செப்டம்பர் 23, 2016

ஒலிம்பிக்கால் நமக்கென்ன பயன்

பி.வி சிந்துவும், சாக்ஷியும் ஜெயித்ததை நாடே கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் சாய்னா நேவாலின் டிவிட்டர் பக்கத்தில் போய் ஒருவர் எங்களுக்கு சிந்து இருக்கா, இனிமே நீ வேண்டாம் என்கிற ரீதியில் டிவீட் செய்திருக்கிறார். அடுத்த ஒலிம்பிக்கில் சிந்து தோற்றால் அவரை விமர்சிக்கவும் தயங்க மாட்டோம். எப்படி இன்றைக்கு அபினவ் பிந்த்ராவை விமர்சிக்கிறார்களோ அப்படி. இதில் பாதிப்பேர் சிந்துவின் சாதியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலம் பாதிக்குமேல் மனநோயாளிகளின் கூடாரமாகத்தான் இருக்கிறது.

ஒலிம்பிக் என்பதையே நான் வெற்றுப்பெருமைகளுக்கான இடமாகத்தான் பார்க்கிறேன். எப்போதும் போரிடுதல் சாத்தியப்படாதபடிக்கு, நாடுகள் விளையாட்டு என்கிற பெயரில் தங்களில் பெரியவன் யார் என்கிறதை முடிவுசெய்து கொள்கிறார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுகிற ஒரு கிரிக்கெட் போட்டியை இரு நாடுகளுக்கிடையேயான யுத்தம்போல்தான் இரு நாட்டு ரசிகர்களும் கற்பிதம் செய்கிறார்கள். இந்தியா ஒலிம்பிக்கில் ஒரு மெடல் வாங்கவில்லையென்றால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. ஆனால் நிலவியல் சார்ந்து ஊட்டப்பட்டிருக்கிற நாட்டுவெறி என்கிற அகங்காரத்திற்கு ஒரு அடி விழுகிறபொழுது நமக்கு வலிக்கிறது. நம் வெற்றுப்பெருமைகள் உலக அரங்கில் தகர்ந்துபோகிற பொழுது ஏற்கனவே ஊட்டப்பட்டிருக்கிற நாட்டு வெறியால் அது தமக்கே ஏற்பட்ட அவமானமென்று ஒவ்வொருவரும் எண்ணுகிறபொழுது அதன் எதிர்வினையாக, தன் மேல் விழுந்த அடியை மறைக்க அரசாங்கத்தைக் குறைகூறும் படலம் துவங்குகிறது. உண்மையில் இவ்வளவு கர்வத்தோடு விளையாட்டு என்கிற ஒரு பொழுதுபோக்கை அணுகவேண்டிய தேவையில்லை.

உண்மையில் விளையாட்டு வீரர்கள் வென்றுவிட்டு வருவதால் நமக்கு ஒரு பயனும் இல்லை. அவர்கள் ஏதோ நாட்டுக்காக, மக்களுக்காக, சமூகத்திற்காக பெரும் தியாகம் செய்துவிட்டதாய் நினைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் அவர்களது சுய முன்னேற்றத்திற்காகதான் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் பதக்கத்தை , ஒரு நிறுவனத்தில் நன்றாக வேலை செய்பவனுக்கு கிடைக்கும் சம்பள உயர்வோடுதான் ஒப்பிட வேண்டியிருக்கிறது.

இங்கே கல்விக்கும், மருத்துவத்திற்கும் இன்னும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுதான் பெரும்பான்மை சமூகத்திற்கு உதவுவது. இவையெல்லாம் முடிந்தபின்புதான் விளையாட்டு. அதுவரை உலக அரங்கில் நம் அகங்காரம் அடிபட்டாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும். அது ஒரு நல்ல மனப்பயிற்சியும் கூட.