செப்டம்பர் 23, 2016

அப்துல்கலாமின் நினைவில்

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஈரோடு புத்தகக் கண்காட்சியில் கலாம் அவர்கள் உரையாற்றும்போது கொஞ்சம் தொலைவிலிருந்து பார்த்தேன். அன்று ஈரோடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு பெருங்கூட்டம். அவ்வளவும் மாணவர்கள் கூட்டம். மாணவர் கூட்டத்தை இப்படி அரவணைத்துக்கொண்ட இன்னொருவர் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவ்வளவு அன்பாக அவர் உறுதிமொழி சொல்ல ஒவ்வொருவரும் அதனைத் திருப்பிச் சொல்ல என அந்த மாணவர் கூட்டம் அவரைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டிருந்தது.

பெரியவர்களின் மனதில் மாற்றம் ஏற்படுத்திப் பயனில்லை என்பதை அவர் இயல்பாக அறிந்திருந்தபடிக்கு அவர் தன் ஆசைகளை குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் வளர்த்தார். தன் வாழ்நாள் முழுக்க மாணவர்கள் மத்தியிலே உரையாற்றி அவர் செய்திருக்கிற பணிகள் மகத்தானவை. ஆனால் அவரின் உரைகள் பெரும்பாலும் ஒரு தன்னம்பிக்கை நூல் எழுதும் எழுத்தாளரின் பேச்சை ஒத்தவை. என்னைப் பொறுத்தவரை அவர் பெரும் அறிவுஜீவியல்ல ஆனால் தான் சார்ந்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர். பணப்பசிக்காகவும், பெருமைக்காகவும் தன் குழந்தைகளை கூறுபோடும் பெற்றோரின் கனவுகளை செயல்படுத்த ஒரு ஊக்கக்கருவியாக அவர்களால் கலாம் எடுத்துக்கொள்ளப்பட்டார். பெரும்பான்மை பெற்றோர் கலாமை நோக்கி தங்கள் குழந்தைகளை அனுப்ப அவரின் தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சு மிக முக்கியக் காரணம். கலாம் அவர்களிடம் தன்னம்பிக்கையை விதறி எறிந்தார், கனவு காணுங்கள் என்று சொன்னார். அவர் சொன்ன கருத்துகள் மிக முக்கியமானவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மனிதர்கள் அதில் சுயநலம் சார்ந்த கருத்துகளையே எடுத்துக்கொண்டார்கள் என்பதை பார்க்கவேண்டியிருக்கிறது. செடி நடுதலையும், படிப்பறிவில்லாதோருக்கு எழுத்தறிவித்தலையும் அவர் வாழ்நாள் முழுக்க சொன்னார். ஆனால் அதை யார் செயல்படுத்தினார்?

அப்துல்கலாம் வாழ்வியல் வெற்றியை துறைசார் வெற்றியாக கட்டமைக்கப் பார்த்தார். வாழ்வியலின் மோசமான கணங்களை அவர் இளைஞர்களிடம்கூட பேசிச் செல்லவில்லை. ஒரு கிறிஸ்துவ மதபோதகர்போல அவர் பிரச்சாரம் செய்தார். அவை புறக்கணிக்கப்படவேண்டியவை அல்ல .ஆனால் வாழ்வின் ஒரு பக்கத்தை மட்டும் காட்டுகிற , வெற்றிக்கான வழிகளைத் தூவி எறிகிற பேச்சு , தோல்விகளின் துயரத்தை, ஏமாற்றத்தை, புறக்கணிப்புகளின் வலியை அது சொல்லிசெல்வதல்ல.

வாழ்நாள் முழுக்க அவர் இளைஞர்களை அரசியலுக்கு வர சொன்னார். ஆனால் அவர் அரசியலில் ஈடுபடவே இல்லை. அவர் ஒரு அறிவுரையாளராக இருந்தார். ஆனால் செயலில் இறங்கி இது இன்னது, இதை இப்படி செய்யவேண்டும், என்னோடு வா என்று நம்மை அழைக்கும் முன்னோடியாக அவர் இல்லை. அரசியல் சதுரங்கத்தில் அவரே வெட்டுப்பட்டுப்போனார். இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக அவர் ஆக முயற்சி செய்தபோது அவர் அரசியல் கட்சிகளிடம் அடிபணிந்துபோனார். அவர் ஆசைகள் உள்ள ஒரு மிகச்சாதாரணமான மனிதராக மாறிப்போனார். குடியரசுத்தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு ஒரு கடிதம், ஆகாவிட்டால் இன்னொரு கடிதம் என இருமனநிலையில் சிக்கி தவித்தார்.ஆனால் அவர் ஆரம்பம்முதலே அத்தனைக்கும் ஆசைப்பட்ட ஒரு சாதாரண மனிதர்தான் ,நாம் அவர்மேல் புனிதர் பிம்பத்தை ஏற்றிவைத்தோம். அவர் புறக்கணிக்கப்பட முடியாதவர், அவரின் கருத்துகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே ஆனால் அவர் கடந்துவரப்படவேண்டியவர். கடந்துவருதலின்மூலமே நாம் பிறவற்றைக் கண்டுகொள்வோம் அதுவே வாழ்வியல் வெற்றி என்னவென்று நமக்கு காட்டிச்செல்லும்.