செப்டம்பர் 23, 2016

அடுத்து வருபவனாவது வாழட்டுமே

இன்றைக்கு இளம்பெண்கள் பெரும்பாலும் இணையத்தில்தான் புழங்குகிறார்கள். அவர்களுக்கு காதலனுடன் பேசுவதற்கு, ஒரு ஆண் நண்பனிடம் பேசுவதற்கு அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதாரம் தங்கள் வாழ்க்கையை புதிதாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளை அளிக்கிறது. புது விதமான ஆடைகளை, புதிய அலங்காரங்களை அணிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு முந்திய தலைமுறை பெண்ணிற்கு , இன்றைக்கு தாயாக இருக்கும் பெண்ணிற்கு இவை எட்டாக்கனியாக இருந்தது. ஒரு இளம் பெண்ணிற்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஒரு தாயை எரிச்சலடைய செய்கிறது, பொறாமை கொள்ள செய்கிறது. இதுதான் இன்றைக்கு ஒரு பெரும் தலைமுறை இடைவெளியாக, தாய்க்கும் மகளுக்குமான பெரும் சண்டையாக குடும்பங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியமாக நாம் எதிர்நோக்க வேண்டியது இந்த இளம் பெண்கள் நாளை தாய் ஆகிறபொழுது தங்கள் மகள்களை இதே விஷயங்களில் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதுதான். ஆண்கள் ஆரம்பம் முதலே குடும்ப அமைப்புகளால் பெண்கள் அளவிற்கு கட்டுப்படுத்தப்படாததால் பெண்களைப் போன்ற ஒரு கட்டுடைப்பை செய்ய வேண்டிய தேவை ஆண்களுக்கு ஏற்படவில்லை.
குழந்தை வளர்ப்பில் தோல்வியை தாங்கிக் கொள்ளக் கூடிய மனநிலையை பெற்றோர்கள் ஏற்படுத்த  வேண்டியது மிக முக்கிய தேவை. குழந்தை விரும்புகிற அத்தனை பொருட்களையும் வாங்கிக் கொடுக்காமல் சிலவற்றையாவது மறுப்பதன் மூலம் மட்டுமே தோல்வியின் வலியை அந்த குழந்தையால் உணர்ந்துகொள்ள முடியும். அது பெற்றோர்களின் மீது கோபமாக அப்போதைக்கு வெளிப்பட்டாலும் வாழ்வில் மறுப்பின் வலியை அவனால்,அவளால் அப்போதுதான் பழகிக்கொள்ள முடியும். இல்லையென்றால் வாழ்வின் பெரும் தோல்விகள் அவனை மனதளவில் சிதைத்துவிடும்.
இன்றைக்கு பெற்றோர்கள் , இளைஞர்களைக் கூட வளர்த்திக் கொண்டிருக்கிறார்கள். வெறும் கைப்பாவையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். முடிவெடுக்க வக்கற்ற, தோல்வியை தாங்க இயலாத, அரசியல் தெரியாத,சமூகப் பொறுப்பற்ற, வெறும் சினிமாவும்,கிரிக்கெட்டும் தெரிந்த ஜடங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வியலை அறியாத, மன அழுத்தம் நிறைந்த, அடிமை சமூகத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார மேம்பாடே வாழ்வியல் என்று வேறு எதுவும் அறியாத, எதற்கும் திராணியற்ற இளைஞர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பெரிய ஆபத்து. நாம் வேலை செய்யும் அடிமைகளாய் இருக்கிறோம் ஆனால் வாழ்வது எப்படி என்பதே நமக்கு தெரிவதில்லை. நாம் யாரையோ பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். வாழ்வில் பின்பற்றுதல் தேவை அற்றது. வாழ்வியலின் வழி வாழ்வை நாமே அடைந்துகொள்ள வேண்டும். வாழ்வை பயின்று கொள்ள வேண்டும். நமக்கான வாழ்வியல் முடிவுகளை நாமே எடுக்க வேண்டும். ஆலோசனைகளும்,அறிவுரைகளும் தேவையானதே ஆனால் இன்னொருவரின் ஆதிக்கம் தேவை அற்றது, அது நம் பெற்றோராக இருந்தாலும். நம் வாழ்வை வாழவே இங்கு வந்தோம் நம் பெற்றோரின் அடைய முடியா வாழ்வை நாம் அடைந்து காட்ட அல்ல. இதையே நம் அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். மீண்டும் இப்படி ஒரு மொண்ணைத் தலைமுறையை நாம் உருவாக்கி விடக் கூடாது.