செப்டம்பர் 23, 2016

தண்ணிப் பிரச்சன

இனவெறி என்ற உணர்வை சராசரியான மனிதர்களின் சாதாரண இயல்பாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். சாதிக்கு ஒப்பாகவே இது தொடர்ந்து தூண்டப்படுவது நாம் அறியாததல்ல. கன்னட மொழி பேசும் மக்களில் மிகச்சராசரியான மனிதர்களின் மனம் சில மனப்பிறழ்வு உடையோரால் தூண்டப்படுவதால் நிகழ்வது இது. இங்கே இருக்கும் சராசரி மனிதர்களால் அதற்கேற்றாப்போல் ஒரு எதிர்வினை அதற்கு வைக்கப்படுகிறது.  இதனை ஒட்டி கன்னடன்போல் நீயும் மாறு என்று தமிழனுக்கு ஒரு போதனையும் கிடைக்கிறது. ஆனால் இனவெறி என்பதை யாராலும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை. அதற்காக கன்னடர்களை வெறுக்க வேண்டுமென்று சொல்வது முட்டாள்தனம். மாரியப்பன் பாராலிம்பிக்கில் வென்றதை சேலத்துக்காரன் என்று கொண்டாடும்போது பொங்கி வரும் உணர்வு என்ன?  தமிழன் என்ற உணர்வு சேலத்தான் என்று குறுகிப்போய்விடவில்லையா? சராசரி மனிதர்களின் இந்த அகங்காரம் ,அதிகாரத்திற்கு முன்னால் சிறு தூசி என்பதுதான் உண்மை. கர்நாடக சராசரி மனிதர்களுக்கு ஆளும் வர்க்க ஆதரவிருப்பதால் அதிகாரம் தற்போது வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் இலங்கை இனப்பிரச்சினையில் பெரும் மாணவர் போராட்டம் வெடித்தது ஆனால் அது ஏன் ஆளும் அதிமுகவிற்கு எதிராக ஒருபோதும் வெடிக்கவில்லை? தமிழகமாக இருந்தாலும், கன்னடமாக இருந்தாலும் சராசரி மனிதர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாத பாவிகள். அதிகாரங்கள் ஒன்றிணைந்து ஆடும் ஆட்டத்தில் அவர்கள் பகடைக்காய். நான் விழுந்து விழுந்து சிரிக்கும் விஷயம் என்னவென்றால் இதைவைத்து கன்னட சினிமாப் பைத்தியங்களும், தமிழ் சினிமாப் பைத்தியங்களும் செய்துகொண்டிருக்கிற காமெடிகளைப் பார்த்துதான். கர்நாடகாகாரன் அராஜகம் கூட கொஞ்ச நாளில் முடிந்துவிடும் ஆனால் சினிமா லூசுகள் நம்மை என்றைக்கும் பீடித்திருக்கிற நோயாயிற்றே? அவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது?