செப்டம்பர் 23, 2016

'தலை'முறை இடைவெளி

ஒரு வாரத்திற்கு முன்பு தமிழ் இந்துவில் இரட்டைஜடை போட்டுவருமாறு பள்ளியில் கட்டாயப்படுத்துவதாக ஒரு மாணவி , குழந்தைகள் உரிமை ஆணையத்திற்கு கடிதம் எழுத அவ்வாறெல்லாம் கட்டாயப்படுத்த பள்ளிக்கு உரிமை இல்லை என குழந்தைகள் ஆணையம் தெரிவித்துள்ள செய்தி வந்துள்ளது. ஆனால் இந்தப் பிரச்சனை குழந்தைகளோடு முடிந்துவிடுவதல்ல. ஒரு இளம்பெண்கூட நம் சூழலில் அவளுக்கு விருப்பப்பட்டாற்போல் சிகை அலங்காரம் செய்துகொள்ள முடிவதில்லை. நான் கல்லூரியில் படிக்கும்பொழுது எனக்கு மிகவும் பிடித்த, அழகான பெண்ணொருத்தி தனது சிகை அலங்காரத்தை மாற்றி இன்னும் கொஞ்சம் அழகானாள். ஆனால் அந்த ஸ்டைல் ஒரு வாரம்தான் நீடித்தது மறுபடி பழைய மாதிரியே மாறிவிட்டாள். எனக்கு பயங்கர ஆச்சரியம். அதைப் பற்றி இன்னொரு தோழியிடம் கேட்டபோது எங்களின் கல்லூரி பெண் ஆசிரியர் அவளை ஒழுக்கம் சார்ந்த வார்த்தைகளால் திட்டியதாகவும் உடனடியாக சிகை அலங்காரத்தை மாற்றச் சொன்னதாகவும் அறிந்தேன். உண்மையிலேயே இந்த மயிருக்கு அவ்வளவு ஒழுக்கம் தேவையா என்று பார்த்தால் அதன் பின்னிருக்கும் உளவியல் அதுவல்ல.

1. அவளை விட இன்னொருத்தி அழகாய் இருப்பதால் ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே ஏற்படும் பொறாமை. ( பொறாமைப்படுகிற பெண்ணுக்கு அதிகாரபலம் இருக்கிற பட்சத்தில் மேற்குறிப்பிட்ட சம்பவம்போல் அழகை எளிதாக அழித்து மகிழ்ச்சி காணவும் முடிகிறது)
2. ஆண்களைக் கவர்வதில் தன்னை இவள் மிஞ்சிவிடுவாளோ என்ற கவலை.

ஆக இந்த உளவியலுக்குத்தான் ஒழுக்கச் சாயம் பூசிப் பேச வேண்டியிருக்கிறது. ஆனால் இதில் இன்னொரு கோணம் என்னவென்றால் ஒரு இளம்பெண்ணின் அம்மா கொஞ்சம் தன்னை அழகாக்கிக்கொண்டால் அந்த இளம்பெண்ணாலாயே பொறுத்துக்கொள்ள முடியாது என்பதுதான். அதற்கு மேற்குறிப்பிட்ட இரண்டு உளவியலோடு மூன்றாவதாக ஒன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3 . சமூகம் என்ன சொல்லும்? அந்த நாலு விதமாப் பேசற நாலு பேருக்கு என்ன பதில் சொல்வது? என்னடி உங்கொம்மா அறுபது வயசுல மினுக்கிட்டு திரியறா என்று கேட்கும் தோழிக்கு என்ன சொல்வது என்பதுதான்.

இந்தப் பிரச்சனைகள் ஆண்களுக்கு இல்லையென்று முழுமையாக மறுக்க முடியாது. ஒழுக்கமா முடி வெட்டத் தெரியாதா என்று என்னைத் திட்டிய ஆண் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டில் எங்கேயோ இருக்கிற முடி எல்லாம் ஸ்டைல் செய்கிறார்கள் நம்மால் தலையில் இருக்கிற முடியையே ஸ்டைல் செய்ய முடியவில்லையே எனும்போதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கிறது.