தவறானாலும்.