செப்டம்பர் 23, 2016

நமக்காகவும் கொஞ்சம் வாழ்தல்

ஒருநாள்கூத்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் தன் காதலியிடம் " தன் இலையில இருக்கறத திங்காம பக்கத்து இலையில இருக்கற பதார்த்தத்த வேடிக்கைப் பார்க்கிறவன் நானுனு உங்கப்பா சொன்னாரே ஆனா உண்மையில நான் என் இலையிலேயே ஒண்ணுமில்லாதவன்" என்று சொல்வார். நான் நெகிழ்ந்த இடம் இது. உண்மையில் இங்கே பிறப்பால் ஏழையாகிவிட்ட ஒருவனின் வாழ்வியல் என்ன? இருபத்து இரண்டு வயதுவரைப் படித்துவிட்டு தன்னையும், தன்னை சார்ந்தவர்களின் நிலையையும் ஸ்திரப்படுத்திக்கொள்ள காலை ஒன்பது முதல் இரவு ஒன்பது வரை உழைப்பது. முப்பத்தி ஐந்து வயதுவரை உழைத்துவிட்டு திரும்பிப் பார்க்கிறபொழுது இளமை இருக்காது. அப்புறம் என்ன செய்வது? மயிரைப் பிடுங்க வேண்டியதுதான். (பெரும்பாலான நண்பர்களுக்கு மயிர்கூட மிஞ்சாது என்பது வேறு விஷயம்)

அப்பா கஷ்டப்படறண்டா நீதான் குடும்பத்த காப்பாத்தணும் என்று சொல்லும் அப்பாக்களை எனக்கு 0.1 சதவீதம்கூட பிடிக்காது. நீங்கள் உங்களுக்கான வாழ்வியலில் செய்த தவறுகளால் நீங்கள் அடைந்த விளைவுகளை, உங்கள் குழந்தைகளாக பிறந்துவிட்டோம் என்கிற ஒற்றைக்காரணத்திற்காக வாழ்நாள் முழுக்க சுமந்துகொண்டு சாக வேண்டும் என்பது என்ன விதமான உளவியல் என்று புரியவில்லை. இன்னொரு வகையான அப்பன்கள் இருக்கிறார்கள். தன் பெண் வீட்டிற்கு சம்பாதித்துக்கொடுக்கிறாள் என்கிற ஒற்றைக்காரணத்திற்காக கடைசிவரை அவளுக்கு திருமணமே செய்துவைக்க மாட்டார்கள். அவளின் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் இதைப் பற்றிய புரிதலையோ அல்லது சந்தேகத்தையோ கூட மகனிடமோ அல்லது மகளிடமோ ஏற்படுத்திவிடாதபடிக்கு நம்மை உருவாக்கிவைக்க நம்மிடம்தான் கல்வி இருக்கிறதே.

பெற்றோரின்மீது புனித பிம்பத்தை ஏற்றிவைத்து அவர்கள் நம்மைப் பெற்றதற்கு நூறாண்டுகாலம் கால்கழுவ வேண்டும் என்பதுதான் நமது கல்விமுறை. இந்த கல்விமுறையிலிருந்து வருகிற ஒருவனை எளிதில் தங்களுக்கு தேவையான ஒரு இயந்திரமாக சமூகத்தாலும், உற்றார் உறவினராலும், பெற்றோராலும் மாற்றிக்கொள்ள முடிகிறது. அவனும் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தன் வாழ்வையே இழந்துவிட்டு நிற்பான். அம்மா, அப்பா என்கிற உறவுமுறைகள் நம்மோடு இங்கே வாழ வந்தவர்கள் என்ற புரிதலும் நம்மை உருவாக்கியவர்கள் என்கிற மரியாதையும் அவர்களால் முடியாத வயதில் அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்ற உணர்வு எனக்குமுண்டு .அவைகள் மிகவும் முக்கியமானவையும் கூட. ஆனால் நீ எனக்காகவே உழைக்க வேண்டும் என்பதும், உன் வாழ்வியலைப் பற்றி சிந்திக்கக்கவேகூடாது என்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. இங்கே ஒவ்வொருவருக்கும் சமூகத்திற்கு பாதிப்பின்றி தனக்கு பிடித்த வகையில் வாழ உரிமை இருக்கிறது. தனிப்பட்ட இருப்பும், வாழ்வும் மிக முக்கியம். இருத்தலியலின் (existensialism) மிக முக்கிய கொள்கைகளில் இதுவும் ஒன்று. இந்த உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை அது அப்பாவாக இருந்தாலும், ஆயாவாக இருந்தாலும்.
(உண்மையில் பெற்றோருக்கு அறிவுரை சொல்லும் சூழலில் நாம் இல்லை, காலம் கடந்துவிட்டது என்று கருதினாலும் இனிவரும் தலைமுறையாவது அவர்களுக்கான வாழ்வியலை அவர்கள் வழியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதே என் ஆசை)